Published : 20,Jan 2022 08:30 PM

5 மாநில தேர்தல் களத்தில் தேடப்படும் ராகுல் காந்தி... பிரச்சாரத்தை தவிர்ப்பது ஏன்?

Why-does-Rahul-Gandhi-avoid-campaigning-in-5-state-election

உத்தரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி களத்தில் இறங்குவதற்கான எந்த அறிகுறியும் தென்படாதது, அரசியல் தலைவர்களுக்கு வியப்பு அளித்துள்ளது. அதேநேரம் 2024-ம் வருட பொதுத்தேர்தலுக்கு முக்கிய ஆயத்தமாக கருதப்படும் உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் ராகுல் காந்தி தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபடாதது ஏன் என்கிற கேள்வி எதிர்க்கட்சிகள் மத்தியிலும் எழுந்துள்ளது.

உடல் நலக்குறைவு காரணமாக சோனியா காந்தி சமீப வருடங்களாக தேர்தல் பிரச்சாரங்களில் முழு மூச்சாக ஈடுபட முடியாத சூழல் உள்ளதால், தற்போது பிரியங்கா காந்தி மட்டுமே உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் பிரச்சார பணிகள் மற்றும் வேட்பாளர் தேர்வு போன்றவற்றை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். ராகுல் காந்தி அதிக ஈடுபாடு காட்டாத நிலையில், பெண்களுக்கு முன்னுரிமை போன்ற அம்சங்களை வலியுறுத்தி பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல்களில் பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் அளித்துள்ளார்.

தேர்தலில் ராகுல் காந்தி ஆர்வம் காட்டாமல் இருப்பதன் பின்னணியில், அமேதி மக்களவைத் தொகுதியில் 2019 ஆம் வருடத்தில் அதிர்ச்சி தோல்வியே காரணமென்று கணிக்கப்படுகிறது. அதனாலேயே ராகுல் காந்தி உத்தர பிரதேச மாநில அரசியலில் அதிக ஆர்வம் காட்டவில்லை என்பது அவருடைய கட்சியை சேர்ந்தவர்கள் கணிப்பு. வயநாடு மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி, அடிக்கடி கேரளா பயணித்திருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் தற்போது முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல்வேறு பாஜக தலைவர்கள் ஈடுபட்டிருக்கும் நிலையில், ராகுல் காந்தி குறைந்தபட்சம் டிஜிட்டல் முறையில் காணொளி மூலமாகவாது கூட்டங்களில் கலந்துகொண்டு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கலாம் என உத்தரபரதேச காங்கிரஸ் அரசியல் தலைவர்கள் கருதுகிறார்கள்.

image

இப்படி சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி தங்கள் முழு கவனத்தை உத்தரப்பிரதேச மாநிலத்தின் பக்கம் திருப்பாத நிலையில், சமாஜ்வாதி கட்சிதான் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு கடுமையான போட்டியை அளிக்கும் என்ற கருத்து வலுவடைந்து வருகிறது. இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவுக்கு ஆதரவாக செயல்பட முடிவெடுத்துள்ளனர். ‘ட்விட்டர் மூலமாக அறிக்கைகள் வெளியிடுவது மற்றும் மத்திய அரசுக்கு டிஜிட்டல் முறையில் கண்டனங்களை தெரிவிப்பதால் மட்டுமே சட்டசபை தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது’ என்பது அரசியல் தலைவர்களின் கருத்து. ராகுல் காந்தி சமீபத்தில் செய்தியாளர் சந்திப்புகளில் கூட கலந்து கொள்ளவில்லை என உத்தரப் பிரதேச அரசியல் தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சமயத்தில் எதிர்க்கட்சி தலைவர்களுடன் பல செய்தியாளர் சந்திப்புகளில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, பின்னர் வெளிநாடு பயணித்தார். இதுவே பிரதான கட்சியான பாஜக-வை பொறுத்தவரை, பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே உத்தரபிரதேசத்தில் பலமுறை பிரம்மாண்ட பேரணிகளில் கலந்து கொண்டு பேசி உள்ளார். பழைய திட்டங்களை துவக்கி வைக்க உத்தர பிரதேச மாநிலத்திற்கு அவர் ஒவ்வொரு வாரமும் இரண்டு அல்லது மூன்று முறை பயணித்தது குறிப்பிடத்தக்கது. இரண்டு நாட்களுக்கு முன்பு கூட பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் வாரணாசியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி ஆதரவாளர்களுடன் உரையாடினார்.

இந்த முறை உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் முழுவீச்சாக கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒருபுறம் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பிரச்சார களத்தில் விறுவிறுப்பாக செயல்படுகிறார் என்றும் இன்னொருபுறம் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவரது அமைச்சர்களுடன் பிரச்சார பணிகளில் முழு வீச்சாக ஈடுபட்டுளளார் என்பதும் இப்போதைய களநிலவரமாக உள்ளது.

image

பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தேசிய தலைவர்கள் முழுவீச்சாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை என கருதப்படுகிறது. கோவா மாநிலத்தில் பொறுப்பாளராக உள்ள பா.சிதம்பரம் அந்த மாநிலத்துக்கான காங்கிரஸ் கட்சியின் வியூகங்களை இறுதி செய்து வருகிறார். தேசியவாத காங்கிரஸ் கட்சி, சிவசேனா, மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கோவா மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸூடன் கூட்டணி வைக்க விரும்பினாலும், அந்தக் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரிஷ் ராவத் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா என்ற கேள்விக்கு தேசிய தலைமையின் பதிலை எதிர்பார்த்து காங்கிரஸ் தலைவர்கள் காத்திருக்கின்றனர். அதேபோலவே பாரதிய ஜனதா கட்சியை விட்டு விலகி காங்கிரஸ் திரும்ப விரும்பும் ஹரக் சிங் ராவத்தை கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டுமா என்பது குறித்தும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. பஞ்சாப் மாநிலத்துக்கான காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை இறுதி செய்வதிலும் இழுபறி நீடிக்கிறது.

- கணபதி சுப்ரமணியம்.

சமீபத்திய செய்தி: தஞ்சையில் 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை: வார்டன் கைது-உடலை வாங்க மறுத்து பெற்றோர் போராட்டம்

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்