Published : 06,Jul 2022 01:59 PM
இன்ஸ்டாகிராமில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: 10 பவுன் நகையை அபேஸ் செய்த 4 பேர் கைது

இன்ஸ்டாகிராமில் பழகி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததோடு ரூ.4 லட்சம் மதிப்பிலான நகைகளை மோசடி செய்த இளைஞர் உள்ளிட்ட 4 பேர் போக்சோ மற்றும் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாநகர் லெட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரிடம் மதுரை கோ.புதூர் பகுதியைச் சேர்ந்த சபீர் அகமது என்பவருடைய மகன் பயாஸ்கான், இன்ஸ்டாகிராம் மூலம் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சிறுமியை காதலிப்பதாக கூறிய பயாஸ்கான் அவ்வப்போது பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மேலும் மோசடி வார்த்தைகளை கூறி சிறுமியை ஏமாற்றி பணத்தையும் வாங்கியுள்ளார்;.
மேலும் ஆடைகள் மற்றும் படிப்பு செலவிற்கு பணம் தேவை என சிறுமியிடம் நைசாக பேசிய பயாஸ்கான், சிறுமியின் வீட்டில் இருந்த 10 பவுன் தங்க நகையை எடுத்து வருமாறு வற்புறுத்தியுள்ளார்.
இதனையடுத்து வீட்டிற்கு தெரியாமல் 10 பவுன் செயினை சிறுமி எடுத்துவந்த நிலையில், பயாஸ்கானின் நண்பர்களான புதூரைச் சேர்ந்த சதீஷ் மற்றும் சரவணக்குமார் ஆகியோரின் உதவியோடு சரவணக்குமாரின் தாயார் முத்துலெட்சுமி என்பவர் மதுரை கோ.புதூர் பகுதியில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் நகையை 2 லட்சத்தி 70 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்துள்ளனர்.
அந்தப் பணத்தில் பயாஸ்கான் ரூ.1 லட்சத்தி 70 ஆயிரம் ரூபாயும், அவரது நண்பர்கள் சதீஷ் 20 ஆயிரமும், சரவணக்குமார் 30 ஆயிரம் ரூபாயையும், சரவணக்குமாரின் தாயார் முத்துலெட்சுமி 50 ஆயிரம் ரூபாய் என மூவரும் பங்குபோட்டுக் கொண்டுள்ளனர்.
இதனையடுத்து தனது மகளை காதலிப்பதாக கூறி ஏமாற்றி பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், 4 லட்சம் ரூபாய் நகையை அடகுவைத்து மோசடியில் ஈடுபட்டதாகவும் சிறுமியின் தாயார் தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து ஏமாற்றியதாக பயாஸ்கான், சதீஷ், சரவணக்குமார் மற்றும் முத்துலெட்சுமி ஆகிய 4 பேர் மீதும் போக்சோ மற்றும் மோசடி வழக்கு பதிவுசெய்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 4 லட்சம் மதிப்பிலான 10 பவுன் தங்க நகையையும் பறிமுதல் செய்தனர்.
சிறுமியை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து நகையை மீட்ட தனிப்படையினருக்கு காவல்துறை ஆணையர் செந்தில்குமார் பாராட்டு தெரிவித்தார்.