Published : 13,Aug 2018 03:36 PM
அழகிரியின் அதிரடி போக்கு - சமாளிப்பாரா ஸ்டாலின்..?

திமுக தலைவர் கருணாநிதி மறைந்து ஒரு வாரம் ஆன நிலையில், ஸ்டாலின் தலைமை குறித்து மு.க.அழகிரி இன்று காட்டமான விமர்சனத்தை முன் வைத்துள்ளார். திமுகவினர் சிலர் ரஜினியுடன் தொடர்பில் இருப்பதாகவும், பணத்திற்காக விலை போனார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார். அழகிரியின் இன்றைய பேச்சு தமிழக அரசியல் வட்டாரங்களில் ஒரு அதிர்வலையை உருவாக்கியுள்ளது. அழகிரி கட்சியில் இல்லை என்பதால் அவரது பேட்டி குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அழகிரியின் பேச்சு குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி பேசுகையில், “அழகிரியின் பேச்சு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். திமுக தலைவர் கருணாநிதி மறைந்து 10 நாட்களுக்கு பிறகு பேசுவார் என்று நினைத்தேன். ஆனால், ஒருவாரத்திற்குள் பேசியுள்ளார். அழகிரி தற்போது அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. அதனால், அவருடைய இந்தப் பேச்சினை திமுக தொண்டர்கள் எப்படி எடுத்துக் கொள்ளப்போகிறார்கள் என்பதுதான் முக்கியம். அழகிரியின் பேச்சை முழுவதுமாக புறம்தள்ளப் போகிறார்களா? அல்லது ஓரளவு கணக்கில் எடுத்துக் கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
திமுகவை பொறுத்தவரை தற்போது உள்ள செயற்குழு, பொதுக் குழுவில் ஸ்டாலின் ஆதரவாளர்களே அதிகம் இருக்கிறார்கள். ஆனால், இந்த நிலை இப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாது. அழகிரி இன்று பேசியதை பார்த்தால், அவர் தெளிவான செயல்திட்டத்துடன் தான் பேச ஆரம்பித்துள்ளார் என்பது போல் தெரிகிறது. ஸ்டாலினுக்கு சவால் திமுகவுக்கு வெளியேவோ, உள்ளேயோ இல்லை. துரதிருஷ்டவசமாக, அவருடைய குடும்பத்திற்கு உள்ளே இருந்து எழத் தொடங்கி இருக்கிறது. குடும்பத்திற்கு உள்ளே இருக்கும் அதிகார மையங்களை எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதுதான் ஸ்டாலிக்கு முக்கியமான சவால். இந்த விவகாரம் அடுத்தடுத்து எப்படி உருப்பெறப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்றார்.
மூத்த பத்திரிகையாளர் துரை கருணா கூறுகையில், “அழகிரியின் போக்கு திமுகவில் பிரளயத்தையே உருவாக்கும். கருணாநிதி இறக்கும் வரை அமைதி காத்து வந்த அழகிரி, ஓபிஎஸ் பாணியில் மீண்டும் ஒரு தர்மயுத்தத்தை தொடங்கியுள்ளார். 30 ஆண்டுகளுக்கு மேலாக அழகிரிக்கு அரசியல் தாக்கம் இருந்து வந்துள்ளது. அவரது அரசியல் பயணத்தை கருணாநிதியே விரும்பினார். அழகிரியின் அரசியல் பணிகள் குறித்து பல நிகழ்ச்சியில் புகழ்ந்து பேசியுள்ளார். அஞ்சா நெஞ்சன் அழகிரி என்று பெயர் வைத்தது பொய்த்துப் போகவில்லை என்றே கருணாநிதி கூறியுள்ளார். சில இடங்களில் ஸ்டாலினை விடவும் வேகமாக செயல்படக் கூடியவர் அழகிரி என்றே கருணாநிதி பேசியுள்ளார்.
ஆனால், தலைவர் பதவி என்று வருகையில் ஸ்டாலினுக்கே கருணாநிதி அதிக முக்கியத்துவம் கொடுத்தார். கருணாநிதிக்கு இணையாக ஸ்டாலின் 40 ஆண்டுகள் பயணித்து இருக்கிறார். திமுகவில் இளைஞர்களின் புதிய சக்தியை கொண்டு வந்தார். ஸ்டாலினுக்கு எதிராக செயல்பட்டு வந்ததால் அழகிரியை அடியோடு கட்சியில் இருந்தே நீக்கிவிட்டார். ஒரு கட்டத்தில் மகனே இல்லை என சொல்லவேதான், அழகிரி ஒதுங்கி இருந்தார். அழகிரி நீக்கப்பட்ட பின்னர், அவரது ஆதரவாளர்கள் சில கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இருப்பினும், முக்கியமான பல தலைவர்களை ஸ்டாலின் அரவணைத்து கட்சியிலே தக்க வைத்தார்.
கருணாநிதி மறைவை தொடர்ந்து கட்சிக்குள் அவருக்கு முக்கிய பொறுப்பு அளிப்பது குறித்து பேச்சு அடிபட்டது. அதற்கான சமாதான பேச்சுவார்த்தையும் நடைபெற்று இருக்கிறது. ஆனால், அழகிரிக்கு எவ்வித முக்கிய பொறுப்பும் அளிக்கக் கூடாது என்று ஸ்டாலின் தரப்பில் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்கள். அதனால்தான், நாளை செயற்குழு கூட உள்ள நிலையில், இன்று அழகிரி பேசியுள்ளார். அழகிரி தனித்து கட்சி தொடங்கி பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கும் வாய்ப்புள்ளது” என்றார்.
பத்திரிகையாளர் லஷ்மி கூறுகையில், “அழகிரியின் பேச்சு மிகப்பெரிய குழப்பத்தை உருவாக்க இருக்கிறது. தான் இல்லாமல் கட்சியை வழிநடத்த முடியாது என்பதை அவரது பேச்சு காட்டுகிறது. ஸ்டாலினுக்கு நிரந்தரமாக குத்திக் கொண்டிருக்கும் முள் போன்றே அழகிரி இருப்பார். அழகிரியை கட்சிக்குள் இணைத்துக் கொண்டால் அது ஸ்டாலினுக்கு மிகப்பெரிய சிக்கலை உருவாக்கும். அது அவருக்கு பலவீனமாக மாறும்.
அழகிரியை அரவணைத்தோ அல்லது நீக்கியோ எப்படி இந்த விவகாரத்தை கையாளப் போகிறார் என்பதை பொறுத்தே ஸ்டாலினின் அரசியல் எதிர்காலம் தீர்மானிக்கப்படும். அதேபோல் திமுகவின் எதிர்காலமும். தலைவராக பொறுப்பேற்ற பின்னர் ஸ்டாலினுக்கு மூன்று முக்கிய சவால்கள் உள்ளன. 1. அழகிரியை சமாளிப்பது 2. கட்சியின் கட்டுக்கோப்பு 3. சாதகமான நிர்வாகிகளை நியமிப்பது இவை முக்கிய சவால்களாக இருக்கும்.
ஸ்டாலினை பொருத்தவரை தேர்தல் வெற்றி மிகவும் முக்கியமானதாக உள்ளது. வருகின்ற திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களில் திமுகவை நிச்சயம் வெற்றி பெற வைக்கவேண்டும். அவ்வாறு வெற்றி பெறவில்லை என்றால் ஸ்டாலின் அதிருப்தியாளர்கள் அழகிரி பின்னோ அல்லது வேறு ஏதாவது ஒரு கட்சியின் பின்னோ செல்லும் நிலை ஏற்படும்” என்றார்.