Published : 21,Jul 2020 10:59 AM

நீங்கள் பொறியியல் பட்டதாரியா அல்லது நிபுணரா?: பொறியியல் கல்வியின் எதிர்காலம்

Future-of-Engineering-Education-after-the-padamic-days

உலகம் முழுவதும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் பெருங் கதவுகள் சாத்தப்பட்டுள்ளன. ஆன்லைன் வழியாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஊரடங்குக்குப் பிறகான நாட்களில் கல்வியின் நிலை, வேலைவாய்ப்பு பற்றிய கவலையில் மாணவர்கள். இந்த நிலையில், எதிர்காலத்தில் பொறியியல் கல்வியின் நிலை எப்படி மாறும் என்பது பற்றிப் பேசுகிறார்  இன்ஸ்டிடியூஷன் ஆப் என்ஜினீயரிங் டெக்னாலஜி (யுகே) என்ற சர்வதேச அமைப்பைச் சேர்ந்த கல்வி ஆலோசகர் எஸ். ராகவன்.

image

நீங்கள் வெறும் மதிப்பெண்களுடன் தேர்ச்சிபெறும் பொறியியல் பட்டதாரியா அல்லது சிறந்த பொறியியல் நிபுணராக உருவாக விரும்புகிறீர்களா என்பதை மாணவர்கள்தான் முடிவு செய்யவேண்டும். அதற்கான நெருக்கடியை கொரோனா காலம் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

இதுவரை பொறியியல் கல்வி என்பது அறிவுசார்ந்த கல்வியாக (Knowledge based) இருந்தது. இனிமேல் அது செயல்முறை வழிக்கல்வியாக (Application based) மாறும். அதாவது படிப்பவற்றைப் செயல்படுத்திப் பார்க்கும் படிப்புகளாக இருக்கும். மூன்று ஆண்டுகள், நான்கு ஆண்டுகள் படிப்புக்குப் பிறகு தேர்வுகள் எழுதுவோம். மதிப்பெண்கள் கிடைக்கும். அதை வைத்துக்கொண்டு ஒரு வேலையில் சேரும் நிலை இருந்தது. இதுதான் பல காலமாக பின்பற்றப்படும் நடைமுறை.

அந்தப் பழைய நடைமுறை புதிய எதார்த்தமாக மாறப்போகிறது. தேர்வு எழுதுவது மட்டும் முக்கியமல்ல. மதிப்பெண்களும் முக்கியமல்ல. நீங்கள் படித்தவற்றை எப்படி செயல்முறையாக மாற்றுகிறீர்கள், பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டறிந்துள்ளீர்களா, புதிய திட்டங்களைத் தயாரித்துள்ளீர்களா, புதியன கண்டுபிடித்தீர்களா என்ற கேள்விகளுக்கு விடை காண்பதாக உங்களுடைய பொறியியல் கல்வி இருக்கவேண்டும். வகுப்பறைகளில் கற்ற அறிவை எப்படி தொழில்நுட்பச் சிக்கல்களுக்கான தீர்வை அடைவதற்காகப்  பயன்படுத்துகிறீர்கள் என்பது அவசியம்.

image

அன்றாட வாழ்வில் எதிர்ப்படும் நம்மைச் சுற்றியுள்ள சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டுபிடிக்கும் நிலைக்கு மாணவர்கள் வரவேண்டும். டெக்னாலஜியை படித்தால் மட்டும் போதாது. உதாரணத்திற்கு கழிவு மேலாண்மையைப் பற்றி சிந்திக்கலாம். அதிலிருந்து என்ன தயாரிக்கலாம், அல்லது எப்படிப் பயன்படுத்தலாம் என்று திட்டமிடலாம். அடுத்து டிராபிக் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கான தீர்வுகளை கண்டடையலாம்.

கோயம்புத்தூரில் கல்லூரி மாணவர்கள் சிலர் காட்டு விலங்குகளிடம் இருந்து பயிர்களைக் காப்பாற்ற சென்சாருடன் கூடிய ஒரு பாதுகாப்புச் செயலியை  உருவாக்கினார்கள். அதை விவசாயிகளின் செல்போன்களுடன் இணைத்தார்கள். தூரத்தில் யானையோ சிறுத்தையோ வந்தால் சென்சார் மூலம் செல்போன்களுக்கு எச்சரிக்கை கிடைக்கும். அதன் விலை ரூ. 4500. மாணவர்கள் படிக்கும்போது செய்த புராஜெக்ட். படித்து முடித்ததும் அவர்களால் தனியாக சொந்த நிறுவனத்தைத் தொடங்கமுடியும். அல்லது அந்த புராஜெக்ட்டை வைத்துக்கொண்டு பெருநிறுவனங்களில் நல்ல வேலைகளுக்கும் செல்லமுடியும். இதுதான் எதிர்காலக் கல்வியாக இருக்கும்.

image

கொரோனா மிகப்பெரிய பாதிப்பை கல்வி, வேலைவாய்ப்பில் ஏற்படுத்தியுள்ளது. செயல்திறனை வளர்த்துக் கொண்டவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்புகள் எளிதாக கிடைக்கும் வாய்ப்புகள் ஏற்படும். ஒரு படிப்பை மட்டும் படித்தால் போதாது. இனிமேல் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று படிப்புகளைப் படிக்க நேரலாம். வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் ஆன்லைன்வழி  பட்டப்படிப்புகளை நடத்தத் தொடங்கிவிட்டன. இந்தியாவிலும் டூயல் டிகிரி பற்றிய பேச்சுவைார்த்தை போய்க்கொண்டிருக்கிறது.

நீங்கள் பொறியியல் பட்டதாரிதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. நல்ல மதிப்பெண்களும் பெற்றிருக்கலாம். அதற்கடுத்து படிப்புக் காலத்தில் நீங்கள் செய்த புராஜெக்ட் அல்லது புதிய கண்டுபிடிப்பு அல்லது பிரச்னைகளுக்குத் தீர்வுகளைப் பற்றித்தான் வேலை கொடுக்கும் நிறுவனங்கள் உங்களிடம் எதிர்பார்க்கும். உங்கள் சான்றிதழ்களைவிட உங்கள் சாதனைகளைத்தான் எதிர்காலம் கணக்கிடுகிறது. நீங்கள் வெறும் பட்டதாரி என்ற நிலையில் இருந்து ஒரு நிபுணராக மாறுவதற்கான வாய்ப்புகள் உங்களிடமே உள்ளன. அந்த பந்து உங்கள் மைதானத்தில்தான் இருக்கிறது.   

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்