Published : 05,Mar 2019 06:25 AM

நானா ரவுடி ? தன்னை விமர்சித்த டிடிவி தினகரனுக்கு அமைச்சர் கொடுத்த பதில் !

Minister-Rajendra-Balaji-reply-to-TTV-dhinakaran

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பார்ப்பதற்கு ரவுடி போல இருக்கிறார் என விமர்சனம் செய்த டிடிவி தினகரனுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

புல்வமாவில் நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலில் வீரமரணம் அடைந்த சவலாபேரியை சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் வீட்டிற்கு ஆறுதல் சொல்ல சென்ற டி.டி.வி.தினகரனுக்கு சாத்தூரில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன் “ உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அதிமுகவின் ஒருபிரிவுதான் அமமுக. இரட்டை இலைக்காகவும் கட்சியின் பெயருக்காகவும் போராட உரிமை உள்ளவர்கள் நாங்கள். எனவேதான் இரட்டை இலை வழக்கில் தங்களின் உரிமையை நிலைநாட்டவே அமுமுக கட்சியை இன்னும் பதிவு செய்யாமல் இருக்கிறோம்.

அமைச்சராக இருப்பதால் எதை வேண்டுமானாலும் பேசலாம் என ராஜேந்திர பாலாஜி பேசுவது தவறு. இந்த ஆட்சி முடிந்த பின்பு திண்ணையில் உட்கார்ந்து வேடிக்கைதான் பார்க்க வேண்டும். அமமுகவின் வளர்ச்சியை பார்க்கதான் போகிறார். இருட்டில் தனியாக போக பயந்தவர்கள்தான் கூட்டணி வைத்து உள்ளனர். இந்த கூட்டணி, ஆர்.கேநகர் தேர்தல் போல்தான் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் தோல்வி அடைவார்கள். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பார்பதற்கு ரவுடி போலவும் பூசாரி போலவும் உள்ளார்” என்றார்.

இந்நிலையில் டிடிவி தினகரன் ரவுடி என விமர்சனம் செய்ததற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “ நானா ரவுடி..? அவருடன் உள்ளவர்கள் தான் குண்டர்கள் போல செயல்படுகின்றனர். அதனை கண்டிக்கக் கூடாதா..? கண்டித்தால் தப்பா...? உண்மையை சொன்னால் கசக்கும்” என்றார். 2009-ல் ராஜேந்திர பாலாஜிக்கு பொறுப்பை தான் கொடுத்ததாக டிடிவி தினகரன் கூறியுள்ளாரே என்ற கேட்டதற்கு, “ அவர்கள் குடும்பத்தில் எனக்கு உதவியவர்கள் தற்போது அவரிடம் இல்லை. அவர் தனிமரமாக உள்ளார். அவர் வெற்றிக்கு நாங்கள் பணியாற்றிருப்போம், அவர் உதவி செய்திருப்பார். அரசியல் ரீதியான உறவு. அதற்கான அதிமுகவை அவர் அழிக்க நினைத்தால் வேடிக்கை பார்க்க முடியாது. டிடிவி நடவடிக்கை அதிமுக எதிர்ப்பு நிலைப்பாட்டிலும், திமுக ஆதரவு நிலைப்பாட்டிலும் உள்ளது.” என்றார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்