Published : 16,May 2022 12:38 PM

``திருச்சியில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை; 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு”- கே.என்.நேரு

Minister-KN-Nehru-informs-Food-Processing-Factory-will-be-available-soon-in-Trichy-makes-new-Employment-offer-for-4-000-people

திருச்சி ஸ்ரீரங்கம் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2021-22ம் கல்வியாண்டிற்கான ஆண்டு விழா, கலை விழா மற்றும் விளையாட்டு விழா என முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, விழாவில் பேசுகையில் “திருச்சியில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை தொடங்கப்பட உள்ளது. இதன்மூலம் விரைவில் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்” என அறிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “உயர்கல்வி பயிலும் மாணவிகளின் படிப்பு காலம் நிறைவடையும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் நடைமுறைப்படுத்தி வருகிறார். சட்டமன்ற திருச்சி மணப்பாறை தொகுதிக்கு, புதிய அரசு கல்லூரியை தமிழக முதல்வர் இந்த ஆண்டு தந்திருக்கிறார். இது போல தமிழகம் முழுவதும் 30 புதிய அரசு கல்லூரிகளை தந்துள்ளார்.

image

அரசு கல்லூரியில் படிக்கும் மாணவிகள் போட்டித் தேர்வுகளில் பங்கேற்று அனைத்துப் பதவிகளுக்கும் செல்ல வேண்டும். தமிழ்நாட்டில் மிகச்சிறந்த திறமைசாலிகளாக உள்ள மருத்துவர்கள், அரசு மருத்துவக் கல்லூரிகளில் படித்தவர்கள். அதேபோல அரசு கல்லூரிகளில் மிகச்சிறந்த திறமைசாலிகள் ஆசிரியர்களாகவும் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்கள். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் வரும் 21ஆம் தேதி திருச்சிக்கு வருகிறார். இக்கல்லூரி மாணவர்களது படிப்புக்கு இன்னும் என்ன தேவைப்பட்டாலும், அவற்றையெல்லாம் அவரிடம் கேட்டு பெற்றுத் தருவேன். மணப்பாறைக்கு விரைவில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை வர உள்ளது. இதில் சுமார் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் நன்கு படித்து முன்னேற வேண்டும். அவர்களுக்கு உயர் கல்வியையும், படித்து முடித்தவுடன் அவர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்க அரசு வழிகாட்டும்” என்றார்.

இவ்விழாவில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, மாவட்ட ஆட்சியர் சிவராசு, கல்லூரி முதல்வர் மலர்விழி ஆகியோர் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தனர்.

image

இந்நிகழ்வை தொடர்ந்து தமிழ்நாட்டில் திமுக அரசின் கடந்த ஓராண்டு கால சாதனை விளக்கத்திற்கான பொதுக்கூட்டம் திருச்சி பொன்மலைப்பட்டியில் நடைபெற்ற கூட்டத்திலும் கே.என்.நேரு கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “அதிமுக வை சேர்ந்தவர்கள், மேடைபோட்டு கே.என்.நேரு என்ன மனிதரில் புனிதரா? என கேட்டுள்ளார். அரசியலில் யார் தான் புனிதர்! நாங்கள் என்ன சங்கரமடமா நடத்திக் கொண்டிருக்கிறோம். நாங்கள் நடத்துவது அரசியல்” என்று பேசினார். 

தொடர்ந்து திருச்சிக்கான நலத்திட்டங்கள் குறித்து பேசுகையில், “திருச்சியில் உள் விளையாட்டு அரங்கம், காய்கறி சந்தை, ஒருங்கிணைந்த பேருந்து முனையம் ஆகியவற்றை அமைப்பதற்காக ₹850 கோடியை ஒதுக்கியுள்ளோம். மணப்பாறை, துறையூர் பகுதி மக்களுக்கான கூட்டு குடிநீர் திட்டப்பணிகளும், ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் பணிகளும் நடந்து வருகிறது. கோரையாறு தூர்வாரப்பட்டுள்ளது.

இதையும் படிங்க... “தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது ஏன்?”-அறங்காவலர் பதவி ஏற்பில் கண்டித்த அமைச்சர் துரைமுருகன்

பள்ளி கட்டடங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்துறையின் முயற்சியால் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திருச்சியை தமிழ்நாட்டின் பிரதானமான இடமாக மாற்றப்போகிறது. அது திருச்சிக்கு வேறு ஒரு புதிய முகத்தை கொடுக்கப்போகிறது. சென்னைக்கு பிறகு கோவை மதுரை என்று சொல்வதற்கு பதிலாக, சென்னை திருச்சி என்று அனைவரும் சொல்லும் காலம் வரப்போகிறது. திருச்சியில் ஆயிரம் குடும்பங்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் வீடு கட்டிக்கொடுக்கப்போகிறோம். மேலும் 5,000 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது. எங்களை நம்பி திருச்சி மக்கள் வாக்களித்து எல்லா தேர்தல்களிலும் வெற்றியடையச்செய்துள்ளனர். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதோடு, திருச்சிக்கு காவிரியின் குறுக்கே புதிய பாலம், உயர்மட்ட பாலங்கள் கட்டித்தருவோம்.

image

நாங்கள் நேர்மையான முறையில் செயல்படுத்துவோம். பாலம் ரோடு போடும் இடத்தில் எல்லாம் கே.என்.நேருக்கு நிலம் இருக்கிறது என தவறான பிரச்சாரம் செய்கிறார்கள். எங்கள் கடந்த ஆட்சி காலத்தில் 19 வழக்குகள் பதிந்துள்ளார்கள். இதில் 9 கொலை வழக்கு. நாங்கள் குற்றம் செய்தால் நீதிமன்றம் இருக்கிறது, தண்டனை கொடுத்தால் அனுபவிக்கத் தயாராக இருக்கிறோம். நாங்கள் சத்தியமாக நேர்மையாக எந்த தவறும் செய்யாமல் பணியாற்றுவோம் என உறுதி அளிக்கிறேன்” என்று பேசினார்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்