Published : 26,Feb 2020 04:12 PM
டெல்லி வன்முறை: மேலும் இருவர் பலி ! மீட்புப் பணிகள் தீவிரம்

டெல்லியில் வெடித்த வன்முறைக்கு மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பல இடங்களில் வன்முறை கட்டுக்குள் வந்துள்ளதாக கூறப்படும் நிலையில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
டெல்லியில் வடகிழக்கு பகுதியான ஜாஃபராபாத் மெட்ரோ ரயில் நிலையம் அருகே குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக ஏராளமானோர் போராட்டத்தை தொடங்கினர். இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள். அப்போது அதேபகுதியில் சட்டத்திற்கு ஆதரவாக ஒருதரப்பினர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போதே பதற்றம் தொற்றியது. பின்னர் சிறிது நேரத்தில் திடீரென இருதரப்பினரும் கற்களை வீசி மோதலில் ஈடுபட்ட நிலையில் சமூகவலைத்தளங்களில் இவை பரவியது.
“சபாஷ் ரஜினிகாந்த்.. அப்படி வாங்க..” - கமல்ஹாசன் வரவேற்பு
இதனால் பல இடங்களுக்கு வன்முறை விரிவடைந்தது. அதாவது கராவல் நகர், முஸ்தபா பாத் நகர், மோஜ்பூர், பஜன்பூரா, மஜ்பூர் என டெல்லியின் வடகிழக்கு பகுதியில் வன்முறை பரவியது. மேலும் பிரஹ்ம்புரி, மஜ்பூரி, சந்த்பாக், ஷஹாத்ரா ஆகிய இடங்களிலும் மோதல் ஏற்பட்டது. வடகிழக்கு பகுதிகள் முழுவதும் கற்களை வீசியும், தடிகள் கொண்டும் இருதரப்பினர் மோதலில் ஈடுபட்டனர். சாலைகளில் நிறுத்தப்பட்ட வாகனங்கள், கடைகள், அடித்து நொறுக்கப்பட்டதோடு தீவைத்து கொளுத்தப்பட்டன. ஒருசில இடங்களில் காவல்துறை வாகனங்ளும் தீயிக்கு இறையாகின. போராட்டத்தின் முதல்நாள் முதலே உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில் தற்போது வரை 24 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு வளையத்தில் வடகிழக்கு டெல்லி: காவல்துறை தகவல்
இதில் காவல்துறையைச் சேர்ந்த தலைமைக் காவலர் ரத்தன் லால், அங்கித் சர்மா ஆகிய இருவரும் அடங்குவர். துப்பாக்கி குண்டு காயம் பட்டவர்கள், கற்களால் தாக்கப்பட்டு காயம் அடைந்தவர்கள், தப்பிக்க முயற்சிக்கும் போது கீழேவிழுந்து காயம் அடைந்தவர்கள் என சுமார் 200 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அதிகளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் ஓரளவுக்கு நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியுள்ளது. மேலும் வன்முறை நிகழ்ந்த இடங்களில் தீயணைப்பு வாகனங்களுடன் மீட்பு பணியும் நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.