[X] Close

ரஜினி 'சீக்கிரம்' முடிவை அறிவிக்காவிட்டால்..? - ஒரு விரைவுப் பார்வை

சிறப்புக் களம்,தமிழ்நாடு,தேர்தல் களம்

senior-journalist-speech-about-rajini-political-statement

'அரசியலுக்கு வருவது உறுதி, இது காலத்தின் கட்டாயம்' - நீண்ட கால இழுப்பறிக்கு பின் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி ரஜினி உதிர்த்த வாக்கியம் இது. அதன்பின்னர் ரசிகர்கள், தொண்டர்களாக மாறத்தொடங்கினர். ஆனாலும், கட்சி ஆரம்பிக்கப்படவில்லை. மாறி மாறி ஆலோசனைக் கூட்டங்கள் மட்டுமே நடந்த வண்ணம் இருந்தன.


Advertisement

'ஆன்மிக அரசியல்' என ரஜினி வார்த்தையை விட்டதும் பாஜக எப்படியாவது கொத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை வலுவாக்கி தற்போது வரை போராடி வருகிறது. ஆனால், ரஜினி சிக்காமல், கழுவும் மீனில் நழுவும் மீன்போல தப்பித்துக்கொண்டே இருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தல் வரும்போதுகூட 'சட்டமன்றத் தேர்தல்தான் நமது இலக்கு' என ரசிகர்களை கட்டுப்படுத்தினார்.

இதையடுத்து, தற்போது 3 ஆண்டு காலம் கடந்து சட்டமன்றத் தேர்தலும் நெருங்கிவிட்டது. ஆனால், நம்மை அரசியல் தலைவராக மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? ரசிகர்கள் தொண்டர்களாக முற்றிலும் மாறிவிட்டார்களா? தமக்கான களம் இன்னும் இருக்கிறாதா என பல்வேறு கேள்விகள் குறித்து ரஜினிக்கு சந்தேகம் இருப்பதாகவே தெரிகிறது. அதனாலேயே ரஜினி கட்சி ஆரம்பிப்பதில் காலம் தாழ்த்துவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


Advertisement

image

இதனிடையே, அரசு நிகழ்ச்சி என்ற பெயரில் தமிழகம் வந்த பாஜக அமைச்சர் அமித் ஷா, அதிமுகவுடனான கூட்டணியை வலுப்படுத்திவிட்டுச் சென்றார். குறிப்பாக, அந்தக் கூட்டணி அறிவிப்பை அதிமுக தலைவர்களையே கூறவைத்தார். மேலும், அமித் ஷாவை ரஜினிகாந்த் சந்திப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவரை சந்திக்க வந்தது ரஜினி இல்லை; குருமூர்த்தி. ரஜினியின் தூதுவராகவே குருமூர்த்தி வந்திருப்பார் என்றே பார்க்கப்பட்டது. அதற்கு முன்புதான் குருமூர்த்தி ரஜினியிடம் நீண்ட நேர ஆலோசனை நடத்தினார். எனவே, அமித் ஷாவிடம் ரஜினியின் நிலைப்பாட்டை குருமூர்த்தி எடுத்துரைத்திருப்பார் என்றே கூறப்படுகிறது.

image


Advertisement

இந்தப் பின்னணியில்தான், கட்சி தொடங்குவது குறித்து மீண்டும் பரபரப்பைக் கிளப்பிய நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ராகவேந்திரா மண்டபத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது, கட்சி தொடங்கினால் சாதக - பாதககங்கள் குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், சென்னை போயஸ்கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் "மாவட்ட செயலாளர்களுடன் சந்திப்பு நடந்தது. அவர்களுடைய கருத்தை சொன்னார்கள். நானும் எனது பார்வையை சொன்னேன். நீங்கள் எந்த முடிவை எடுத்தாலும் நாங்கள் உங்களுடன் இருப்போம் எனத் தெரிவித்தார்கள். நான் என்னுடைய முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நான் வெளியிடுவேன்" எனத் தெரிவித்தார்.

image

இதுகுறித்து மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன் கூறுகையில், "இதில் குழப்பங்கள் உள்ளது. ஏற்கெனவே அரசியலுக்கு வருவேன் என முடிவு எடுத்துவிட்டார். கட்சி ஆரம்பிப்பது குறித்துதான் முடிவு எடுக்காமல் இருந்தார். ரசிகர்களை பொருத்தவரை கட்சி எப்போது ஆரம்பிக்கலாம் என்பதைதான் எதிர்ப்பார்க்கிறார்கள். நிலைப்பாட்டை அறிவிப்பது குறித்து அவர்கள் எதிர்ப்பார்க்கவில்லை. ரசிகர்களுக்கு நம்பிக்கையில்லாத தன்மையை உருவாக்குவது போன்ற தோற்றத்தையே ரஜினி பேட்டி காண்பிக்கிறது.

ரஜினி எவ்வளவு சீக்கிரம் கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுகிறாரோ அவ்வளவு சீக்கிரம் ரசிகர்களிடையே இருக்கும் சலிப்பு போகும். இன்னும் காலம் கடந்தால் ஒருவேளை கட்சி தொடங்கினால், அந்த சலிப்பு தேர்தல் பணிகளில் பாதிக்கக்கூடும். அதற்கான வாய்ப்பை ரஜினி கொடுக்க மாட்டார் என நினைக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

image

இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன் கூறுகையில், "இது மூன்று வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கும் நாடகமாகத்தான் நான் பார்க்கிறேன். அன்று அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கலாம். ஆனால் இப்போது காலம் கடந்துவிட்டது. இப்போது அவர் வேண்டாம் என்று நினைத்தாலும் அவருக்கு பாஜகவின் அழுத்தம் இருக்கிறது. அதைத்தாண்டி ரஜினியின் மனதிலும் சில சந்தேகங்கள் இருக்கிறது. அதனால்தான் அவர் தெளிவான முடிவை கூறமாட்டேங்குறார் என நான் நினைக்கிறேன். அவர் அரசியலுக்கு வரவேண்டாம் என முடிவெடுத்திருக்கலாம். அதை இப்போது அறிவிக்க வேண்டாம் என நினைத்திருக்கலாம்" எனத் தெரிவித்தார்.


Advertisement

Advertisement
[X] Close