Published : 15,Mar 2023 08:21 AM
கே.எல்.ராகுல் உள்ளே; கே.எஸ்.பரத் வெளியே -ஆஸி.க்கு எதிரான ஒருநாள் அணியில் என்னென்ன மாற்றம்?

ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நெருங்கி வரும் நிலையில், அதற்கான முன்னோட்டம் மாதிரி நடைபெற உள்ள இத்தொடருக்காக இந்திய அணியில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் முடிவடைந்தது. இந்த தொடரை 2 - 1 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதனையடுத்து இரு அணிகளும் மோதும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. இப்போட்டிகள் வரும் மார்ச் 17ம் தேதி முதல் மும்பையில் தொடங்கி மார்ச் 22ம் தேதி சென்னையில் நிறைவு பெறுகிறது.
இந்திய அணியின் 'ரெகுலர்' கேப்டன் ரோகித் முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார் எனவும் இவருக்குப் பதில் 'ஆல் ரவுண்டர்' ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக செயல்பட உள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நெருங்கி வரும் நிலையில், அதற்கான முன்னோட்டம் மாதிரி நடைபெற உள்ள இத்தொடருக்காக இந்திய அணியில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது.
'ஆல் ரவுண்டர்' ரவீந்திர ஜடேஜா பல மாத இடைவெளிக்குப் பின் ஒருநாள் அணியில் களமிறங்க காத்திருக்கிறார். தனிப்பட்ட குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நியூசிலாந்துக்கு எதிரான தொடரை தவறவிட்ட கே.எல்.ராகுல் மற்றும் அக்சர் பட்டேல் ஆகிய இருவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளனர். இவர்களுடன் ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்குப் பிறகு, வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட்டும் ஒருநாள் அணியில் இடம் பிடித்திருக்கிறார்.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் அணியில் இடம்பிடித்திருந்த கே.எஸ்.பாரத் மற்றும் ரஜத் படிதார் ஆகிய இருவருக்கும் இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. கே.எல்.ராகுல் மீண்டும் அணிக்கு திரும்பியதால் கே.எஸ்.பாரத்துக்கு இடம் கிடைக்கவில்லை. அகமதாபாத் டெஸ்டின் கடைசி இரு நாளில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ், முதுகுவலி காரணமாக விலகினார். ஏற்கனவே வங்கதேச தொடரில் இதே பிரச்னை இருந்தது. தற்போது 'ஸ்பெஷலிஸ்ட்' மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. இவர் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் இடம்பெறுவது சந்தேகம் தான். இவருக்கு மாற்றாக சஞ்சு சாம்சன் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. மாறாக மாற்று வீரர் யாரும் அறிவிக்கப்படவில்லை.
இந்திய அணி விபரம்: ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ், சூர்யகுமார், லோகேஷ் ராகுல், இஷான் கிஷான், ஹர்திக் பாண்ட்யா (துணைக் கேப்டன்), ஜடேஜா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், சஹால், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், ஷர்துல் தாகூர், அக்சர் படேல், உனத்கட்.