Published : 09,Dec 2021 07:31 PM
நகர்புற உள்ளாட்சித் தேர்தலை ஒரு கட்டமாக நடத்த வேண்டும் - பால் கனகராஜ் கடிதம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்திட வேண்டும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால் கனகராஜ் கடிதம் எழுதியுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாக்காளர் பட்டியல் வெளியிடப் பட்டுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளை விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது.இந்த நிலையில் தமிழக பாஜக சார்பில் மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதப் பட்டிருக்கிறது கட்சியின் வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் பால்கனகராஜ் எழுதியிருக்கும் கடிதத்தில், நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்திட வேண்டும். தேர்தல் தேதி அறிவிப்புக்கும், வாக்குப்பதிவுக்கும் இடையே குறைந்தபட்சம் 20 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும்.
அறிவிப்பாணையின் போதே, கண்காணிப்பாளர்களின் பட்டியலையும் வெளியிட வேண்டும். அரசியல் தலையீட்டைத் தவிர்க்க மத்திய அரசு அதிகாரிகளை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்திட வேண்டும். சிசிடிவி கேமராக்களை முறையாக இயக்காத ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைத்து நேரங்களிலும் சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டை உறுதி செய்ய வேண்டும்.
தேர்தல் பாதுகாப்புப் பணியில் CISF, CRPF வீரர்களை ஈடுபடுத்த வேண்டும். மேலும், 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்தல் வேண்டும். அரசின் நலத்திட்டங்களின் செயல்பாடை நிறுத்த வேண்டும். குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்களின் செயல்பாடை கண்காணிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.