[X] Close

முதியோர்களை அதிகம் தாக்கும் பக்கவாதம்.... வராமல் தடுக்க மருத்துவர் ஆலோசனை!

சிறப்புச் செய்திகள்

Today-is-World-Stroke-Day--Doctor-Advice-to-Prevent-Stroke-in-the-Elderly-

இன்று உலக பக்கவாத நாள். உலகில் பக்கவாதத்தால் (ஸ்ட்ரோக்)ஆண்டுக்கு ஒன்றரை கோடி பேர் பாதிப்படைகிறார்கள். அதில், இந்தியாவில் மட்டுமே ஆறு கோடி பேர் என்று எச்சரிக்கை செய்கிறது மருத்துவத்துறை. பக்கவாத நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே,  ஆண்டுதோறும் அக்டோபர் 29 ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

image

(டாக்டர். கோவிந்த முருகன்)


Advertisement

எனவே, இந்நாளில் ஆளையே முடக்கிப்போடும் ஆபத்தான நோய்களில் ஒன்றான பக்கவாதம் நோய் எந்தெந்த காரணங்களால் வருகிறது? யாரை அதிகம் தாக்குகிறது? இதன் அறிகுறிகள் என்ன? இதிலிருந்து மீள்வதற்கான வழிகளும் உணவுமுறைகளும் என்ன? போன்றவை குறித்தெல்லாம், விருதாச்சலம் கிருஷ்ணா கிளினிக்கின் பொது மருத்துவர், டாக்டர். கோவிந்த முருகனிடம் கேட்டோம்,  

 பக்கவாதம் யாரை தாக்குகிறது?

பக்கவாதம் என்பது நரம்பு சம்மந்தமான நோய். இந்நோயில் இரண்டு பிரிவுகள் உள்ளன. சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு வருவது, மற்றொன்று பெரியவர்களுக்கு வருவது. இதில், பெரும்பாலும் முதியவர்களையே பக்கவாதம் தாக்குகிறது. உயர் ரத்த அழுத்தம், உடம்பில் கொழுப்பு சத்து அதிகமாக இருப்பது, ரத்த குழாயில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றால் முதியவர்களுக்கு வருகிறது. அதேபோல, நீரிழிவு நோயாளிகளுக்கும் சில காரணங்களால் பக்கவாதம் ஏற்படுகிறது.


Advertisement

image

பக்கவாதம் வருதவற்கான காரணங்கள்!

    மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் நரம்புகளுக்கு பத்து நிமிடம் சரியாக செல்லவில்லை என்றாலே உடம்பு செயலிழக்க ஆரம்பித்துவிடும். உடலில் இருக்கும் மற்றப் பாகங்களைவிட மூளையில் இருக்கும் ரத்தக்குழாய் மிகவும் மெலியதாக இருக்கும். இந்த ரத்தக்குழாய் ரத்த ஓட்டம் அதிகமாகி வெடிப்பதாலும் பக்கவாதம் வரலாம். ரத்தம் வேகமாக போவதும் அல்லது போகாமல் ரத்தம் பொறுமையாக செல்வதும் மூளைக்கு ஆபத்துதான். பொதுவாக, நடுத்தர வயதுடையவர்களுக்கு 120 அளவில் ரத்த ஓட்டம் சீராக இருக்கவேண்டும். அதுவே, 50 வயதுக்குமேல் இருப்பவர்களுக்கு 130 கூட இருக்கலாம். அதற்குமேல், இருப்பதுதான் உயர் ரத்த அழுத்தம். அப்போதுதான், ரத்தக்குழாய் வெடித்து பக்கவாதம் வந்துவிடுகிறது. அதேபோல், உடம்பில் கொழுப்பு அதிகமாக இருந்தாலும் ரத்தம் உறைந்து நரம்பு பாதித்து பக்கவாதம் வந்துவிடும்.

image

பக்கவாத நோய்க்கான அறிகுறிகள்!

மூளைதான் நம் உடம்பை செயல்பட வைப்பது. மூளை நரம்பு பாதிப்பதால் நம் கை,கால்கள் பாதிப்படைகின்றன. திடீரென்று அதிக தலைவலி, மயக்கம் வருவது, திடீரென்று கண் பார்வையை கருப்பாக மறைப்பது, மரத்துப்போதல், உணர்வற்றத் தன்மை போன்றவை பக்கவாதத்தின் அறிகுறிகள். இதனால், உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது நல்லது. அதேபோல, கை,கால்கள் பொறுமையாக செயல்படுகிறது என்றாலும் உடனடியாக ஸ்கேன் எடுத்துவிட வேண்டும். அப்போதுதான், ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டுள்ளதா? வெடித்துள்ளதா? என்பது தெரியும்.

image

 பக்கவாதம் என்பதே ஒரு பக்க அசைவுகள்தான். நம் மூளையின் வலது பக்க மூளையில் பாதிப்பு என்றால், இடது பக்க கை கால்கள் செயல்படாது அல்லது பொறுமையாக செயல்படும். அதேபோல்தான், இடது பக்க மூளையில் பாதிப்பு என்றால் வலது பக்க கை கால்களில் பாதிப்பு தெரியும். அப்படி பக்கவாதம் வந்தாலே மற்றொருவரை சார்ந்துதான் வாழமுடியும். அதனால், பாதிப்பு ஏற்பட்டவுடன், மருத்துவர்களிடம் அதற்கான சிகிச்சையையும் மருந்துகளையும் மேற்கொண்டால் விரைவில் குணமாகலாம். அதேபோல பிசியோதெரபியும் தொடர்ந்து கொடுக்கவேண்டும்.

image

பக்கவாதம் பாதித்தவர்கள் உண்ணவேண்டிய உணவு என்ன?

பக்கவாதம் 50 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களைத்தான் அதிகம் தாக்குகிறது என்பதால், 40 வயதாகும்போதே உடற்பயிற்சிகளோடு நல்ல டயட்டும் இருப்பது அவசியம். ஏரோபிக் பயிற்சிகள், வாக்கிங், ஜாக்கிங் என வேகமான பயிற்சிகளை செய்யலாம். உடல் பருமன் அதிகம் இல்லாமல் உயரத்திற்கு தகுந்த எடையை கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டும். பிரஷர் இருந்தாலும் அதனை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவேண்டும்.

image

முற்றிலும் கொழுப்பு உணவுகளை தவிர்ப்பதோடு உணவில் உப்பு அதிக சேர்த்துக்கொள்ளக்கூடாது. பழங்கள் காய்கறிகள் அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும். சர்க்கரை நோயாளிகள் இனிப்பான சில பழங்களை தவிர்த்துவிட வேண்டும்.

image

அதேபோல, சிறுநீரகப் பிரச்னை இருப்பவர்களைத் தவிர்த்து பக்கவாதம் பாதிப்புள்ளவர்கள் பொட்டாசியம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். ஏனென்றால், பொட்டாசியம் நிறைந்த உணவுகள் உடலிலுள்ள உப்பை குறைக்கிறது. சோடியம் நிறைந்த உப்பால்தான் உயர் ரத்த அழுத்தம் உண்டாகி பக்கவாதம் வருகிறது.

image

அதனால், பொட்டாசியம் நிறைந்த கீரைகள், மத்தி மீன், சப்போட்டா, ஆப்பிள், வாழைப்பழம், ஆரஞ்சு, அன்னாச்சிப்பழம், தக்காளி, மாதுளை, பீன்ஸ், பீட்ரூட், வாழைப்பழம், இளநீர் போன்றவற்றை தொடர்ந்து எடுத்துக்கொள்வது நல்லது” என்று விழிப்புணர்வூட்டுகிறார், மருத்துவர், கோவிந்த முருகன்.


Advertisement

Advertisement
[X] Close