Published : 13,May 2017 06:19 AM
இந்த பாம்புதான் கடிச்சுது: டாக்டரை அலற வைத்த இளையராஜா!

மகனை கடித்த பாம்போடு மருத்துவமனைக்கு வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் எசனையை சேர்ந்தவர் இளையராஜா. இவர் மகன் தர்ஷன். சிறுவனான இவன், வீட்டின் அருகே புல் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு சென்றுகொண்டிருந்த விஷப்பாம்பு அவனைக் கொத்தியது. இதில் தர்ஷன் மயக்கமடைந்தான். இதைக் கண்ட அவனது தந்தை இளையராஜா, மகனை கடித்துவிட்டு ஓடிய பாம்பை மடக்கிப் பிடித்தார். அதோடு, மகனையும் தூக்கிக்கொண்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு வந்தார்.
’என் மகனை பாம்பு கடிச்சுட்டு’ என்றார்.
‘என்ன பாம்பு கடிச்சுது’ என்று டாக்டர் கேட்க, ‘இந்தா இந்த பாம்புதான்’ என்று கையோடு கொண்டு வந்திருந்த பாம்பை நீட்டினார். அலறியடித்த டாக்டர், ’பாம்பை தள்ளி வையுங்க’ என்று கூறிவிட்டு சிறுவனுக்கு சிகிச்சை அளித்தார். பாம்போடு வந்த இளையராஜாவால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.