Published : 07,Oct 2022 02:53 PM

`நம்மை சுற்றி நல்ல நண்பர்கள் இருந்தா போதும்’- வெற்றி ரகசியம் பகிரும் கிரிக்கெட்டர் நடராஜன்

Goal-can-be-achieved-only-by-overcoming-challenges-Cricketer-Natarajan

விடா முயற்சி, கடின உழைப்பு, தன்னடக்கம், இவற்றை கடைபிடித்து விளையாண்டால் யார் வேண்டுமானலும் எந்த உச்சத்தையும் தொடலாம் என்று இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பேசினார்.

திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 37-வது ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா பிஎஸ்என்ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று (06.10.2022) நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் கலந்து கொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பையை வழங்கி சிறப்புரையாற்றினார்.

image

அப்போது அவர், “எங்க ஊர்ல என்ன பாத்து, என்ன தம்பி எப்ப பாத்தாலும் பந்த தூக்கிக்கிட்டு பசங்க கூடவே திரியிற. வீட்டை பாக்க மாட்டியா நீதான் வீட்டுக்கு பெரிய பையன் என்று எல்லாரும் சொல்லுவாங்க. ஆனால், எனக்கு கிரிக்கெட்னா உயிர். அதையெல்லாம் காதுல வாங்கிக்க மாட்டேன்.

நான் முறைப்படி கிரிக்கெட் கத்துக்கல. டென்னிஸ் பால்லதான் கிரிக்கெட் விளையாண்டுக்கிட்டு இருந்தேன். விளையாண்டு பரிசு வாங்குறதவிட கப்பு வாங்குறதுல எனக்கு அலாதி ஆசை. டென்னிஸ் பால் கிரிக்கெட் எங்கு நடந்தாலும் போயிருவேன். கிரிக்கெட்னா டென்னிஸ் பால் மட்டும்தான்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன்.

சேலம் மாவட்டத்த விட்டு நான் எங்கேயும் போயி கிரிக்கெட் விளையாண்டது கெடையாது. அதேபோல எங்க அப்பா அம்மா ரொம்ப கஷ்டப்பட்டுதான் எங்கள படிக்க வெச்சாங்க நோட்டு புத்தகம் வாங்க கூட முடியாது. அரசுப் பள்ளியிலதான் படிச்சோம். அதற்கு கைமாறாக இந்திய அணியில் விளையாண்டு அப்பா அம்மாவுக்கு பெருமை சேர்த்திருப்பதாக நெனைக்கிறேன்.

image

கிராமபுறத்தில் இருந்து வரும் மாணவர்கள் நல்ல விளையாடுவாங்க. ஏன்னா நானும் கிராமத்துல இருந்துதான் வந்திருக்கேன். ஸ்கூல் சம்மர் லீவுல வேலைக்கி போயிருக்கேன். செங்கல் சூளைக்கு போயிருக்கேன், லாரி வேலைக்கு போயிருக்கேன், கட்டட வேலைக்கி போயிருக்கேன்... இப்படி நிறைய வேலைகளுக்கு போனதுண்டு. அந்தளவுக்கு வறுமையான குடும்பம் எங்களுடையது. அப்படி கஷ்டப்பட்டுதான், இன்னிக்கு இந்த உயரத்தை அடைஞ்சிருக்கேன்.

image

எல்லார் வாழ்விலும் யாராச்சும் ஒருத்தர் வழிகாட்டியா இருப்பாரு. அதுமாதிரி எனக்கு வழிகாட்டிய ஜெயபிரகாஷ் என்ற அண்ணன் இருந்தாரு. இப்பவும் என்னோட வழிகாட்டியா அவரேதான் இருக்காரு. நீங்கள்லாம் நல்லா விளையாண்டு பெரிய இடத்தை அடையணும்னு தான் கிரிக்கெட் சங்கத்துல இருக்குறவுங்க நிறைய உழைக்கிறாங்க. அதை பயன்படுத்தி எல்லா மாவட்டத்துல இருந்தும் என்னைய போல ஒருத்தர் இந்திய அணிக்கு கிரிக்கெட்டரா வரணும். அதுதான் என்னோட ஆசை.

திண்டுக்கல் மாவட்டத்துல முகமது, சுதீஷ் போன்ற ரஞ்சி வீரர்கள் வருவதற்கு காரணம் வெங்கட்ராமன் சார்தான். இவர்கள் போல இன்னும் நெறைய வீரர்கள் வரணும். ஒரு பாதையை தேர்த்தெடுத்தால் அதை நோக்கி போய்க்கிட்டே இருக்கணும். அதுல நெறைய தடைகள் வரும். நான் என்னோட இன்னிங்ஸை தடையில் இருந்துதான் ஆரம்பிச்சேன், இதை நான் கஷ்டமாக நினைக்காமல் சவாலாக ஏற்றுக் கொண்டேன்.

image

அந்த சவாலை கடந்து சென்றால்தான் நமது குறிக்கோளை அடைய முடியும். நான் எந்த மேட்சுல விளையாண்டாலும் அந்த மேட்சுல் ஜெயிக்கணும். என்னை பொறுத்தவரை, விளையாடும் ஒவ்வொரு நாளும் நல்லா விளையாடணும். அதுதான் என்னோட குறிக்கோளா இருக்கும். தமிழ்நாடு அணிக்கு மட்டும் விளையாடணும் என்ற நோக்கம் இருந்தது. இப்போ இந்திய அணிக்கு விளையாடுறேன். இந்த அளவுக்கு வந்திருக்கேன்னா, அதுக்கு என்னோட கடின உழைப்பே காரணம்னு நெனைக்கிறேன்.

நல்ல நண்பர்கள் நம்ம கூட இருந்தாங்கன்னா அவங்களோட தூண்டுதலின் பேரில் நாம பெரிய இடத்தை அடைய முடியும். எனக்கு என்னை யாராவது மோட்டிவேஷன் செய்தால் ரொம்ப பிடிக்கும். என்னோட நண்பர்கள் எனக்கு கொடுத்த மோட்டிவேஷன் தான், என்னோட இந்த அளவுக்கான வெற்றிக்கு காரணமாக இருக்குமென நினைக்கிறேன். நான் எந்த இடத்தில் துவண்டு போயிருந்தாலும் தட்டிக்கொடுத்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர வைப்பாங்க.

விடா முயற்சி, கடின உழைப்பு, தன்னடக்கம், இதையெல்லாம் கடைபிடித்து விளையாண்டால் யார் வேண்டுமானலும் எந்த உச்சத்தை வேண்டுமானாலும் அடையலாம். அதை மனதில் வச்சு, நீங்கள் எல்லாருமும் ஜெயிச்சு வாங்க” என்றார்.

image

இதில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி, துணைச் செயலாளர் வெங்கட்டராமன், முன்னாள் கிரிக்கெட் சங்க துணைத் தலைவர் சாம்பாபு, மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் ரகுராம், செயலாளர் அமர்நாத், துணைச் செயலாளர்கள் மகேந்திர குமார் மற்றும் ராஜமோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கல்லூரி ஹாஸ்டலில் நடந்த சாய் வித் சாம்பியன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடராஜனுக்கு ஹாஸ்டல் மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பின்பு கேக் வெட்டிய நடராஜனிடம் கல்லூரி கிரிக்கெட் வீரர்கள் கேட்ட கேள்விகளுக்கு சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.

இதில், கல்லூரி உடற்கல்வி இயக்குனர் விஜய், அசோஷியேட் வார்டன் கண்ணன், ஹாஸ்டல் மேனேஜர் மோகன்தாஸ் மற்றும் முன்னாள் மாணவர் முத்து காமாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்