Published : 30,Aug 2020 02:15 PM

’தமிழ் மகளாக தமிழர் நலன்காக்க அரசியலுக்கு வருவேன்’ - நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா பேட்டி!

Actor-Sathyaraj-Daughter-Divya-Sathyaraj-special-interview

நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா ஒரு பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர். உலகின் மிகப்பெரிய மதிய உணவுத் திட்டமான அக்‌ஷய பாத்திராவின் விளம்பரத் தூதுவர். திவ்யா மருத்துவத் துறையில் நடக்கும் முறைகேடுகள் பற்றியும், நீட் தேர்வை எதிர்த்தும் சில வருடங்களுக்கு முன்பு பிரதமருக்கு எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலானது. அமெரிக்க சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் ஊட்டச்சத்து துறையில் இவர் செய்த சேவைகளை அங்கீகரித்து கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. அரசியலில் நடக்கும் முறைகேடுகளை எதிர்க்க விரைவில் அரசியலுக்கு வரப்போவதாக திவ்யா அறிவித்துள்ளார். இதுகுறித்து புதிய தலைமுறைக்கு அவர் பேட்டி கொடுத்துள்ளார். 

கடந்த வருடமே அரசியலுக்கு வரப்போவதாகக் கூறியிருந்தீர்கள். எப்போது வரப்போகிறீர்கள்?

ஆமாம், விரைவில் அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கிறது. சிறுவயதிலிருந்தே அரசியல் செய்திகளை விரும்பி படிப்பேன். தெரிந்துகொள்ள விரும்புவேன். அரசியலில் இறங்க ஃபீல்டு வொர்க் செய்ய ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது.

இதுவரை என்னென்ன ஃபீல்டு வொர்க் செய்திருக்கிறீர்கள்?

ஒரு ஊட்டச்சத்து நிபுணராக என் பயணத்தை ஆரம்பித்தபோது எனக்கு நானே சொல்லிக்கொண்ட ஒரு விஷயம், ஆரோக்கியமான வாழ்வு என்பது வசதியானவர்களுக்கு மட்டும்தான் என்பது நியாயம் இல்லை. வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பவர்களும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்ற அடிப்படையில்தான் என் ஆராய்ச்சியைத் தொடங்கினேன். அதன் முதல் அடியாக அரசு பள்ளிக் குழந்தைகளில் வைட்டமின் குறைபாடு பற்றி ஆராய்ச்சி செய்தேன். அதில் 38% சிறுவர்களுக்கும், 40% இளம் பருவ பெண்களுக்கும் இரும்புச்சத்து குறைபாடு மற்றும் ரத்தசோகை இருப்பது தெரியவந்தது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் பேசினேன். அப்போது மதிய உணவுத் திட்டத்தின்மூலம் இரும்புச்சத்து குறைபாட்டை சரிசெய்யும் பணியில் அரசாங்கம் இறங்கியது.

image

இப்போது கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால், அரசு பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தின்மூலம் இரும்புச்சத்து கிடைக்க வாய்ப்பில்லை. இரும்புச்சத்து குறையும்போது நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்துவிடும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது கொரோனா எளிதில் தொற்றிக்கொள்ளும் வாய்ப்புகளும் அதிகம். வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளும் கொரோனாவிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தைச் சார்ந்த குழந்தைகளுக்கு இரும்புச்சத்து கொண்ட உணவையும், மருந்துகளையும் அரசாங்கம் இலவசமாக வழங்கவேண்டும். 12 முதல் 23 மாதக் குழந்தைகளில் 62% பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது. இதை அரசாங்கம் கவனிக்கவேண்டும். இதுகுறித்து அரசு மருத்துவமனைகள் மற்றும் கிராமப்புறங்களிலும் ஆராய்ச்சி செய்துவருகிறேன். இதுதவிர இப்போது உள்ள சூழ்நிலையில் மருந்து பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை கட்டாயம் காலாவதி ஆகிவிட்டதா எனப் பார்த்து வாங்கவேண்டும். இப்போது மருந்துக்கடைகளில் அதிக விலைக்கு விற்கிறார்கள். அவர்கள் கட்டாயம் விலையைக் குறைக்கவேண்டும். தமிழர் வேலை தமிழர்க்கே என்ற உணர்வு வரவேண்டும். அரசாங்கம் 70% முன்னுரிமை தமிழர்களுக்குக் கொடுக்கவேண்டும்.

image

இந்த ஊரடங்குக் காலத்தில் எப்படி நேரத்தை செலவிடுகிறீர்கள்?

நோயாளிகளுக்கு ஆன்லைனில் ஆலோசனை வழங்கி வருகிறேன். இப்போது என்னுடைய க்ளினிக்கிற்கு செல்ல ஆரம்பித்துவிட்டேன். ஊரடங்குக் காலத்திலும் என்னுடைய ஆராய்ச்சிகளை விடவில்லை. சிறுவிவசாயிகள், மீனவர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்களிடம் இருந்து விவரங்கள் சேகரித்தபோது அவர்கள் பொருளாதார ரீதியாக பெரும் இழப்புகளை சந்தித்திருப்பது தெரியவந்தது. அவர்களுக்கு அரசாங்கம் நேரடி இழப்பீடு வழங்கவேண்டும். இதுதவிர மருந்து விலைகளைக் குறைக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சமீபத்தில் ‘மகிழ்மதி இயக்கம்’ ஆரம்பித்துள்ளீர்கள்? எது தொடர்பான இயக்கம் இது? இந்த இயக்கம் ஆரம்பிக்க உங்களைத் தூண்டியது எது?

வறுமைக்கோட்டிற்குக் கீழ் இருக்கும் பகுதிகளில் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை இலவசமாக வழங்குவதற்காக தொடங்கப்பட்டதுதான் மகிழ்மதி இயக்கம்.
இந்தியாவில் கணக்கின்படி ஓர் ஆண்டில் 10 மில்லியன் திருமணங்கள் நடைபெறுகின்றன. அதில் 30% உணவுகள் வீணாகின்றன. நான் என்னுடைய உறவுக்கார திருமணங்களுக்குச் செல்லும்போது ஆடம்பரமாக செலவு செய்து ஆறு ஏழு நிகழ்வுகளை கடன் வாங்கியாவாது நடத்துவார்கள். விதவிதமாக உணவுகளை இலைகளில் பரிமாறுவார்கள். அதில் பெரும்பாலான உணவுகள் மீந்து அதை எடுத்து வெளியே கொட்டுவதை நான் பார்க்கும்போது, எத்தனைப் பேர் உணவில்லாமல் கஷ்டப்படுகிறார்களே என மனதில் ஏங்குவேன். ஊட்டச்சத்து மிக்க உணவு பணக்காரர்களுக்கு மட்டும்தானா என்ற கேள்வி எனக்குள் வந்துகொண்டே இருக்கும்.

image
இதுதவிர அரசு பள்ளியில் ஆய்வு நடத்தியபோது, ஒரு சிறுவன் இருமிக்கொண்டே இருந்தான். அவனிடம் எவ்வளவுநாள் இருமல் இருக்கிறது என கேட்டபோது, ஒரு வருடத்திற்கும் மேலாக இருப்பதாகக் கூறினான். இதற்கு காரணம் வைட்டமின் சி குறைபாடு. அதுமட்டுமல்லாமல் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பெரும்பாலான 10 வயது குழந்தைகளுக்கு 6 வயதிற்குரிய வளர்ச்சிதான் இருந்தது. இந்த இரண்டு நிகழ்வுகளையும் மனதில்வைத்து அனைவருக்கும் குறிப்பாக வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு ஆரோக்கியமான உணவைக் கொடுக்கும் நோக்கத்தில் இந்த இயக்கத்தைத் தொடங்கியுள்ளேன். அம்மாவின் பெயர் மகேஸ்வரி. அவரின் பெயரை என் இயக்கத்தின் பெயரில் இணைக்கவேண்டும் என்பது என் ஆசை. எனவே என் கனவு இயக்கத்திற்கு ‘மகிழ்மதி இயக்கம்’ என பெயரிட்டுள்ளேன். இந்தத் திட்டத்தின் தொடக்கமாக கொரோனா காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சென்னையில் சில பகுதிகளில் தன்னார்வலர்களின் துணையுடன் ஊட்டச்சத்துமிக்க அரிசியை வழங்கி வருகிறேன்.

image

அரசியலுக்கு வருவதாகக் கூறுகிறீர்கள்? ஏற்கனவே இருக்கும் கட்சியில் சேரப்போகிறீர்களா? அல்லது தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறீர்களா?

எந்தக் கட்சியில் சேரப்போகிறேன் என்பதை விரைவில் அறிவிக்கிறேன். ஆனால் ஜாதி, மதம் சார்ந்த கட்சியில் கட்சியில் சேரமாட்டேன். அதேபோல், ரஜினி அங்கிள், கமல் அங்கிள் கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை. எனக்கு மிகவும் பிடித்த தலைவர்கள் நமது ஊரில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் நல்லகண்ணு அய்யா, இவர்கள் தவிர ஒபாமா, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஏர்டனை பிடிக்கும். இவர்களைப் போன்ற ஒரு அரசியல்வாதியாக வரவே எனக்கு ஆசை.

image

நீங்கள் அரசியலுக்கு வருவது பற்றி அப்பா, அம்மாவின் கருத்து?

நான் ஒன்றும் ரொம்ப புத்திசாலியான மாணவி கிடையாது. ஆனால் கடினமாக உழைப்பேன். அறிவாளியாக இருப்பதைவிட உழைப்பாளியாக இருப்பதுதான் சிறந்தது என்று அப்பா சொல்லியிருக்கிறார். எனவே நான் எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும் அதில் நேர்மையுடன் உழைக்கவேண்டும் என்பதுதான் என் லட்சியம். அது என் அப்பாவிற்கும் நன்றாகத் தெரியும். என் அப்பாதான் என் உயிர்த்தோழன். என் உலகமே அவர்தான். அரசியலிலும் அப்பாவின் ஆதரவு எனக்கு கண்டிப்பாக இருக்கும். ஆனால் ஒரு முக்கியமான விஷயம், I am a selfmade independent girl. என்றுமே அப்பாவை சார்ந்து இருந்ததில்லை. என் சொந்த வளர்ச்சிக்கு அப்பாவின் புகழையும், பணத்தையும் நான் பயன்படுத்தியது இல்லை. வசதியான வீட்டில் பிறந்த பெண் என்பதால் உழைக்கத் தெரியாது என நினைக்கலாம். உண்மையில் நான் பென்ஸ் காருக்கும், டைமண்ட் நகைக்கும் அடிமையாக வளர்க்கப்படவில்லை. சத்யராஜ் மகளாக மட்டுமல்லாமல் ஒரு தமிழ்மகளாக தமிழர் நலன் காக்க உழைப்பேன்.

 

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்