Published : 08,Nov 2020 09:41 AM

டீமானிட்டைசேஷன்... ஒரேயொரு நன்மை விளைந்தது, ஆனால்... - நவ.8 நினைவலை!

Demonitization-only-one-benefit--but-Nov-8-Memory

2020-ம் ஆண்டு 'குவாரன்டைன்' (Quarantine) என்னும் வார்த்தையை நாம் கற்றுக்கொண்டோம். அதேபோல 2016-ம் ஆண்டு நாம் கற்றுக்கொண்ட வார்த்தை 'டீமானிட்டைசேஷன்' (Demonitization). சரியாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (நவ.8) வார்த்தையை நாம் கற்றுக்கொண்டோம். 

image


2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவு எட்டு மணிக்கு இந்த பண மதிப்பிழப்பு அறிவிப்பு வெளியானது. அப்போது, நாளிதழ்களின் முதல் பக்கத்தை அனைத்து பத்திரிகைகளுமே முடிவு செய்துவிட்டன. பிரதமரின் அறிவிப்புக்கு பிறகு அடுத்த நாள் தயார் செய்யவேண்டிய பக்கங்கள் மாற்றி அமைக்கப்பட்டது நன்றாக நினைவு இருக்கிறது. அதைவிட அடுத்த இரு மாதங்களுக்கு அனைத்து செய்திகளும் டீமானிட்டைசேஷன் சார்ந்தே இருந்தது. 


காரணங்களும் விளைவும்:

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு நான்கு முக்கியக் காரணங்கள் சொல்லப்பட்டன. கறுப்புப் பணத்தை ஒழிப்பது, ஊழலைத் தடுப்பது, போலி கரன்ஸியை புழக்கத்தில் இருந்து நீக்குவது, தீவிரவாதிகளுக்கு செல்லும் பணத்தை தடுப்பது உள்ளிட்டவை காரணங்களாக சொல்லப்பட்டன. இதனால் 500 மற்றும் 1,000 ரூபாயை புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டன. அப்போது, புழக்கத்தில் இருந்து ரூபாய் நோட்டுகளில் இது 86 சதவீதமாக இருந்தது. இந்த ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.15.41 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், ரூ.15.31 லட்சம் கோடி பழைய ரூபாய் நோட்டுகள் மீண்டும் வங்கிகளுக்கு வந்தன. 99 சதவீதம் மீண்டும் திரும்பி வந்துவிட்டதால் கறுப்புப் பணத்தை சந்தையில் இல்லை என எடுத்துக்கொள்ள முடியாது.

 

image


என்ன காரணத்துக்காக பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறியதாக தெரியவில்லை. மாறாக, பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட அடுத்த சில மாதங்களில் பொருளாதாரம் கடுமையான நெருக்கடிக்கு உள்ளானது. பணம் இல்லாதாதால் சாதாரண மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளானார்கள். பயணம், சிறுதொழில், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் என பாதிப்புகள் உருவாகின.

பணமதிப்பு நீக்கம், சரியாக அமல்படுத்தப்படாத சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மற்றும் கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் காரணமாக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். மேலும், பலரின் வாழ்வாதாரமும் வேலையும் இவற்றால் பறிபோகி இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.


பணமதிப்பு நீக்கத்தால் நடந்த முக்கிய சாதகமான மாற்றம் என்றால், அது டிஜிட்டல் பேமென்ட் பரிவர்த்தனை குறித்த பயம் குறைந்திருப்பதுதான். முன்பெல்லாம் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும் என்பதால், டிஜிட்டல் பரிவர்த்தனையில் மக்கள் ஆர்வம் காண்பிக்கவில்லை. ஆனால் பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு வேறு வழியில்லாததால் டிஜிட்டல் பரிவர்த்தனை கணிசமாக உயர்ந்திருக்கிறது.

 

image


இந்திய டிஜிட்டல் பேமென்ட் துறையில் நடந்த முக்கியமான திருப்புமுனை ஐஆர்சிடிசி இணையதளம். இதற்கு பிறகுதான் இணையத்தில் பரிவர்த்தனை வேகம் எடுத்தது என மேக் மை ட்ரீப் நிறுவனர் தீப் கர்லா கூறுவார். அதுபோல, பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனை அடுத்தகட்டத்துக்கு உயர்ந்தது. டிஜிட்டல் பரிவர்த்தனை மீதான பயம் குறைந்தது. ஆனால், பணப்புழக்கம் உயர்ந்த பிறகு மீண்டும் பணப்பரிவர்த்தனைக்கு மக்கள் மாறத்தொங்கி இருக்கிறார்கள்.


1000 டாலர் நோட்டுக்கு தடை

இந்தியாவைப் போல சமீபத்தில் சிங்கப்பூரிலும் இதேபோன்ற நடவடிக்கையை அந்த அரசு எடுத்திருக்கிறது. உச்சமதிப்பு கரன்ஸியான 1,000 டாலரை புழக்கத்தில் இருந்து நீக்க முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. 2020 டிசம்பர் வரை இந்த நோட்டுகள் செல்லும். தற்போது புழக்கத்தில் இந்த நோட்டுகள் இருக்கும். இந்த நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்து இதற்கு ஏற்ப இதர நோட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் என சிங்கப்பூர் அரசு தெரிவித்திருக்கிறது.

 

image


2000 ரூபாய் நோட்டுக்கு தடையா?

1,000 ரூபாய் நோட்டுக்கு தடை செய்த பிறகு 2,000 ரூபாய் நோட்டினை அரசு அமல்படுத்தியது. அப்போது முதல் 2,000 ரூபாய் நோட்டு எப்போது வேண்டுமானாலும் மீண்டும் தடை செய்யப்படும் என்னும் வதந்தி பரவி வருகிறது. 2,000 ரூபாய் நோட்டுகளை தடை செய்ய வேண்டும் என ஓர் ஆண்டுக்கு முன்பு பொருளாதார விவகாரங்களுக்கான முன்னாள் செயலளார் எஸ்.சி.கார்க் கூறியிருந்தார். பணப்பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. அதேசமயம் 2,000 ரூபாய் நோட்டுகளை பதுக்கும் நடவடிக்கையும் அதிகரித்து வருவதாக அப்போது தெரிவித்திருந்தார்.

 

image


அதேபோல கடந்த நிதி ஆண்டில் (2019-20) ஒரு 2,000 ரூபாய் நோட்டு கூட அச்சடிக்கப்படவில்லை. ரூபாய் நோட்டு அச்சடிக்கப்படாததால் 2,000 ரூபாய்க்கு தட்டுப்பாடா அல்லது 2,000 ரூபாய் நோட்டுகளை பதுக்குவதால் தட்டுபாடா தெரியவில்லை. ஆனால் தட்டுப்பாடு இருக்கிறது என்பது நிஜம். உங்களது ஏடிஎம் கார்டு மூலம் தினமும் 50,000 ரூபாய் எடுக்க முடியலாம் அல்லது ஒரு லட்ச ரூபாய் கூட எடுக்க முடியலாம். ஆனால், பெரும்பாலான சமயங்களில் ஒரு முறைக்கு ரூ.20,000 மட்டுமே (40 நோட்டுகள்) எடுக்க முடிகிறது. தற்போது ஏடிஎம்களில் 2,000 ரூபாய் நோட்டுகள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு.

2,000 ரூபாய் நோட்டுகளின் எதிர்காலம் என்னவாகும் என யாருக்கும் தெரியாது. ஆனால், பணமதிப்பு நீக்க அனுபவங்கள் காலத்துக்கும் மறக்காது.

- வாசு கார்த்தி

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்