[X] Close

முதலில் ஆன்மிக யாத்திரை என்றார்கள்; பின் ஆட்சியை பிடித்தார்கள்!

rama-ratha-yatra-in-tamilnadu--special-story-on-puthiya-thalaimurai

மறுபடியும் சூடு பிடித்திருக்கிறது, தமிழக அரசியல் களம். காரணம், ரத யாத்திரை. அதற்கு எதிராக ஒருமித்தக் குரலில் போராட தொடங்கியுள்ளன எதிர்க்கட்சிகள். ‘இது அண்ணா பிறந்த மண்; பெரியார் பிறந்த மண்’ என்ற கோஷங்கள் வலிமையாக ஒலிக்கத் தொடங்கியுள்ளன. ‘இது ஜனநாயக நாடு. ஒரு அரசின் கடமை எல்லோருக்கும் பாதுகாப்பு அளிப்பது. ரத யாத்திரையை வைத்து ஏன் அரசியல் ஆதாயம் தேட வேண்டும்’ என சட்டப்பேரவையில் பேசியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.


Advertisement

உண்மைதான். ரத யாத்திரையை வைத்து மதவாத சக்திகள் அரசியல் ஆதாயம் தேடிவிடக்கூடாது என்றே எதிர்கட்சிகள் பதறுகின்றன. அதற்கு பல முன்னுதாரணங்கள் உண்டு. இதே ஆன்மிக ரத யாத்திரைதான் அயோத்தியில் இன்று வரை அமைதியை நிறுவ விடாமல் தடுத்து வருகிறது. மதச்சார்பற்ற ஒரு நாட்டில் மதத்தை கொண்டு மக்களை பிளவுபடுத்த பல மதவாத சக்திகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன.


Advertisement

முதல்வரின் குரல் நியாயம்தான். இது ஜனநாயக நாடுதான். ஆனால் அதற்கு குந்தகம் செய்யும் காரியங்களில் யாராவது நடந்து கொண்டால் அவர்களுக்கும் பாதுகாப்பு அளித்து காக்குமா அரசு? அதுதான் இங்கே பலரது கேள்வி. அமைதி நிலவும் தமிழ்நாட்டில் ஹெச்.ராஜா ஒரு ட்விட் போடுகிறார். இல்லை, இல்லை அவரது அட்மின் ஒரு ட்விட் போடுகிறார். உடனே சில இடங்களில் அதன் விளைவு எதிரொலிக்கிறது. பெரியார் சிலை உடைக்கப்படுகிறது. 

அதனை அடுத்து சென்னை அண்ணா சாலையிலுள்ள பெரியார் சிலை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பெரியார் சிலைகளுக்கு பாதுகாப்பு தர வேண்டியுள்ளது. அதனால் பதட்டமான நிலை தமிழ்நாட்டில் தலைத்தூக்குகிறது. சிக்கலை தேவையில்லாமல் ஹெச்.ராஜாவின் அட்மின் உருவாக்குகிறார். அதன் அடிப்படையில் இன்று வரை அரசு தரப்பில் ஒரு நடவடிக்கையும் இல்லை. அதைதான் ஸ்டாலின் இன்று தனது கைதுக்கு முன் வலியுறுத்தி நியாயம் கேட்கிறார். மேலும் இன்று கூட புதுக்கோட்டையில் ஒரு பெரியார் சிலை உடைக்கப்படுகிறது. 

தேவையற்ற பேச்சால் வந்த விளைவு; தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக அமைதி கேள்விக்குறியாகிறது. இந்தப் பின்னணியில்தான் இன்று ராமர் ரத யாத்திரையை அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்க்கத் தொடங்கியுள்ளன. ராமர் ஒரு கடவுள். அவரை வணங்குவது என்பது அவரவர் உரிமை. அதனை அரசியல் அடையாளமாக முன்னெடுப்பதால்தான் பல பிரச்னைகள் தலை தூக்குகின்றன. சரியாக 26 ஆண்டுகளுக்கு முன்பாக முதன்முறையாக அத்வானி ஒரு ரத யாத்திரையை ஆரம்பிக்கிறார். அவருக்கு திலகர்தான் முன்னோடி. அவர்தான் அதுவரை இல்லாத ஒரு புதிய கலாச்சாரத்தை அரசியல் களத்தில் உருவாக்கித் தருகிறார். விநாயகர் ஊர்வலத்தை ஓர் அரசியல் இயக்கமாக மாற்றுகிறார். அதனை அரசியல்மயப்படுத்தி மக்களை ஒன்று திரட்டுகிறார். அதன் விளைவால் இன்றுவரை ஒரு வகுப்புவாத அரசியல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதுவரை மக்கள் மனங்களில் மிக அமைதியான வழிப்பாடாக இருந்து வந்த விநாயகர் வழிபாடு அரசியல் நிலைப்பாடாக மாற்றப்படுகிறது. 


Advertisement

ஆக, மறைமுகமாக ஒரு மத அரசியல் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. அதனை யாராலும் மறுக்கவே முடியாது. அதற்கும் பலர் காரணம் சொல்லலாம். இந்துக்களின் உரிமையை அவர்கள் செய்வதற்கு அனுமதியில்லையா? ஆம். அவர்களுக்கு உரிமை உள்ளதுதான். ஆனால் அந்த உரிமை ஊருக்குள் புகுந்து பல உரசல்களை ஏற்படுத்தாமல் இருக்கும் வரை அதற்கு யாரும் தடை கேட்கவில்லை. அது சர்ச்சையாக வெடிக்க ஆரம்பிக்கும் போது பல சிக்கல்கள் எழுகின்றன.

இன்று கூட பல ஆன்மிக யாத்ரிகர்கள் ராமேஸ்வரத்திற்கு வருகிறார்கள். ஆன்மிக பயணத்தின் அடிப்படையில் வழிப்பாடு நடத்துகிறார்கள். அப்போது எல்லாம் எந்தத் தடைகளையும் யாரும் கோருவதில்லை. ஆனால் ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிஷத் போன்ற அமைப்புகள் மேற்கொள்ளும் அரசியல் ஆன்மிக அடையாளத்திற்குத்தான் இங்கே சிக்கல் எழுகிறது.

1990 ஆண்டு உத்தர பிரதேசத்தில், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி அத்வானி ரத யாத்திரையை ஆம்பித்தார். குஜராத்தில் உள்ள சோம்நாத் பகுதியில் இருந்து புறப்பட்ட யாத்திரை அயோத்தி நோக்கி முன்னேறியது. அப்போது பிஹார் மாநிலம் சமஸ்திபூர் வழியாக வாகனம் சென்ற போது அதனை தடுத்து நிறுத்தி அத்வானியை கைது செய்யும் படி  அன்றைய முதல்வர் லாலு பிரசாத் யாதவ் இரண்டு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.  அதன் பொருட்டு அன்று ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த ஆர்.கே.சிங், மற்றும் ராமேஷ்வர் ஓரான் ஐபிஎஸ் இருவரும் சென்று சர்க்யூட் ஹவுஸில் ஓய்வெடுத்து கொண்டிருந்த அத்வானியை கைது செய்தனர். 

1990ல் நடந்த ரத யாத்திரையின் விளைவால் 1996ல் பாஜக அரசு மத்தியில் ஆட்சியை கைப்பற்றியது. அதாவது ஆறு ஆண்டுகளில் அவர் நினைத்த இடத்தை அடைந்தார்கள். வாஜ்பாய் பிரதமரானார். அத்வானி துணை பிரதமர் ஆனார். ஆனால் அந்த ஆட்சி அதிக நாட்கள் நீடிக்கவில்லை. சரியாக சொன்னால் 13 நாட்களில் ஆட்சியை கவிழ்க்க முடிவு செய்தார் ஜெயலலிதா. ‘வாங்கய்யா வாஜ்பாய் அய்யா..’ என மேடைகளில் பாடி வரவேற்ற ஜெயலலிதாதான் வாஜ்பாய்க்கு மறுபடியும் புதிய பாடம் கற்றுக் கொடுத்தார். மீண்டும் பல போராட்டத்திற்குப் பிறகு ஆட்சியை பிடித்தது பாஜக.

பாஜக போய் காங்கிரஸ் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை பிடித்ததும் அத்வானியை கைது செய்த ஐஏஎஸ் அதிகாரி ஆர்.கே.சிங், மத்திய உள்துறை செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது. இவர் பின்னர் ஓய்வு பெற்றதும் பாஜகவில் சேர்ந்தார். அதன் பின் 2014 ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பிஹார் மாநிலம் ஆரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு பாஜகவின் மத்திய அமைச்சராகும் அளவுக்கு இவரது அரசியல் செல்வாக்கு உயர்ந்தது.  

ஆக, ஓர் அதிகாரி அரசியல் அங்கிகாரம் பெறுவதற்கு பின்புலமாக இங்கே ரத யாத்திரைதான் இருந்துள்ளது. இந்தப் பின்னணியில் அரசியல் இல்லை, ஆன்மிகம்தான் என்று எப்படி நியாயப்படுத்த முடியும்? அதோடு மக்கள் பிரச்னைகள் பல தலைத்துக்கியுள்ள காலத்தில் எப்போது பார்த்தாலும் ராமரை வைத்து ரத யாத்திரை நடத்துவது ஏன்? என்கிற கேள்வியும் இயல்பாக தோன்றவே செய்கிறது. விவசாயிகள் மும்பையில் திரள்கிறார்கள். போராட்டம் நடத்துகிறார்கள். நீதி கேட்கிறார்கள். அவர்களின் தற்கொலை பற்றி உச்சநீதிமன்றமே கேள்வி எழுப்புகிறது. இதைக் குறித்து எல்லாம் கவலை கொள்ளாமல் ரத யாத்திரைக்கு மட்டும் உடனே கருத்து சொல்ல வரும் பாஜகவினரின் அரசியல்தான் என்ன?  

தமிழ்நாட்டிற்குள் நுழைந்துள்ள ராம ராஜ்ஜிய ரத யாத்திரையில் உள்ள ஒரு சாமியார் ஊரைக்கடக்கையில் மக்களை சந்தித்துப் பேசுகிறார். அவர் சொல்வது என்ன? “அயோத்தியில் ராமர் கோயில் கட்டியே தீருவோம்” என்கிறார். நீதிமன்றத்தில் நீண்டக்காலமாக தீர்க்கப்படாமல் உள்ள பிரச்னையை குறித்து நீதிமன்றத்திற்கு வெளியே அவர் விவாதிக்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் பற்றி கேள்வி கேட்டால் அது நீதிமன்றத்தில் உள்ளது என்கிறார்கள் பாஜகவினர். மேலாண்மை வாரியம் பற்றி வெளியில் பேசக் கூடாது. நீதிமன்றமே காவிரி நீருக்கு நீதி வழங்கும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு.

ஆனால் அதே நீதிமன்றத்தில் உள்ள ராமர் கோயில் பற்றி வெளியே விவாதிக்கலாம். சந்நியாசி ஒருவர் கருத்துக் கூறலாம். ‘கட்டியே தீருவோம்’ என சட்டத்திற்குப் மாறாக கருத்து தெரிவிக்கலாம். அமைதியாக போகும் யாத்திரையில் ஏன் இந்த நஞ்சுக் கலக்கப்படுகிறது என கேட்கின்றனர் பல கட்சிகள். அப்படி கேட்டால் அவர்களை ‘ஹிந்து விரோதி’ என்கிறார்கள். எல்லா கோயிகளுக்கும் போய் கொண்டுதான் இருக்கிறார் ஸ்டாலின். அவர் ஹிந்து விரோதியா? அவர் குடும்பமே ஆகம விதிகளின் அனுகிரஹத்தோடுதான் செயல்படுகிறார்கள். அது ஏதோ பூடகமாக இல்லை. வெளிப்படையாகவே நடக்கிறது. அப்புறம் எங்கே வந்தது ஹிந்து விரோதம்? 

இன்னொன்றையும் நாம் கூறியாக வேண்டும். நடுநிலைவாதிகள் முன் வைக்கும் தீர்வு இது. அமைதியாக விட்டிருந்தால் அந்த ரத யாத்திரை கண்டுக்கொள்ளாமலே சென்றிருக்கும் என்பது. அப்படி அமைதியாக பாஜகவினர் ‘மெர்சல்’ விவகாரத்தை விட்டிருக்கலாமே என விஜய் ரசிகன் ஒருகேள்வியை முன் வைத்தால்? அப்படி அமைதியாக வைரமுத்துவை விட்டிருக்கலாமே என்று வைரமுத்துவின் வாசகன் ஒரு கேள்வியை முன் வைத்தால்? ‘எங்களுக்கும் சோடா பாட்டில் வீசத் தெரியும்’ என சாத்வீக வழியில் பயணிக்கும் ஜீயர் ஒருவர் பேசாமல் விட்டிருந்தால்... இப்படி பல பிரச்னைகளை விட்டிருந்தால் ஒன்றுமே நடந்திருக்கப் போவதில்லை. ஆனால் இந்த யாத்திரை பிரச்னை அல்ல, எதிர்க்கட்சிகளுக்கு. அதற்கு பின்னால் புதைந்திருக்கும் கொள்கைதான் பிரச்னை. ராம ராஜ்ஜியம். ராமாயணம் கல்விப் புலத்திற்குள் கொண்டு வருவது என அது முன் வைக்கும் எதுவும் காலத்திற்கு உகந்ததல்ல. இன்று உலகமே ஒரு கூரைக்குள் கொண்டுவரபட்டுள்ளது. அந்தக் காலத்தில் மீண்டும் மதத்தின் மாயைக்குள் மனிதனை தள்ளிவிடுவது நல்லது அல்ல; அது எல்லா மதத்திற்கும் உகந்ததுதான்.


Advertisement

Advertisement
[X] Close