Published : 17,Sep 2018 12:59 PM

சீனாவை கலங்கடித்த மங்குத் புயல் : 200 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று

Typhoon-Mangkhut-Slams-Hong-Kong-and-Southern-China

சீனா, ஹாங்காங் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளை மங்குத் புயல் புரட்டிப் போட்டிருப்பதால், மிகப்பெரிய அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

புயல்களின் அரசன் என சீன ஊடகங்கள் வர்ணித்த ‘மங்குத் புயல்’, அந்நாட்டில் பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறாவளிக் காற்றால் பல கட்டடங்கள் சேதமடைந்தன. சில கட்டடங்களில் கடல் அலைகள் ஜன்னல்களை உடைத்தவாறு உட்புகுந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்தன. சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் உருண்டு ஓடின. புயல் அபாயத்தை கருத்தில் கொண்டு குவாங்டாங் மற்றும் ஹைனான் தீவில் இருந்து சுமார் 25 லட்சம் பேர் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். சுமார் 400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 

தெற்கு சீன கடலோர பகுதிகளில் புயல் கடந்த தடங்கள் போர்க்களம் போன்று காட்சியளிக்கின்றன. தற்போது மங்குத் புயல் சீனாவின் மையப் பகுதியை நோக்கி நகர்ந்து வருவதால் குய்சோ, சாங்கிங் மற்றும் யுனானில் மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படும் என அஞ்சப்படுகிறது. புயல் தாக்கத் தொடங்கியதை அடுத்து, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. விபத்துகள் நேர்வதை தடுக்கும் வகையில் முக்கிய சாலைகளும் மூடப்பட்டுள்ளன. புயலுக்கு முன்னதாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக உயிர் சேதங்கள் ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது. அதேசமயம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் ஆயிரக்கணக்கானோரை மீட்க முடியாமல் மீட்புப் படையினர் தவித்து வருகின்றனர். மங்குத் புயல் நாளை வலுவிழந்து, காற்றத்தழுத்த தாழ்வாக மாறும் என்றும், அ‌தன்பிறகே, புயலினால் ஏற்படும் பாதிப்புகள் குறையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஹாங்காங்கிலும் மங்குத் புயல் பெருத்த சேதங்களை ஏற்படுத்தியிருந்தது. இதுவரை மங்குத் புயலுக்கு 65 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். ஏராளமானோர் நிலச்சரிவுகளில் சிக்கி புதைந்திருக்கக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. குறிப்பாக ஆம்பாங் பகுதியில் பலர் மாயமாகி இருப்பதால், அவர்களை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பல பகுதிகளில் கழுத்தளவு நீர் தேங்கியுள்ளதால் மக்கள் வீடுகளில் சிக்கித்தவிக்கின்றனர். தொலைதொடர்புகள் மற்றும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதால், பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. புயல் காரணமாக கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. 

பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. 900-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கிராமப்புறங்களில் வெள்ள நீர் வயல்களை சூழ்ந்திருப்பதால், நெல், சோளம் உள்ளிட்ட பணப் பயிர்கள் முழுமையாக சேதமடைந்துள்ளன. கடந்த 2013ஆம்‌ ஆண்டு, ஹையான் புயல் 7 ஆயிரம் பேரை பலி கொண்டது. இதைத்தொடர்ந்து அங்கு புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தற்போது துரித கதியில் மேற்கொள்ளப்பட்டதால், பெரிய அளவில் உயிர் சேதங்கள் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஆயிரக்கணக்கான மக்கள் தவித்து வருவதை அடுத்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் மீட்புப் பணிகள் மிகவும் மந்த கதியில் நடந்து வருகின்றன. மங்குத் ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து முழுமையாக மீள இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என பிலிப்பைன்ஸ் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிலிப்பைன்ஸின் அண்டை நாடான மக்காவிலும் மங்குத் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளது. வரலாற்றிலேயே முதன்முறையாக அங்குள்ள 42 கேளிக்கை விடுதிகளும் மூடப்பட்டன. தற்போது புயல் கரையைக் கடந்திருப்பதை அடுத்து, அங்கு மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வெள்ளத்தில் சிக்கி தத்தளிப்பவர்களை படகுகள் மூலம் மீட்புப் படையினர் மீட்டு வருகின்றனர்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்