Published : 21,Jun 2021 12:40 PM

சட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்

Governor-speech-at-16th-legislative-assembly-meeting

தமிழகத்தின் 16-வது கூட்டத்தொடரை தொடக்கிவைத்து பேசிய ஆளுநர் தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் மத்திய அரசிடம் வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து பேசினார். 

தமிழகத்தின் 16வது கூட்டத்தொடரின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. கலைவாணர் அரங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டத்தொடருக்கு வருகை தந்துள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சபாநாயகர் அப்பாவு மற்றும் செயலாளர் ஆகியோர் முறைப்படி வரவேற்றனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் கூட்டத்தொடர் இதுவாகும். ஐடி கார்டு பெற்ற கொரோனா இல்லாத எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

கூட்டத்தொடரை தொடக்கிவைத்த ஆளுநர், ’’தமிழ் இனிமையான மொழி; எளிமையான வாழ்க்கை வாழுங்கள்’’ என்று கூறி உரையைத் தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், ’’சமூக நீதி, ஆண் - பெண் சமத்துவம், அனைவருக்குமான பொருளாதார நீதியை அடிப்படையாகக் கொண்டிருக்கும் அரசு இது. அரசின் ஒவ்வொரு செயலும், சட்டமும், திட்டமும், முயற்சியும் இந்த கொள்கைகளைக் கொண்டிருக்கும். தனக்கு வாக்களித்தோர் என்றும், வாக்களிக்காதோர் என்றும் எந்தவித பாரபட்சமின்றி அனைத்து மக்களுக்குமான அரசாக செயல்படும். உறவுக்கு கைகொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற கொள்கைக்கு ஏற்ப ஒன்றிய அரசுடன் நல்லுறவு பேணுவோம். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு தமிழக அரசு உயர் முன்னுரிமை அளிக்கும். சாதிமதப் பிரச்னை இல்லாத அமைதியான, இணக்கமான சூழல் மாநில வளர்ச்சிக்கு இன்றியமையாதது.

சட்டமன்றத்தில் 60 ஆண்டுகள் அரும்பணியாற்றிய ஓர் ஒப்பற்ற தலைவராக திகழ்ந்தார் கருணாநிதி. அவர் இல்லையென்றாலும் அவரின் கொள்கைகள் இந்த அரசை வழிநடத்திச் செல்லும், கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கப்படும். தமிழகம் முழுவதும் உழவர் சந்தைகள் மீண்டும் அமைக்கப்படும். அதேபோல், மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்களின் மீதான புகார்கள் விசாரிக்கும் லோக் ஆயுக்தா அமைப்பிற்கு உரிய அதிகாரம் அளிக்கப்படும். ஊழல் தடுப்பு விழிப்பு பணி ஆணையரகம் முடுக்கிவிடப்பட்டு நிலுவையில் உள்ள புகார்கள் விசாரிக்கப்படும்.

தமிழை இந்திய அலுவல் மொழியாக்க தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும். தமிழை ஒன்றிய அரசின் அலுவலகங்களிலும், வங்கிகளிலும் இணை அலுவல் மொழியாக பயன்படுத்தவேண்டும். அதேபோல் மாநிலங்களுக்கு சுயாட்சி என்ற இலக்கை எட்ட அரசு உறுதியாக உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தமிழக அரசுக்கு தேவைப்படும் உதவிகளுக்கு பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் முதல்வர் முன்வைத்துள்ளார். தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ஆனால் ஒன்றிய அரசு வழங்கும் தடுப்பூசியின் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. தமிழகத்துக்கு ஒன்றிய அரசு ஒதுக்கும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை உயர்த்திட வேண்டும். கொரோனா மூன்றாம் அலையை சமாளிக்க அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொள்ளும். திரவ மருத்துவ ஆக்சிஜன் வழங்க ரூ.50 கோடி, மூன்றாம் அலை முன்னேற்பாடு நடவடிக்கைக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்திலுள்ள பல அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சேமிப்பும் உற்பத்தி திறனும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தின் நிதி நிலைமை கவலைக்குரியதாக இருக்கும் இந்த சூழலில் இதுகுறித்த வெள்ளை அறிக்கை ஜூலையில் வெளியிடப்படும். தமிழக நிதிநிலையின் தற்போதைய உண்மை நிலையை வெள்ளை அறிக்கை விளக்கும். உழவர் நலனை பேணவும், வேளாண் உற்பத்தியை பெருக்கவும் வேளாண்மை துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை வெளியிடப்படும். முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழுவை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அந்த குழுவில் நோபல் பரிசுபெற்ற எஸ்தர் டஃப்லோ, ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் ஆகியோர் இடம்பெறுவர்’’ என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘’நீட் தேர்வை ரத்துசெய்ய சட்ட முன்வடிவை கொண்டுவந்து குடியசுரத் தலைவரின் ஒப்புதலை பெறுவோம். தமிழகத்தில் நீட் தேர்வால் மாணவர்கள் பாதிப்படையாமல் இருக்க தேவையான சட்டங்கள் நிறைவேற்றப்படும். நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய அமைக்கப்பட்டுள்ள ஏ.கே.ராஜன் குழுவின் பரிந்துரையை பெற்று சட்ட முன்வடிவுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அதேபோல், புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பிப்போருக்கு 15 நாளில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். கொரோனா பெருந்தொற்றின் தீவிரம் குறைந்தவுடன் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்படும். உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பாக ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட எல்லை வரைவு முறையாக இருப்பதை உறுதி செய்தபின்னர் தேர்தல் நடத்தப்படும்.

image

பெரிய நகரங்களில் நெருக்கடியை குறைக்க புறநகர் பகுதிகளில் நவீன வசதிகளுடன் துணை நகரங்கள் உருவாக்கப்படும். சென்னையில் மாநகர கட்டமைப்பை நவீன சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் வகையில் சிங்காரச் சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படும்.

நிலத்தடி நீர் பயன்பாட்டை முறைப்படுத்த புதிய சட்டம் இயற்றப்படும். கர்நாடக அரசால் திட்டமிடப்பட்டுள்ள மேகதாது அணை திட்டத்தை ஒன்றிய அரசு நிராகரிக்கவேண்டும். முல்லைப் பெரியாறு அணையினை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள தேவையான அனுமதியை ஒன்றிய அரசும், கேரள அரசும் வழங்கவேண்டும். மாவட்டம்தோறும் பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் நிறுவப்படும். கால்நடை பராமரிப்பு, இயற்கை வேளாண்மை, தோட்டக்கலை பயிர்களை பயிரிடுதல் ஆகியவை ஊக்குவிக்கப்படும்.

தற்போது தமிழகத்தில் வழங்கப்படும் 69% இட ஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும். தமிழக சுற்றுலா திறனை முழுமையாக வெளிக்கொணர ஒரு பெருந்திட்டம் நடப்பாண்டில் வெளியிடப்படும். பழங்கால கோட்டைகள், அரண்மனைகள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு சுற்றுலாத்தலங்கள் மேம்படுத்தப்படும். கோயில் நிதி, நிலம், சொத்துகளை பாதுகாக்க மீண்டும் உயர்மட்ட ஆலோசனை குழு அமைக்கப்படும்’’ என்றார்.

மேலும், ‘’நிதி நிறுவனங்களில் கடன்பெறுவதற்கு சொத்து ஆவணங்களை அடமானம் வைக்கும் பத்திரப்பதிவு முத்திரை தீர்வையில் இருந்து டிசம்பர் மாதம்வரை விலக்கு அளிக்கப்படும். கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தொழில்நிறுவனங்களை விரைவாக மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொழில் நிறுவனங்களில் பணியாளர்களால் செலுத்தப்படும் தொழில்வரியை செலுத்துவதற்கான கால அளவு 3 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் தொழில்வளர்ச்சியை மேம்படுத்தவும் தொழில்நிறுவனங்களை தொடங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னை - பெங்களூரு தொழில் பெருவழிவில் அமைந்துள்ள வடமாவட்டங்களில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும், தொழில்நிறுவனங்களை தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநிலத்திலுள்ள அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் தடையின்றி மின்சாரம் வழங்குவதே அரசின் நோக்கமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் தவறான நிர்வாகத்தால் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழக நிதிநிலை மற்றும் நிர்வாக கட்டமைப்பு குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மின் திட்டங்களை விரைவாக நிறைவேற்றி மின் உற்பத்தி திறன் மேம்படுத்தப்படும்.

கச்சத்தீவை மீட்பது குறித்து ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்துவோம். அதேபோல் தமிழக மீனவர்களை இலங்கை படை தாக்குவதை நிரந்தரமாக தடுக்க ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும்’’ என்று கூறியுள்ளார். இவை தவிர, திமுக அரசு அறிமுகப்படுத்தவுள்ள திட்டங்கள் மற்றும் ஒன்றிய அரசிடம் மாநில அரசின் கோரிக்கைகள் குறித்த பல்வேறு தகவல்களையும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்றையக் கூட்டத்தொடரில் தெரிவித்துள்ளார்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்