Published : 01,Feb 2023 07:52 PM
பைக் மோதிய சம்பவத்தில் சர்ச்சை - மீண்டும் வைரலாகும் திருப்பூர் வட இந்தியர்கள் வீடியோ!

திருப்பூர் - பெருமாநல்லூர் அருகேயுள்ள பரமசிவம்பாளையத்தில் இரு சக்கர வாகன சாவியை தர சொல்லி வட இந்தியர்களிடம் வண்டியின் உரிமையாளார் சண்டையில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு நிலவி வருகிறது.
தமிழ்நாட்டில் தற்பொழுது வட இந்திய தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னை, கோவை போன்ற முக்கிய நகரங்களில் உரிமையாளர்களால், வட இந்தியர்கள் வேலைக்கு அமர்த்தபடுகின்றனர். அவ்வாறு வேலைக்கு அமர்த்தப்பட்ட சில வட இந்தியர்கள், உள்ளூர் மக்களுடன் கைகலப்பிலும் வாக்குவாதத்திலும் ஈடுபடுவதால், தமிழ்நாட்டில் வசிக்கும் மொத்த வட இந்தியர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது.
இவ்வாறு வேலைக்கு வந்தவர்களில் பெரும்பாலோர் திருப்பூரை சுற்றியுள்ள பகுதிகளில் பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், இவர்களுடனான மோதல் ஒன்று வீடியோவாக எடுக்கப்பட்டு, சமூக வளைதளங்களில் பகிரப்பட்டு, பேசும் பொருளாக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் - பெருமாநல்லூர் அடுத்துள்ள பொங்குபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பரமசிவம்பாளைத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வட இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜனவரி 29ம் தேதி அதே பகுதியை சேர்ந்த சம்பத் தனது மகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக அவரது இரு சக்கர வாகனத்தில் பரமசிவம்பாளையம் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராவிதமாக அங்கு நின்று கொண்டிருந்த வட இந்தியர் ஒருவர் மீது மோதியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து அங்கிருந்த வட இந்தியர்கள் ஒன்று திரண்டு சம்பத்தை சிறை பிடித்து அவரிடமிருந்த 500 ரூபாய் பணத்தையும் பெற்று கொண்டு இரு சக்கர வாகன சாவியை தராமல் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சம்பத் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு கொண்டு அவ்வழியாக வந்த இன்னொருவரின் வாகனத்தில் சென்று தனது மகளை அழைத்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் சம்பத் என்பவர் வடமாநில இளைஞர்களிடம், தெரியாமல் பைக்கில் மோதிவிட்டதாகவும் அதற்கு தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தன்னுடைய பைக்கை கொடுத்துவிடுமாறும் கெஞ்சுவதுபோல் உள்ளது. ஆனால், அந்த வீடியோவின்படி இறுதிவரை அவர்கள் பைக் சாவியை தரவில்லை. பின்னர், தன்னுடைய குழந்தையை அழைத்துக் கொண்டு வந்த பின்னர் மீண்டும் சிலருடன் சம்பத் பேசுவது அந்த வீடியோவில் உள்ளது. வண்டியின் சாவியை கொடுத்துவிடுமாறும் சம்பத்திற்கு ஆதரவாக சிலர் அந்த இளைஞர்களிடம் வலியுறுத்துவது போல் உள்ளது.
இதில், உண்மையில் என்ன நடந்தது? அந்த வீடியோ எடுப்பதற்கு முன்பும், பின்பும் என்ன நடந்தது என்பது குறித்து விரிவான தகவல்கள் வெளியாகவில்லை. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பெருமாநல்லூர் போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே வடமாநில தொழிலாளர்கள் தமிழக தொழிலாளர்களை தாக்கிவிட்டதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு வீடியோ வைரலாக பகிரப்பட்டது. ஆனால், அந்த வீடியோ தொடர்பாக பகிரப்பட்ட தகவல்கள் தவறானவை என்று காவல்துறை தரப்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது. டீக்கடையில் ஏற்பட்ட சிறிய கைகலப்பே பெரிய பிரச்னைக்கு வித்திட்டது என்பதும் அது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டதும் பின்னர் செய்திகளில் வெளிவந்தது.