Published : 22,Jun 2021 02:20 PM
கொரோனா 3-வது அலையை சமாளிக்க, சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்: ராகுல் காந்தி

'நாட்டில் மூன்றாவது அலை உருவாவதை தவிர்க்க முடியாது என்பதால், அதை எதிர்கொள்ள மத்திய அரசு சுகாதார கட்டமைப்புகளை தயாராக வைத்திருக்க வேண்டும்' என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா பரவலை தடுப்பது குறித்து பேட்டியளித்த ராகுல் காந்தி, "முதல் இரு அலைகளை எதிர்கொண்டு கட்டுப்படுத்துவதில் மத்திய அரசின் நிர்வாக திறன் தோல்வியை சந்தித்து விட்டது" என குற்றம்சாட்டினார். மேலும், "கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருகிறது. அதை எதிர்கொள்வதில் எந்த இடத்தில் அரசு தோல்வியை சந்தித்தது என்பதை சுட்டிக்காட்டுவதன் மூலம், அடுத்த வரப்போகும் அலைகளை தடுக்க முடியும்" என ராகுல் கூறினார்.
"பற்றாக்குறை இல்லாமல் ஆக்சிஜன் கையிருப்பில் இருந்திருந்தால் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 90 சதவிகிதம் பேரை காப்பாற்றி இருக்க முடியும். போதிய அளவுக்கு ஆக்சிஜன் கையிருப்பில் இருந்தால் தான் மக்களை காப்பாற்ற முடியுமே தவிர, பிரதமர் வெறுமனே கண்ணீர் விடுவதால் அல்ல" என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
மேலும் பேசும்போது, "ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பது சிறந்த பணி தான். எனினும் ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் வரை அரசு தொய்வு இல்லாமல் அனுதினமும் உழைக்க வேண்டும்" என்றும் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டார்.