
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 நாட்கள் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தாழ்வு மண்டலம் காரணமாக தென்மேற்குப் பருவக்காற்று வலுவடைந்துள்ளது. இதனால், வங்கக்கடலில் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பலத்த காற்று வீசலாம் என்பதால் நாளை வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் தொடர் கனமழையால் ஒரே நாளில் 82 செ.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது. மேலும், அப்பர் பவானியில் 30 செ.மீ., கூடலூரில் 24 செ.மீ., தேவாலாவில் 21 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. நடுவட்டம் மற்றும் எமரால்ட்டில் தலா 18 செ.மீ., க்ளன்மோர்கனில் 14 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.