Published : 03,Sep 2022 04:08 PM

’’புதுமுகங்கள் தேவை’’ - சினிமா ஆசை காட்டி பெண்களை ஆபாச வலையில் தள்ளிய இருவர் கைது

Two-arrested-for-sexually-harassing-women-on-the-pretext-of-cinema-at-Salem

சேலத்தில் சினிமா ஆசை காட்டி பெண்களை ஆபாச வலையில் தள்ளியதாக எழுந்துள்ள புகாரில் இருவரை காவல்துறையினர் கைதுசெய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் சினிமா வாய்ப்பு தேடி வருபவர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியைச் சேர்ந்த வேல் சத்திரியன் என்பவர் சூரமங்கலம் அருகே திரைப்பட அலுவலகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். ஜெயஜோதி என்ற பெண் இவரிடம் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். வேல் சத்திரியன் தன்னை ஒரு இயக்குநர் என்றும், புதிய திரைப்படங்களில் நடிக்க புது முகங்கள் தேவை என்றும் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்ததாகத் தெரிகிறது.

திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் பலர் வேல் சத்திரியன் விரித்த வலையில் சிக்கியுள்ளனர். குறிப்பாக திரைப்படத்தில் நடித்த வாய்ப்பு கேட்டு வரும் இளம் பெண்களை ஆபாசமாக புகைப்படங்களை எடுத்து வைத்துக்கொண்டும், நடிப்பு பயிற்சி என்ற பெயரில் பெண்களை பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தி அதை வீடியோ பதிவு செய்துவைத்து மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது.

அதே அலுவலகத்தில் பணியாற்றிய பெண் ஒருவரை பாலியல் திரைப்படத்தில் நடிக்க வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்து வெளியேறிய அந்தப் பெண் இதுகுறித்து சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலி இயக்குநர் வேல் சத்திரியன் மற்றும் அவரது உதவியாளர் ஜெயஜோதி ஆகிய இரண்டு பேரையும் காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையின் மூலம் வேல் சத்திரியன் மற்றும் ஜெயஜோதி ஆகிய இருவரும் சினிமா ஆசை காட்டி பல பெண்களை ஆபாச வலையில் சிக்க வைத்ததும், பல இளைஞர்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறித்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து மோசடியில் ஈடுபட்ட இரண்டு பேரையும் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைதுசெய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்