Published : 16,May 2022 10:12 AM

சிஎஸ்கே அற்ற சிஎஸ்கே - 'கம்பேக்' பற்றி தோனி உறுதியளிப்பாரா?

CSK-comeback-MS-Dhoni-IPL-2022-match-agoinst-Gujarat

சென்னை அணி மற்றுமொரு சறுக்கலை சந்தித்திருக்கிறது. குஜராத்திற்கு எதிராக மீண்டும் ஒரு தோல்வியை அடைந்திருக்கிறது. இந்த சீசனில் புள்ளிப்பட்டியலில் அந்த கடைசி 10 வது இடம் மும்பை இந்தியன்ஸூக்குத்தான் என பலரும் முடிவு செய்திருந்தனர். ஆனால், அதையெல்லாம் உடைத்து 10 வது இடத்திற்கான ரேஸில் நாங்களும் இருக்கிறோம் என்பதை சென்னை அணி வலுவாக நிரூபித்திருக்கிறது.

ஐ.பி.எல் வரலாற்றிலேயே சென்னை அணிக்கு மோசமான சீசன் எதுவென கேட்டால், துபாயில் நடந்த அந்த 2020 சீசனையே அனைவரும் குறிப்பிடுவர். அதுவரை சென்னை பார்த்திடாத சறுக்கல்களையெல்லாம் சந்தித்திருந்தனர். படுதோல்வி. முதல் முறையாக ப்ளே ஆஃப்ஸூக்கு கூட தகுதிப்பெறாமல் சென்னை வெளியேறியது. இந்த 2022 சீசனோ அந்த 2020 சீசனின் ரீப்ளேவாகவே அமைந்திருக்கிறது. ரிசல்ட்டுகளின் அடிப்படையில் பார்த்தால் அந்த சீசனை விட இந்த நடப்பு சீசன்தான் சென்னைக்கு இன்னும் கொடூரமாக அமைந்திருக்கிறது. அந்த சீசனில் சென்னை ஆடிய 14 போட்டிகளில் 6 போட்டிகளை வென்றிருந்தது. ஆனால், இப்போதோ இதுவரை 13 போட்டிகளில் ஆடி 4 போட்டிகளை மட்டுமே வென்றிருக்கிறது. எஞ்சியிருக்கும் ஒரு போட்டியை வென்றாலும் மொத்தமே ஐந்து போட்டிகளில்தான் சென்னை வென்றிருக்கும். எந்த சீசனிலும் சென்னை அணி இவ்வளவு மோசமாக 9 போட்டிகளை தோற்றதே இல்லை. 2020 இல் கூட!

image

ஆக, சென்னை அணியின் மோசமான சீசன் என்கிற கிரீடத்தை 2020 சீசனிடமிருந்து இந்த 2022 சீசன் தலைகுனிவோடு வாங்கிக்கொண்டிருக்கிறது. 2020 சீசனில் சென்னை அணியின் மீதிருந்த மிகப்பெரிய குற்றச்சாட்டு 'இவர்களுக்கு வெற்றியின் மீதான தாகமே இல்லை. இண்டண்ட்டே இல்லாமல் ஆடுகின்றனர்' என்பதே. அப்படி ஆடியே சென்னை அந்த சீசனில் 6 போட்டிகளில் வென்றிருந்தது. இங்கே சென்னை அணிக்கு வெல்ல வேண்டும் என்கிற உத்வேகம் இருக்கிறது. சாம்பியன் டைட்டிலை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்கிற வெறி இருக்கிறது. ஆனாலும், சென்னையால் வெல்ல முடியவில்லை.

வழக்கமான சென்னையின் குணாதிசயங்களை விடுத்து சென்னையற்ற ஒரு சென்னையாக இருந்ததே இங்கே பிரச்சனையாக இருக்கிறது. ஆடுகளத்திற்குள் மட்டுமல்ல. ஆடுகளத்திற்கு வெளியேயும் கூட அதுதான் பிரச்சனையாக இருந்தது. சீசன் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக தோனி கேப்டன் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்தார். ரசிகர்களாலுமே வருங்காலத்தை மனதில் வைத்து தோனி எடுத்த ஒரு நல்ல முடிவாகவே இது பார்க்கப்பட்டது. தோனிதான் சிஎஸ்கே சிஎஸ்கேதான் தோனி என்ற நிலையிலிருந்து தானே முன் வந்து தோனியே அந்த பதவியை ஜடேஜாவின் கையில் கொடுத்தார். ஆனால், அந்த பதவியில் ஜடேஜா முழுமையாக செயல்படவே இல்லை. அதற்குள் மீண்டும் கேப்டன்சி மாற்றம். தோனியே மீண்டும் கேப்டனாகினார்.ஜடேஜாவே முன்வந்து கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்ததாக கூறப்பட்டது.

image

தோனி மீண்டும் கேப்டனான பிறகு ஒரு போட்டியில் 'ஒரு சில வீரர்களுக்கு செட்டில் இரண்டு மூன்று போட்டிகள் தேவைப்பட்டும். ஒரு சில வீரர்களுக்கு ஆறேழு போட்டிகள். ஒரு சில வீரர்களுக்கு ஒரு சீசனே தேவைப்படும். அவர்களுக்கான நேரத்தை நாம் கொடுக்க வேண்டும்.' என பேசியிருப்பார். தோனியின் மிகமுக்கிய பாலிசி இது. கேதார் ஜாதவெல்லாம் இதன்படிதான் சென்னை அணியில் அத்தனை வாய்ப்புகளை பெற்றுக் கொண்டிருந்தார். வீரருக்கே இப்படியென்றால் கேப்டனுக்கு சொல்லவா வேண்டும்? அதுவும் தோனி போன்ற ஜாம்பவானை ரீப்ளேஸ் வீரருக்கு செட்டில் ஆக எவ்வளவு நேரம் தேவைப்படும்? அந்த நேரம் ஜடேஜாவுக்கு கொடுக்கப்படவே இல்லையே அல்லது ஜடேஜா அந்த நேரத்தை எடுத்துக் கொள்ளவே இல்லையே.

ஒன்றிரண்டு போட்டிகளுக்கு பிறகு காயம் காரணமாக இந்த சீசனிலிருந்தே விலகுகிறேன் எனக்கூறி ஜடேஜா வெளியேறிவிட்டார்.

இது ஒருபுறமிருக்க, இரண்டு நாட்களுக்கு முன்பு அம்பத்தி ராயுடுவிடமிருந்து திடீரென ஒரு ட்வீட் வந்து விழுந்தது. 'இந்த சீசனோடு நான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன்' என அதில் கூறியிருந்தார். அடுத்த 10 வது நிமிடமே அந்த ட்வீட் டெலிட் செய்யப்பட்டது. சென்னை அணியின் CEO காசி விஸ்வநாதன் 'அவர் ஓய்வெல்லாம் பெறவில்லை. சரியாக ஆடவில்லையென்பதால் விரக்தியில் இப்படி ட்வீட் செய்துவிட்டார்' என பேசியிருந்தார்.

ட்ரெஸ்ஸிங் ரூமுக்குள் இப்படியான சலசலப்புகளும் சர்ச்சைகளும் சென்னை அணியில் இதற்கு முன் பெரிதாக எழுந்ததே இல்லை. 2020 சீசனில் காரணமே கூறாமல் ரெய்னா திடீரென துபாயிலிருந்து புறப்பட்டு வந்ததுதான் சென்னை இதற்கு முன் சந்தித்த மிகப்பெரிய சர்ச்சை. மற்ற அணிகளை விட சென்னை அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் வீரர்கள் முழு சௌகரியத்தோடும் முழு கௌரவத்தோடும் இருக்கலாம் என்பதே சென்னை அணியின் மிகப்பெரிய வெற்றி ரகசியம். சில நிகழ்வுகளை கவனிக்கும்போது இந்த சீசனில் அது கொஞ்சம் மிஸ் ஆனதோ என்கிற ஐயம் எழுவதை தவிர்க்க முடியாது.

image

டெவான் கான்வேக்கு ஒரே ஒரு போட்டியில் மட்டும் வாய்ப்பளித்துவிட்டு முதல் பாதி சீசன் முழுவதிலும் பென்ச்சில் வைத்தது. 'ஓப்பனரை மிடில் ஆர்டரில் இறக்குவது அவர்களுக்கு செய்யும் அநீதி' என்ற கொள்கையுடைய தோனியே ஜெகதீசனை நம்பர் 4 இல் இறக்கிவிடுவது என சென்னையின் வழக்கமற்ற பல விஷயங்கள் இந்த சீசனில் அரங்கேறியிருந்தது. தோல்விக்கு இவையும் ஒரு காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

2020 சீசன் எவ்வளவு மோசமாக இருந்திருந்தாலும் அந்த சீசனை சென்னை மிகச்சிறப்பாகவே முடித்திருந்தது. தொடர்ச்சியாக 3 போட்டிகளில் சென்னை வென்றிருந்தது. இந்த வெற்றிகள் கொடுத்த தெம்பில்தான் 'Comeback that's what we known for நாங்கள் உறுதியாக கம்பேக் கொடுப்போம்' என தீர்க்கமாக பேசியிருப்பார். இந்த சீசனிலும் தோனியிடம் அதே தீர்க்கம் வெளிப்படுமா? அதே உறுதியோடு கம்பேக் கொடுப்போம் என சொல்வாரா? என்பதே சந்தேகம்தான். ஏனெனில், இந்த சீசனை தோல்வியோடு தொடங்கிய சென்னை தோல்வியுடனேயே முடித்துக் கொண்டிருக்கிறது. எந்த முன்னேற்றமும் இல்லையே!

-உ.ஸ்ரீராம்

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்