[X] Close

150 பேருக்கான விமானத்தில் 640 ஆப்கானியர்கள்... - உலகை உலுக்கும் புகைப்படத்தின் பின்புலம்

சிறப்புக் களம்

nearly-640-Afghans-were-crammed-onto-one-US-Air-Force-plane

காபூல் விமான நிலையத்தில் இருந்து வெளியாகும் அடுத்தடுத்த புகைப்படங்கள் உலக நாடுகளை உலுக்கும் விதமாக அமைந்துள்ளன. அதில், ஒரு புகைப்படத்தில் 150 பேருக்கான அமெரிக்க படை விமானத்தில் 640-க்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் தங்கள் தாய்மண்ணை விட்டு அச்சத்துடன் பயணித்த காட்சி, உலக மக்களின் நெஞ்சை உலுக்கி வருகிறது.


Advertisement

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள சூழலில், நாட்டில் மீண்டும் பழமைவாதம் தலைதூக்கும் என அஞ்சும் மக்கள், வெளிநாடுகளில் தஞ்சமடைய துவங்கியுள்ளனர். நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்தில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். அதன் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன.

image


Advertisement

ஆப்கானிஸ்தானிலிருந்து எப்படியாவது வெளியேறிவிடவேண்டும் என்ற நோக்கில் நேற்று கிளம்பிய அமெரிக்கப் படையினரின் விமானத்தின் சக்கரத்தை பிடித்து தொங்கியபடி பயணித்த மூன்று பேர் குடியிருப்புகள் மீது விழுந்து உயிரிழந்தனர். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி உலக நாடுகளை உலுக்கி இருந்த நிலையில், தற்போது மற்றொரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க தூதரக அதிகாரிகளை அழைத்துச் செல்வதற்காக காபூல் வந்தடைந்தது அமெரிக்காவின் போயிங் ரக சி 17 கார்கோ விமானம். ஆனால், இந்த விமானத்தை ஆப்கானியர்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கினர். 150 பேர் மட்டுமே பயணிக்கும் விமானத்தில் சுமார் 640 ஆப்கானியர்கள் ஏறிக்கொண்டனர். அதுவும் தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் ஏறுவதற்கு முன்பே ஆப்கானியர்கள் ஏறிக்கொள்ள வேறு வழியின்றி அவர்களை ஏற்றிக்கொண்டு அமெரிக்க ராணுவ விமானம் பறந்தது.

முன்னதாக, விமானப்படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியும் பலன் இல்லை. இதையடுத்து அவர்களை அகதிகளாக ஏற்றுக்கொண்டு பறந்தது ராணுவ விமானம். இவர்கள் அனைவரையும் டெக்சாஸ், விஸ்கான்சின் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு அழைத்து செல்லப்படுவர் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.


Advertisement

image

முன்னதாக, இந்த விமானத்தில் 800 பேர் வரை பயணித்தனர் எனக் கூறப்பட்ட நிலையில், அமெரிக்க ராணுவம் 640 பேர் பயணித்ததாக விளக்கம் அளித்துள்ளது.

இந்த விமானத்தில் ஆப்கானியர்கள் நெரிசலில் சிக்கிக்கொண்டு இருக்கும் புகைப்படங்களும், விமானத்தில் முந்திக்கொண்டு ஏறிய வீடியோ காட்சிகளும் தற்போது வைரலாகி வருகின்றன. இந்தக் காட்சிகள் நெஞ்சை உலுக்கும் விதமாக அமைந்துள்ளன. இதற்கிடையே, தலிபான் படைகளிடம் இருந்து தப்பிப்பதற்காக அந்நாட்டு மக்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர்.

'ஆட்சி மாற்றத்தினால் பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்படாது. தங்களுடைய போராளிகளைக் கண்டு மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்' என்று தலிபான்கள் அறிக்கை வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனாலும் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக மக்கள் குவிந்த வண்ணம் இருப்பதால், காபூல் விமான நிலையத்தில் எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே உள்ளன.


Advertisement

Advertisement
[X] Close