Published : 29,Aug 2017 11:24 AM
வெள்ளக்காடானது மும்பை: வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் நேற்று இரவிலிருந்து பெய்து வரும் தொடர் மழையால் நகரமே வெள்ளக்காடாகியுள்ளது. குடியிருப்பு பகுதிகளிலும், சாலைகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ரயில் மற்றும் பேருந்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
தொடர் மழையால் 3 இடங்களில் சுவர் இடிந்துள்ளது. பரேல் பகுதியில் உள்ள பிரபல மருத்துவமனையில் வெள்ள நீர் புகுந்ததால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர். நகரெங்கும் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையின் 3 பிரிவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புனேவில் இருந்து மேலும் இரு பிரிவுகள் மும்பை விரைகின்றன. பாதிப்புகள் அதிகமாக இருப்பதால் மிகவும் அவசியம் இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வருமாறு மும்பை மாநகராட்சி மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
குறைந்த அளவு மழை பெய்தாலே முக்கிய நகரங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் அவதிக்கு ஆளாவது தொடர்கதையாகிவிட்டது. அந்த வகையில் மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பை நகரில் தொடர்மழையால் சாலைகளில் நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஹிந்த்மாடா பகுதியில் சாலைகளில் மழைநீர் தேங்கி இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மோட்டார் மூலம் மழை நீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.