Published : 12,Sep 2021 08:42 PM

திருவாரூர் : ‘திருடன்’ என அவதூறு பரப்பியதால் மனமுடைந்த இளைஞர் எடுத்த விபரீத முடிவு

Young-man-hangs-himself-after-spreading-slander-on-social-media

திருவாரூரில் சமூக வலைதளங்களில் திருடன் என அவதூறு பரப்பப்பட்டதாக கூறி இளைஞர் ஒருவர் தூக்கு போட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருவாரூர் மாவட்டம் அலிவலம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். அவருக்கு திருமணமாகி 9 மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. சதீஷ் வாகனங்களை வாடகைக்கு விடுவது மற்றும் வாகனங்களை அடமானம் வாங்குவது மாதிரியான தொழில் செய்து வந்துள்ளார். 

இந்நிலையில், தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தினால் காரணமாக சதீஷ் வாகனம் ஒன்றினை வட்டிக்கு பணம் கொடுக்கும் திருவாரூர் அண்ணா காலனி பகுதியை சேர்ந்த முத்தையா என்பவரிடம் அடமானம் வைத்து ஒரு லட்ச ரூபாய் பணத்தை ஆறு மாதங்களுக்கு முன்பு பெற்றுள்ளார். கடுமையான கொரோனா சூழலிலும் வட்டி கட்டி வந்த அவர் கடந்த இரண்டு மாதங்களாக வட்டி கட்ட முடியாத சூழலில் இருந்து வந்துள்ளார். 

வட்டி தராத ஆத்திரத்தில் முத்தையா தனது ஆதரவாளர்களுடன் சதீஷையும், அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தையும் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், சமூக வலைதளங்களில் திருடன் என சொல்லியும் செய்தி பரப்பியதாகவும் கூறப்படுகிறது. தாக்குதலில் ஈடுபட முயன்றதாகவும் கூறப்படுகிறது.

image

இதனால் மனமுடைந்த சதீஷ் கடிதம் எழுதிவைத்துவிட்டு தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் சதீஷ் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என அவருடைய உறவினர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். 

உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த போது உறவினர்கள் காவல் துறையிடம் வாக்குவாதம் செய்தனர். காவல்துறையினர் முத்தையா விடம் பணம் பெற்றுக் கொண்டு சதீஷை கொன்று விட்டார்கள் என்று உயிரிழந்த சதீஷின் உறவினர்கள் வேதனை தெரிவித்தனர்.

புகார் தெரிவிக்க சென்ற போது காவல்துறையினர் புகாரை பெறவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர். காவல் துறையினரிடம் இது குறித்து கேட்டதற்கு நாங்கள் முறையான நடவடிக்கை எடுத்தோம் என்றும். அவர்களுடைய புகாரை பெற்றுக் கொண்டோம் என்றும் தெரிவித்தனர். 

அதன் பிறகு காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் கொடுத்ததால் சதீஷ் உறவினர்கள் அனுமதியோடு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர்  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. 

இதையும் படிக்கலாம் : “இது மாதிரியான பேச்சுகளை தவிர்க்க வேண்டும்” - டிம் பெய்ன் கருத்தை கண்டித்த அஸ்கர் ஆப்கன் 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்