[X] Close

ஆப்கன்: காபூலில் பதற்றமான சூழல்; நாட்டைவிட்டு வெளியேற விமான நிலையத்தில் குவிந்த மக்கள்

உலகம்

Videos-show-chaotic-scenes-at-the-Kabul-airport-as-the-Taliban-retakes-power-in-Afghanistan-and-thousands-flee
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல், தலிபான்கள் வசம் வந்துள்ள நிலையில் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
 
மிகக் குறுகிய காலத்தில் ஆப்கானிஸ்தானின் பல்வேறு மாகாணங்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த தலிபான்கள், தலைநகர் காபூலையும் நேற்று அதிரடியாக கைப்பற்றினர். அதிபர் மாளிகையும் தலிபான்கள் வசம் வந்தததைத் தொடர்ந்து, தலைநகரில் உள்ள அரசு அலுவலகங்களின் முக்கிய ஆவணங்களை அரசு பணியாளர்கள் தீயிட்டு எரித்து விட்டு அங்கிருந்து தப்பினர். இதற்கிடையில் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி, காபூலில் இருந்து வெளியேறி விட்டதகாவும், தலிபான்கள் தரப்பில் இடைக்கால அதிபராக அலி அகமது ஜலாலி நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ள சூழலில் நாட்டில் மீண்டும் பழமைவாதம் தலைதூக்கும் என அஞ்சும் மக்கள், வெளிநாடுகளில் தஞ்சமடைய துவங்கியுள்ளனர். வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் ஆப்கனை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறத் துவங்கியுள்ளனர். 'ஆட்சி மாற்றத்தினால் பொது மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்படாது. தங்களுடைய போராளிகளைக் கண்டு மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்' என்று தலிபன்கள் அறிக்கை வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனாலும் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்தில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். அதன் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.  
 
தலைநகரின் பல இடங்களில் துப்பாக்கியால் சுடும் சத்தங்களை கேட்க முடிவதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் தலிபான் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. காபூல் விமான நிலையம், அமெரிக்க தூதரத்திற்கு அமெரிக்கர்கள் யாரும் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள இடங்களிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது.
 
ஆப்கானிஸ்தானில் பதற்றம் நிலவுவதை அடுத்து அதன் அண்டை நாடான பாகிஸ்தான் எல்லைகளை மூடியுள்ளது.

Advertisement

Advertisement
[X] Close