Published : 26,Aug 2021 08:47 PM
“விரைவில் விளக்கம் அளிக்கிறேன்” - புதிய ஆடியோ வெளியாகி சர்ச்சை குறித்து அண்ணாமலை பதில்
பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதன் பேரிலேயே கே.டி.ராகவன் குறித்த வீடியோ வெளியிடப்பட்டதாக புதிய ஆடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து விரைவில் பதில் அளிப்பதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
பாஜக மாநில பொதுச்செயலாளராக இருந்த கே.டி.ராகவனை தொடர்புபடுத்தி சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றை அக்கட்சியின் உறுப்பினராக இருந்த யூடியூபர் ஒருவர் அண்மையில் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து கட்சி பொறுப்புகளில் இருந்து கே.டி.ராகவன் ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக விளக்கம் அளித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும் வீடியோ வெளியிட்ட நபர் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் அண்ணாமலை சொல்லித்தான் அந்த வீடியோவை தாம் வெளியிட்டதாகவும், அவருடன் பேசியதாக கூறப்படும் ஆடியோவையும் யூடியூபரான மதன் எனும் நபர் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அண்ணாமலையிடம் தொலைபேசியில் விளக்கம் பெற தொடர்பு கொண்டபோது, விரைவில் இதுகுறித்து விளக்கம் அளிக்கவுள்ளதாக தெரிவித்தார்.