Published : 15,Apr 2017 08:51 AM

காவு வாங்கிய வயல்வெளி: யார் பொறுப்பேற்பது?

Child-death-in-thiruvallur

திருவள்ளூர் மாவட்டம் காட்டாவூரில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகள் இருவர் உயிரிழந்தது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மின்வாரியத்தின் அலட்சியமே இது போன்ற உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் காட்டாவூர் இருளர் குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் சந்துரு-அமுதா தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் குழந்தை பேறு இன்றி, பிறந்தவர்கள் தான் சௌமியா, ரம்யா. சந்தோஷமாக துள்ளி திரிந்து, பள்ளியை விட்டு வந்தவர்களை காவு வாங்கியது அங்குள்ள வயல்வெளி. தமிழ் புத்தாண்டிற்காக விடுமுறை என செய்தி அறிந்த குழந்தைகள், வயல்வெளியில் உள்ள மோட்டாரில் குளிக்கச் சென்ற போதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

முனுசாமி என்பவரது வயலில் மின் கம்பம் சாய்ந்து கம்பிகள் தரையில் கிடந்துள்ளது. இதனை அறியாத சகோதரிகள் மிதித்திருக்கின்றனர். இதனால் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழக்க, விளையாட வந்த சக குழந்தைகள் அளித்த தகவலிலேயே பெற்றோருக்கு விஷயம் தெரிய வந்துள்ளது. விளையாடி விட்டு வருவதாக கூறி சென்ற குழந்தைகளை, சடலங்களாக கண்ட பெற்றோர்கள் வடித்த கண்ணீர் கல்நெஞ்சம் கொண்டோரையும் கரைக்கும் விதமாக இருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக நிலத்தின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். அலட்சியமாக செயல்பட்டதாக மின்வாரிய ஊழியர்கள் சாமுவேல் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். வர்தா புயலில் சாய்ந்த மின் கம்பங்களை சரி செய்யாததே இது போன்ற விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.

போலீசார் விசாரித்து வந்தாலும், நிலத்தின் உரிமையாளரை கைது செய்தாலும் ஈடு செய்ய முடியாத இந்த இழப்பை எப்படி சரி செய்வது? என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்