[X] Close

சசிகலா பின்னணி

AIADMK-Leader-Sasikala-Biography

அதிமுகவை வழிநடத்த வேண்டும் என கட்சியின் மூத்த தலைவர்களால் முன்னிறுத்தப்பட்டு, ‌சட்டமன்ற அதிமுக‌ குழு தலை‌ராக தேர்வானதன் மூலம்‌,‌ சசிகலா விரைவில் முதலமைச்சராக பதவியேற்க இருக்கிறார்.

மன்னார்குடியைச் சேர்ந்த விவேகானந்தன்-கிருஷ்ணவேணி தம்பதியரின் 6 குழந்தைகளில் 5ஆவதாக பிறந்தவர் சசிகலா. 1956ஆம் ஆண்டு ஜனவரி 29ம் தேதி பிறந்த சசிகலாவின் வயது 59. 1973ஆம் ஆண்டு, அரசு மக்கள் தொடர்பு அலுவலராக இருந்த நடராஜனை சசிகலா திருமணம் செய்தார். சென்னையில், வீடியோ விஷன் என்ற சிறு நிறுவனத்தை தொடங்கிய அவர், வீடியோ கேசட்டுகள் விற்பனை மட்டுமன்றி நிகழ்ச்சிகளை படம்பிடிக்கும் பணிகளையும் தனது நிறுவனம் மூலம் மேற்கொண்டார்.

1980களின் தொடக்கத்தில் தனது நிறுவனம் மூலம் படம்பிடிக்கப்பட்ட நிகழ்ச்சியொன்றின் வீடியோ கேசட்டை அப்போதைய அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரான ஜெயலலிதாவிடம் கொடுக்கச்சென்றதே இருவருக்குமான நட்பின் தொடக்கமாக அமைந்தது.


Advertisement

எம்.ஜி.ஆரின் மறைவைத் தொடர்ந்து, அதிமுக இரண்டாக உடைந்து ஜெயலலிதா தனிமைப்படுத்தப்பட்டபோது, அவருக்கு பக்கபலமாக நின்றார் சசிகலா. 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா முதன்முறையாக ஆட்சியைப் பிடித்தபோது அவருடன் போயஸ் கார்டன் இல்லத்திலேயே குடியேறினார்.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது மட்டுமின்றி, தேர்தல்களில் அதிமுக தோல்வியடைந்த சோதனையான காலக்கட்டங்களிலும் அவருடன்தான் இருந்து வந்தார் சசிகலா. சொத்துக்குவிப்பு புகார் உள்ளிட்ட வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டு ஜெயலலிதாவுடன் சசிகலாவும் சிறைக்குச் சென்றுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் சூறாவளியாய் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தபோது, அவருடன் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் சசிகலாவும் பயணித்திருக்கிறார். ஜெயயலலிதா மறைவுக்கு பின் கடந்தாண்டு டிசம்பர் 29ம் தேதி சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக பொதுக்குழுவில் நியமனம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து கட்சிப் பணிகளை கவனித்து வந்த வி.கே.சசிகலா, சட்டமன்ற அதிமுக குழு தலைவராக, கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, தமிழகத்தின் அடுத்த முதல்வராக வி.கே.சசிகலா பொறுப்பேற்க உள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close