Published : 11,May 2019 06:37 AM

விமானத்தில் பாலியல் தொல்லை: இந்திய இளைஞருக்கு இங்கிலாந்தில் சிறை!

Man-jailed-over-sex-attack-on-Mumbai-to-Manchester-flight

விமானத்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த இந்திய இளைஞருக்கு இங்கிலாந்தில் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

மும்பையை சேர்ந்தவர் ஹர்மன் சிங். வயது 36. இவர் டூரிஸ்ட் விசாவில் இந்தாண்டு தொடக்கத்தில் இங்கிலாந்து சென்றார். மும்பையில் இருந்து இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகருக்கு செல்லும் விமானத்தில் ஏறினார். இவர் இருக்கைக்கு அருகில் 20 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் இருந்தார். அவரிடம் பேச்சுக்கொடுத்தார், சிங். அவரது ஆங்கிலம் சரியாகப் புரியாததால், கண்டுகொள்ளாமல் இருந்தார் அந்த இளம்பெண்.

சிறிது நேரத்துக்குப் பிறகு விமானத்தில் அக்கம் பக்கத்து பயணிகள் தூங்கிய பிறகு, அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார் சிங். முத்தம் கொடுக்கவும் முயற்சி செய்துள்ளார். அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண், அங்கிருந்து நகர்ந்து செல்ல முயன்றார். 

ஆனால், அவரை விடாமல் பிடித்துக்கொண்ட, சிங், தொடர்ந்து 15 நிமிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டார். அக்கம் பக்கத்தில் விமானப் பணிப்பெண்களும் இல்லாததால், என்ன செய்வதென்று தவித்த அந்த இளம் பெண், பின் அவரிடமிருந்து தப்பித்து விமானத்தின் பின் பகுதிக்குச் சென்றார். அங்கிருந்த விமானப் பணிப்பெண்ணிடம் நடந்ததை கூறினார். அவர் மூலம் மான்செஸ்டர் விமான நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும் சிங்கை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் தான் எதுவும் செய்யவில்லை என்று முதலில் மறுத்த சிங், பின் ஒப்புக்கொண்டார். இது தொடர்பான வழக்கு நடந்து வந்தது. பாலியல் தொல்லையில் ஈடுபட்ட சிங்குக்கு 12 மாத சிறை தண்டனை விதித்து மான்செஸ்டர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதையடுத்து சிங் சிறையிலடைக்கப்பட்டார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்