Published : 09,Apr 2018 10:42 AM

பிளாக்கில் விற்கப்படும் ஐபிஎல் டிக்கெட்: ஒருவர் கைது..

IPL-Chennai-Match-Tickets-Sales-in-Block--A-man-was-Arrested

சென்னையில் ஐபிஎல் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்றவரை கைது செய்ததோடு, அவரிடமிருந்த 30 டிக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் கடந்த 2ஆம் தேதி விற்பனை செய்யப்பட்டது. இதற்காக சேப்பாக்கம் மைதானத்தில் நள்ளிரவு முதலே குவிந்த ரசிகர்கள், டிக்கெட் கவுன்ட்டர்களில் காலை 9.30 மணியில் இருந்து நண்பகல் 12.30 மணி வரையிலும், பின்னர் பிற்பகல் 2 மணியில் இருந்து 6 மணி வரையிலும் டிக்கெட்டுகளைப் பெற்றுச்சென்றனர். ஒருவருக்கு 2  டிக்கெட் வீதம் கொடுக்கப்பட்டது. 

ரூ.6,500, ரூ.5,000, ரூ.4,500, ரூ.2,500, ரூ.1,500, ரூ.1,300 ஆகிய கட்டணங்களில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. இதுதவிர www.chennaisuperkings.com, www.bookmyshow.com ஆகிய இணையதளங்களிலும் டிக்கெட் பதிவு செய்யப்பட்டது. 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சென்னை அணி, ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ளதால், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை அணி பயிற்சியில் ஈடுபட்டபோதே அதைக்காண ஏராளமான ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்கள் தீவிரமடைந்தன. ஆளும் கட்சி உண்ணாவிரதம், எதிர்க்கட்சிகளின் சாலை மற்றும் ரயில் மறியல்கள், மாணவர்கள் போராட்டம் என அனைத்து இடங்களிலும் காவிரிப் போராட்டம் வெடித்தது. ஒருபுறம் தூத்துக்குடியில் 50 நாட்களையும் கடந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்கள் சென்று கொண்டு உள்ளது. இந்தப் போராட்டங்கள் எல்லாம் ஐபிஎல் வந்தால், திசைத் திரும்பிவிடும் என்ற கருத்துகள் எழும்பின. 

இந்த சூழலில், காவிரி விவகாரத்தில் உலகளவில் கவனத்தை ஈர்க்க ஐபிஎல் போட்டியை புறக்கணியுங்கள் என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறினார். பின்னர் அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் அதே கருத்தை முன்வைத்தனர். சில அரசியல் கட்சியினர் மைதானத்திற்கு டிக்கெட்டை பெற்றுக்கொண்டு சென்று, அங்கு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி எச்சரிக்கை விடுத்தனர். இதனால் ஐபிஎல் போட்டி நடைபெறும் போது, ரசிகர்கள் மத்தியில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் காவல்துறையினர் கவனத்துடன் உள்ளனர். 

எனவே விற்கப்பட்ட டிக்கெட்டுகள் வேறு யாருக்கும் விற்கப்பட்டு, அதன்மூலம் போராட்டக்காரர்கள் ஐபிஎல் போட்டியை காணவரும் ரசிகர்கள் போல வந்து பிரச்னையில் ஈடுபடாமல் தடுக்க வேண்டும் என காவல்துறையினர் தீவிரமாக உள்ளனர். இந்நிலையில் திருவல்லிக்கேணி சாலையில் ஐபிஎல் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், 1,300 ரூபாய் டிக்கெட்டை, 3 ஆயிரம் மற்றும் 5 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்த நபரை பிடித்தனர். 

அவரிடம் விசாரித்ததில் கொடுங்கையூரைச் சேர்ந்த அம்ஜத்கான் என்பது தெரியவந்தது. அவரிடமிருந்த 30 டிக்கெட்டுகளை பறிமுதல் செய்த காவல்துறையினர், டிக்கெட்டை விற்கச் சொன்னது யார்? வேறு எங்கெல்லாம் டிக்கெட் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். 
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்