[X] Close

ஆதித்யா வர்மா - திரைவிமர்சனம்

Adithya-Varma---Movie-Review

பலகட்ட தடைகளை தாண்டி ’ ஆதித்யா வர்மா’ வெள்ளித்திரையில் வெளியாகிவிட்டது. சீயான் விக்ரம் மகன் துருவ் நடிப்பில் தயாரான இந்தப் படத்திற்கு கோடம்பாக்க திரை ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு சரியான தீனியை போட்டிருக்கிறாரா துருவ்? அப்பா அளவுக்கு தன் பொறுப்பை நிறைவேற்றி இருக்கிறாரா? வாங்க பார்ப்போம்!

2017ஆம் ஆண்டு தெலுங்கில் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் வெளியான  திரைப்படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்தப் படத்தின் ரீமேக்தான் ‘ ஆதித்யா வர்மா’.  இதில் துருவ், பனிடா சந்து, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.


Advertisement

மருத்துவக் கல்லூரி மாணவரான ஆதித்யாவுக்கு தன்னுடன் படிக்கும் ஜூனியர் மாணவி மீது காதல். வழக்கம் போல இவர்களுடைய காதலுக்கு சாதி குறுக்கே நிற்கிறது. இவர்களது காதல் இறுதியில் தோல்வியில் முடிய, துருவ் போதைக்கு அடிமையாகிறார். அதனால் படித்து உழைத்து பெற்ற மருத்துவர்  உரிமத்தை இழக்கிறார்.  ஒன்பது மாதங்கள் பிரிவுக்கு பிறகு தன் காதலி, மீராவை சந்திக்கிறார் துருவ். அதன் பிறகு மீண்டும் இவர்கள் வாழ்வில் இணைகிறார்களா என்பதுதான் மீதிக் கதை. அதை பொறுத்தவரை திரைக்கதை எமோஷனல் குறையாமல் படத்தை இறுதிவரை நகர்த்தி இருக்கிறார் இயக்குநர்.

ஆனால் வழக்கமாக தமிழ் சினிமாவில் இடம்பெறும்  அதே டெம்ப்லேட்தான்.  காதல் உணர்வு என்பது பொதுவான ஒன்றுதான். ஆனால் அதை அனுபவ ரீதியாக கதையாக தரும் பாணியில்தான் இயக்குநரின் பலம் உள்ளது. அந்த அணுகுமுறையை வைத்துதான் இந்தப் படம் வெற்றியை ஈட்டுமா? அல்லது தோல்வியில் மாட்டுமா என்பது உள்ளது. அந்த வகையில் தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி நிகழ்த்திய மேஜிக்கை  ‘ஆதித்யா வர்மா’ லேசாக தவறவிட்டுள்ளார்.

பொதுவாக ரீமேக் படங்கள் சந்திக்கும் பிரச்னை என்னவென்றால் ஒப்பீடு. முதலில் வந்த படத்தோடு இந்தப் புதிய வெர்ஷன் ஒத்துப் போகிறதா? அதைவிட உயரத்தில் போய் உள்ளதா என இயல்பாகவே ஒரு திரைப் பார்வையாளன் யோசிக்க தொடங்கிவிடுவான். அந்த யோசனை இல்லாமல் துருவை பார்த்தால் பெரிய அளவில் அவர் சாதித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். தன் முதல் படத்திலேயே மொத்த கதையையும் தாங்கி  நிற்கிறார் துருவ். அப்படியே அவரது தந்தை விக்ரமின் சாயல் துருவ் மீது கழிந்திருக்கிறது. ஆகவே படம் பார்த்த பலருக்கு  ‘விக்ரம் 2.0’ வை பார்க்கும் உணர்வை படம் தானாக ஏற்படுத்துகிறது.

சீயான் விக்ரம் சேதுவில் ‘அபிதகுஜலாம்பா’ளை சுற்றித் திரிந்த காட்சிகளை பார்த்து ரசித்த தலைமுறைக்கு, அப்படியே தன் புதிய நடிப்பின் மூலம் துருவ் ஒரு புதிய அலைவரிசையை கடத்திவிட்டிருக்கிறார். தலைமுறை தாண்டியும் சேதுவின் காட்சிகளை மறக்க விடாமல் ஞாபகப் படுத்தியிருக்கிறார் ‘ஆதித்யா வர்மா’. எமோஷன், ஆக்‌ஷன், ஃபீலிங் என பல விதங்களிலும் துருவ், அப்பா விக்ரமின் மறு அவதாரமாக மிளிர்கிறார் என்றே சொல்லத் தோன்றுகிறது. அந்த வகையில் இயக்குநர் க்ரிசயாவுக்கு இது சரியான வெற்றிப் படம். 

பல இடங்களில் வசனங்கள் படத்தை வாழ வைத்திருக்கிறது என்பது படத்திற்கு கூடுதல் பலமாக உள்ளது. படத்தின் காட்சிகளை கதை தாங்கிப் பிடித்த அளவுக்கு இசையமைப்பாளர் ராதானின் இசை  ‘ஆதித்ய வர்மா’விற்கு வலு சேர்க்கவில்லை, சில இடங்களில் நெகிழச் செய்கிறார். சில இடங்களில் நகர்ந்துவிடுகிறார். காட்சிகளை வடிவமைப்பதில் ரவி கே சந்திரனின் பங்கு பலம் சேர்கிறது. படத்தை தூக்கிச் சுமக்கும் அளவுக்கு  மிகச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

ஆக, ஒட்டு மொத்தமாக இது காதல் ப்ளஸ் எமோஷன் நிறைந்த படம். மறுக்க முடியாத உண்மை என்னவென்றால்  இப்படம் நிச்சயம் துருவிற்கு  பெரிய ஓப்பனிங். விஜய் தேவர கொண்டாவின் இடத்தை துருவ் சரியாக நிரப்பி இருக்கிறார்.

 ஆனால் ஷாலினி பாண்டேவின் இடத்தை பனிடா சந்துவால் நெருங்க முடியவில்லை. கதாபாத்திரத் தேர்வு படத்தின் பலவீனம். எது எப்படி இருந்தாலும் இளைஞர்களின் இதயத்தில் பெரிய கொண்டாட்டத்தை கொடுப்பான் இந்த ‘ஆதித்ய வர்மா’. அதற்கு துருவ் ஒருவரே போதும்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close