[X] Close

கொரோனாவால் முடங்கிய சுற்றுலா: மீன் வளர்க்கும் குளமாக மாறிய ரிசார்ட் நீச்சல் குளம்..!

இந்தியா

Kerala-Luxury-Resort-Converts-Large-Pool-Into-A-Fish-Farm
கேரளாவில் உள்ள ரிசார்ட் ஒன்றில், நீச்சல் குளத்தை மீன் வளர்க்கும் குளமாக மாற்றி அமைத்துள்ளனர்.
 
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சுற்றுலாத் துறை மிக மோசமான பேரழிவை எதிர்கொண்டுள்ளது. சுற்றுலா வருமானத்தையே பெரும்பகுதி நம்பியிருக்கும் நாடுகள், மாநிலங்களில் கொரோனாவால் மிக மோசமான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கடந்த ஜனவரி முதல் தற்போது வரை உலகச் சுற்றுலாவில் சுமார் ரூ.50 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுற்றுலா ரிசார்டுகள், தங்கும் விடுதிகள் சுற்றுலாப்பயணிகள் வராமல் காற்று வாங்குகின்றன.
 
ஆனால் எந்தவொரு கடினமான சூழ்நிலையின் போதும் மாற்றி யோசித்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கிணங்க, நீச்சல் குளத்தை மீன் வளர்க்கும் குளமாக மாற்றி, மாற்று வழியில் வருமானம் ஈட்டும் முயற்சியில் இறங்கியிருக்கிறது கேரளாவில் உள்ள ரிசார்ட் ஒன்று.
 
image
 
கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ளது அவேடா ரிசார்ட். இங்கு 150 மீட்டர் நீளமுடைய நீச்சல் குளம் இருப்பதால் வெளிநாடு, வெளிமாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளால், ஆண்டு முழுவதும் இந்த ரிசார்ட் நிரம்பி வழிவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பூஜ்ஜியம் வருமானத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
 
தற்போது அதன் நிர்வாகம், அதன் நீச்சல் குளத்தை மீன் வளர்க்கும் குளமாக மாற்றி, அதனை சிறப்பாக பயன்படுத்தி வருகிறது. இந்த குளத்தில் முத்துப்புள்ளி என்னும் மீன் வகையை வளர்த்து வருகிறது. இந்த வகை, தென்னிந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மிக பிரபலமான உணவாகும்.
 
சுமார் 16,000 மீன்கள் வளர்க்கப்பட்டு நவம்பர் மாதத்தில் வளர்ச்சி அடைந்த மீன்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ரிசார்ட் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
 
சுமார் நான்கு டன் முத்துப்புள்ளி மீன்கள் சந்தையில் தோராயமாக ரூ.30 லட்சம் மதிப்புடையதாக இருக்கும் என்று ரிசார்ட் நிர்வாகத்தினர் கூறுகின்றனர். இந்த வணிகத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என்பதால், கொரோனா நெருக்கடி நிலை முடிவுக்கு வந்து இயல்பு நிலை திரும்பிய பிறகும், தொடர இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
 
அப்போது இந்த மீன்களை நீச்சல் குளத்தில் வளர்க்க முடியாது என்பதால், அதற்கான வேறொரு இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு, மீன் வளர்ப்பு பணி தொடரும் என ரிசார்ட் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
 

Advertisement

Advertisement
[X] Close