Published : 20,Jun 2017 04:04 PM
தனியார் பள்ளிகளை நாடுவது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் முறையாக செயல்பட்டால் மாணவர்கள் ஏன் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள் ? என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
பொதுநல மனுவில், ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தமிழகத்தைத் தவிர பிற மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க மாநில அரசு போதிய ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. அந்த மனு நீதிபதிகள் செல்வம், ஆதிநாதன் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகியவை கற்பிக்கும் மொழியாக இருக்கிறது. அத்துடன் நவோதயா பள்ளிகளை அமைப்பது பற்றிய விசயம் தமிழக அரசின் கொள்கை முடிவாகும் எனத் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அரசுப்பள்ளிகள் முறையாக செயல்பட்டால், மாணவர்கள் ஏன் தனியார் பள்ளிகளை நாடுகின்றனர்? எனக் கேள்வி எழுப்பினர். இந்த விசயத்தில் அரசுத் தரப்பு விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வழக்கறிஞர் அவகாசம் கோரியதால், விசாரணையை நீதிபதிகள் நாளைக்கு ஒத்திவைத்தனர்.