Published : 08,Feb 2023 12:37 PM
துருக்கி சிரியா நிலநடுக்க துயரத்தில் 7900-ஐ கடக்கும் பலி எண்ணிக்கை; கரம் நீட்டும் இந்தியா!

துருக்கி - சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7900-ஐ தாண்டியுள்ள நிலையில், இது மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திங்களன்று துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட அடுத்தடுத்த தொடர் நிலநடுக்கங்கள் காரணமாக இரு நாடுகளின் முக்கிய நகரங்களும் உருக்குலைந்து காணப்படுகிறது. இந்த நிலநடுக்த்தில் சிக்கி இதுவரை 7,926 பேர் உயிரிழந்துள்ளதாக சி.என்.என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
துருக்கியில் குறைந்தது 5,894 பேர் உயிரிழந்திருப்பர் என சொல்லப்படும் நிலையில், 34,810 பேர் காயமடைந்துள்ளதாக துருக்கியின் துணை ஜனாதிபதி ஃபுவாட் ஒக்டே, நேற்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். இதேபோல் 'ஒயிட் ஹெல்மெட்ஸ்' என்று அழைக்கப்படும் சிரியா சிவில் டிஃபென்ஸ் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வடமேற்கு சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,220 ஆகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,600 ஆகவும் உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இரு இடங்களிலும் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.
இதையடுத்து நேற்று (செவ்வாய்) துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் அவசரகால நிலையை அறிவித்தார். தலைநகர் அங்காராவில் உள்ள மாநில தகவல் ஒருங்கிணைப்பு மையத்தில் உரையாற்றிய எர்டோகன், 'அரசியலமைப்புச் சட்டத்தின் 119-வது பிரிவு எங்களுக்கு வழங்கிய அதிகாரத்தின் அடிப்படையில், நாங்கள் முடிவு செய்து அவசர நிலையை அறிவித்துள்ளோம். பூகம்பங்கள் ஏற்பட்ட 10 மாகாணங்களை உள்ளடக்கிய இந்த அவசர முடிவு மேலும் மூன்று மாதங்கள் நீடிக்கும்' என்று அவர் கூறினார்.
துருக்கி மற்றும் சிரியாவில் திங்கட்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, `மெக்சிகோவின் நன்கு பயிற்சி பெற்ற மீட்பு நாய்கள் துருக்கிக்கு விரைந்துள்ளன’ என்று சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. மெக்சிகோ, வடக்கின் விளிம்பில் அமைந்திருப்பதால் அடிக்கடி பூகம்ப தாக்குதலுக்கு ஆளாகும் நாடு என்பதால் அங்கு பயிற்சி பெற்ற நாய்கள் நிறையவே உள்ளன. அவைதான் மீட்புப்பணிக்காக துருக்கிக்கு விரைந்துள்ளன.
நிலநடுக்கத்திற்குப் பிறகு நிலவும் நெருக்கடியின் காரணமாக துருக்கிக்கு இந்தியா தனது ஆதரவுக் கரத்தை நீட்டியுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் சிறப்புப் பயிற்சி பெற்ற நாய்ப்படை மற்றும் மருத்துவப் பொருட்கள், துளையிடும் இயந்திரங்கள் ஆகியவையுடன் விமானம் நேற்று துருக்கிக்கு புறப்பட்டுச் சென்றது. இதுபற்றி வெளியுறவுத்துறை அமைச்சர் அதிகாரபூர்வமாக தெரிவித்தார்.
An @IAF_MCC flight carrying 6 tons of Emergency Relief Assistance has taken off for Syria.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) February 7, 2023
Consignment consists of life saving medicines and emergency medical items.
Indian stands in solidarity with those most affected by this tragedy. pic.twitter.com/cqRavGX2yB
அதேபோல் பல நாடுகளும் துருக்கிக்கு உதவிக்கரங்களை நீட்டியுள்ளன. நிலநடுக்கம் காரணமாக அந்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.