Published : 01,Jul 2021 08:09 PM

சாதி ரீதியில் செயல்படும் மேட்ரிமோனி தளங்கள்: அவசியமா? அநாவசியமா?

திருமணத் தரகர்களின் வேலைகளை தற்போது மேட்ரிமோனிக்கள் செய்து வருகின்றன. குறிப்பாக, ஒவ்வொரு சாதிக்கும் தனித் தனியாக மேட்ரிமோனி சைட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆண்டுதோறும் சுமார் 6 கோடி பேர் வரை திருமண தகவல் மையங்களை பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2000-க்கும் மேற்பட்ட திருமண தகவல் மைய இணையதளங்கள் உள்ளன. 2013ஆம் ஆண்டில் திருமண தகவல் மையங்களின் சந்தை மதிப்பு ரூ.520 கோடி. 2017ஆம் ஆண்டில் திருமண தகவல் மையங்களின் சந்தை மதிப்பு ரூ.818 கோடியாக உயர்ந்தது. 2022-ல் திருமண தகவல் மையங்களின் சந்தை மதிப்பு ரூ.2000 கோடியாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. பெண்களை விட ஆண்களே திருமண இணையதளங்களை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். 25 முதல் 34 வயதுடையோரே அதிக அளவில் திருமண இணையதளங்களை பயன்படுத்துகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

image

உலகில் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சியில் உள்ளது. பல விதமான புதிய கண்டுபிடிப்புகள் தினந்தோறும் உருவாகி வருகின்றன. ஆனால், நம் நாட்டில் இன்னும் மறையாத கறையாக இருக்கிறது, சாதி என்னும் நெருப்பு. இதில், ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனியாக திருமணத்திற்கு வரன் தேடும் இணைய சேவைகள் உள்ளன என்பது தான் வேதனையின் உச்சம். திருமணம் என்பது, இரு மனங்கள் ஒன்றினைவதோடு மட்டுமல்லாமல், இரு குடும்பங்களும் ஒன்றிணைவது தான். இதில் திருமண தரகர்களுக்கு முக்கிய பங்கு இருக்கும். ஆனால், இப்போதெல்லாம் திருமணத்திற்கு வரன் தேட சாதிவாரியாக இணைய சேவைகள் வழங்கப்படுகின்றன. கல்விச் சாலைகள் தொடங்கி, அறிஞர் பெருமக்கள் வரைக்கும் வலியுறுத்தவது மனித குலம் என்பது மேம்பட்ட ஒன்று, இதில் சாதியின் பெயரால், இனத்தின் பெயரால் பேதங்கள் இருக்கக் கூடாது என்பதே. ஆனால் தற்போது மனங்கள் ஒத்து மணவாழ்க்கையில் இணையாக வேண்டியவர்களை, சாதியின் பெயரால் இணைத்து வைக்க இணையவழியில் செயல்படும் நிறுவனங்கள் அதிகரித்துள்ளது சரியானதா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

இதுகுறித்து பாரத் மேட்ரிமோனியின் முருகவேல் பேசுகையில், “சாதி ரீதியிலான மேட்ரிமோனி தளங்கள் கண்டிப்பாக அவசியம். இந்தியாவில் 95 சதவீத திருமணங்கள் அவர்கள் சாதிக்குள்ளேயே செய்து கொள்கின்றனர். இதனால் அதற்கென தனி தளங்கள் இருந்தால் எளிமையாக இருக்கும் என்பதால் உருவாக்கப்பட்டது. சாதி என்பதை நாங்கள் கலாச்சாரமாகத்தான் பார்க்கிறோம். 300க்கும் மேற்பட்ட மேட்ரிமோனி தளங்கள் நடத்தி வருகிறோம். இதில் வெறும் சாதி மட்டுமல்ல. டாக்டர் மேட்ரிமோனி நடத்தி வருகிறோம். ஏனென்றால் அதையும் நாங்கள் கலாச்சாரமாக பார்க்கிறோம். டிவோர்ஸ் மேட்ரிமோனிகூட நடத்தி வருகிறோம்.

image

சாதியால் இங்கு பிரச்னை வருவதில்லை. யார் சாதி உயர்ந்தது என்று வரும்போதுதான் பிரச்னை உருவாகிறது. சாதி என்பது வாழ்க்கை நெறிமுறைதான். சாதிக்குள் திருமணம் செய்து கொள்வதும் வேறு சாதியில் திருமணம் செய்து கொள்வதும் அவரவர் விருப்பம். இதை நான் ஆதரிக்கவும் இல்லை. எதிர்க்கவும் இல்லை. ஒரே சாதிக்குள் திருமணம் செய்து கொண்டால் அவர்களின் வாழ்க்கை நெறிமுறையை கடைபிடிப்பது எளிதாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன் கூறுகையில், “சாதியை இந்த சமூகத்தின் மிகப்பெரிய கேடாகத்தான் பார்க்கிறேன். சாதியால் கொலைகள், ஆணவக்கொலைகள் என்னைச்சுற்றியே நிறைய நடக்கின்றன. சாதி என்பது பாகுபாடு. அடிமைத்தனம். நாம் அனைவரும் சமம் அல்ல என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதுதான் சாதி. சாதிவிட்டு சாதி திருமணம் செய்தால்தான் அது ஒழியும். இந்தியர்கள் ஒவ்வொருவரையும் துண்டுதுண்டாக பிரிக்க கூடிய விஷயம்தான் சாதி. அதை என்னுடைய கலாசாரமாகவோ பண்பாடாகவோ பார்க்க முடியாது. சிறுவயது பாடப்புத்தகம் கூட சொல்கிறது சாதி தவறு என்று. இந்திய அரசியலமைப்புச் சட்டம் எங்கேயும் சாதியை அங்கீகரிக்கவில்லை. அதை எப்படி ஒழிக்க வேண்டும் என்றுதான் நாம் சிந்திக்க வேண்டும். இந்த கேடான விஷயத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதே குற்றம் என நினைக்கிறேன். சாதிக்குள் செய்துவைத்த திருமணங்கள் விவாகரத்து ஆகவே இல்லையா? பிரச்னைகள் வரவே இல்லையா?

ஒருபுறம் இப்பல்லாம் யார் சாதியை பார்க்கிறார்கள் எனப் பேசிக்கொண்டு மறுபுறம் சாதிக்கென்று மேட்ரிமோனியை தேடுகிறோம். இதில் எவ்வளவு முரண்பாடு உள்ளது. சாதி தவறு என சொல்பவர்கள் அதை விட்டு வெளியே வர வேண்டும் என்றுதான் நினைக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

இதுதொடர்பான புதிய தலைமுறை 360 டிகிரி விவாத நிகழ்ச்சியின் வீடியோ தொகுப்பு பின்வருமாறு...

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்