Published : 14,Jun 2017 11:31 AM
பாஜவில் சேர்ந்தார் வில்லன் நடிகர் பொன்னம்பலம்!

நடிகர் பொன்னம்பலம் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
தமிழகத்தில் கட்சியை வளர்க்க பாஜக பல்வேறு வகைகளில் முயன்று வருகிறது. அக்கட்சியில் சமீபகாலமாக திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இணைந்து வருகின்றனர். ஏற்கெனவே கங்கை அமரன், எஸ்.வி.சேகர் போன்றோர் அக்கட்சியில் உள்ள நிலையில் பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம் அக்கட்சியில் இணைந்துள்ளார்.
சினிமாவில் சண்டைப் பயிற்சியாளராக இருந்து வில்லன் நடிகராக உயர்ந்த அவர் முத்து, ஹானஸ்ட்ராஜ், மைக்கேல் மதன காமராஜன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது எனக்கு இன்னொரு பேர் இருக்கு போன்ற படத்தில் நடித்து வரும் அவர், பேக்குவரத்து-நெடுஞ்சாலைத்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று பாஜகவில் இணைந்தார்.
பாஜகவில் இணைந்தது குறித்துப் பேசிய நடிகர் பொன்னம்பலம், “பாஜகவினர்தான் நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர். தற்போதுள்ள சூழ்நிலையில் பாஜகவால்தான் நாட்டைக் காப்பாற்ற முடியும்” என்றார்.