[X] Close

ஜெயலலிதாவின் மகள் என பெங்களூரு பெண் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

Bangalore-women-filed-appeal-in-Supreme-court-for-Her-was-Jayalalitha-daughter

ஜெயலலிதா மகள் என தன்னை அறிவிக்க கோரி பெங்களூரு பெண் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


Advertisement

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக அறிவிக்க கூடாது எனவும்,
அது தனக்கும், தனது தம்பிக்கும் உரிய சொத்து என்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து தமிழக அரசு தீபாவின் மனுவை பரிசீலனை செய்யும் என தெரிவித்ததால், வழக்கு முடித்து வைக்கப்பட்டது. 

ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அடுத்த வாரம் வரவுள்ள நிலையில், பெங்களூருவை சேர்ந்த மஞ்சுளா என்ற அம்ருதா தன்னை ஜெயலலிதாவின் மகள் என அறிவிக்கக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். அத்துடன் தனக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்யவும் அவர் வழக்கில் கேட்டுக்கொண்டுள்ளார். டி.என்.ஏ பரிசோதனைக்காக மறைந்த ஜெயலலிதாவின் உடலையும் மெரினாவில் இருந்து தோண்டி எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Advertisement

ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கக்கூடாது என்பதால் இத்தனை வருடங்கள் உண்மையை கூறவில்லை என்றும், தனது வளர்ப்புத் தந்தை கடந்த மார்ச் மாதம் இறந்துவிட்டதால் தற்போது உண்மையை கூறுவதாகவும் வழக்கில் அவர் தெரிவித்துள்ளார். மேலும் வைஷ்ணவ ஐயங்கார் பிராமண முறைப்படி ஜெயலலிதாவுக்கு இறுதிச்சடங்கு செய்யவேண்டும் எனவும் அம்ருதா கேட்டுக்கொண்டுள்ளார். அம்ருதாவின் கோரிக்கை மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை நடத்தவுள்ளது. ஏற்கனவே ஜெயலலிதாவின் மகன் என கூறி ஒருவர் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது. 

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close