Published : 05,Jun 2021 10:58 PM

ஓடிடி திரைப் பார்வை: `சைக்கிள்` -கேசவின் திருடுபோன மஞ்சள் நிற சைக்கிள் பறக்குமா...?

Cycle--2017-film----Movie-Review

ஓடிடி தளங்கள் வந்த பிறகு பல மாற்று சினிமா முயற்சிகளுக்கு நல்ல வெளி கிடைத்திருக்கிறது. சினிமா ரிலீஸ் என்பது திரையரங்கை மட்டுமே நம்பி இருந்த காலத்தில் எத்தனையோ நல்ல படைப்புகள் மக்களை சென்றடையாமல் போயிருக்கின்றன. அதே நேரம் சுமாரான பல சினிமாக்கள்கூட அதன் வணிக சரத்துகளுக்காக ரிலீஸ் ஆகி இருக்கின்றன. ஆனால் நதியானது தனக்கான பாதையை தானே வகுத்துக் கொள்ளும் என்பது போல கலையானது தனக்கான ஒரு வெளியை ஓடிடி தளங்களின் மூலம் உருவாக்கிக் கொண்டுள்ளது.

ஓடிடி திரைப்பார்வை எனும் இத்தொடரிலும் கூட இதற்குமுன் திதி, பாரம், போட்டோ ப்ரேம் போன்ற சில மாற்று சினிமா முயற்சிகளுக்கு இடம் வழங்கி இருக்கிறோம். அவ்வரிசையில் இன்று நாம் காண இருக்கும் மராத்திய மொழி சினிமா ‘சைக்கிள்’. 2017ஆம் ஆண்டு வெளியான இந்த மராத்தியமொழி சினிமா மகாராஷ்டிரத்தின் ஒரு சிறிய கிராமத்தில் படைக்கப்பட்டிருக்கிறது.

image

ஆங்கிலேயர் இந்தியாவிலிருந்து வெளியேறிய ஒரு தசாப்த காலத்திற்கு பிறகு நடப்பது போலொரு காலத்தில் கதை சொல்லப்பட்டிருக்கிறது. மகாராஷ்டிராவின் ஒரு தொலை தூர கிராமத்தில் வசிக்கிறார் கேசவ். தனது 5 வயது மகள், மனைவி மற்றும் தனது தந்தையுடன் வசிக்கும் கேசவிற்கு அவ்வூரில் பெரிய மரியாதை. எளிய மனிதர் எல்லோரிடமும் நன்றாக பழகும் குணம் கொண்டவர். கேசவ் அவ்வூர் மக்களின் நம்பிக்கைக்குரிய மருத்துவரும் ஜோதிடரும் கூட. அதனால் தங்கள் எதிர்காலத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவ்வூர் மக்களுக்கு அவரை பார்க்கும் போதெல்லாம் வருகிறது.

கேசவிடம் ஒரு மிதிவண்டி உண்டு. அந்த ஜில்லாவில் கேசவை தெரியாதவர்களுக்கும் கூட கேசவின் மஞ்சள்நிற சைக்கிளைத் தெரியும். அந்த சைக்கிள் கேசவின் தாத்தாவுடையுது. ஒரு முறை வெள்ளைக்காரர் ஒருவருக்கு வயிற்றுவலி ஏற்படவே அதனை கேசவின் தாத்தா சரி செய்திருக்கிறார். அதற்குப் பரிசாக அந்த ஆங்கிலேயர் நாட்டை விட்டு வெளியேறும் போது தன்மஞ்சள் நிற சைக்கிளை கேசவின் தாத்தாவிற்கு பரிசாக கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார். தற்போது அந்த சைக்கிள் தாத்தாவின் பரிசாக கேசவிடம் உள்ளது. கேசவின் மகள் அந்த மஞ்சள் நிற சைக்கிள் குறித்து சில கற்பனைகளை வைத்திருக்கிறாள். யாரும் பார்க்காத போது அந்த சைக்கிள் பறக்கும் என்பது சிறுமியின் நம்பிக்கை. அளவான குடும்பம் எளிய வாழ்வு என வாழ்ந்து வந்த கேசவின் சைக்கிள் திருடு போகிறது. தன் வாழ்வின் அங்கமாக பாவித்து வந்த சைக்கிள் திருடு போன பிறகு கேசவ் ரொம்பவே வருத்தப்படுகிறார். பிறகு அவருக்கு அந்த சைக்கிள் கிடைத்ததா...? அந்த சைக்கிளை திருடிச் சென்ற திருடர்களுக்கு அந்த சைக்கிள் கொடுத்த அனுபவங்கள் என்ன என்பதே இப்படத்தின் திரைக்கதை.

image

ஆதித் மோகி எழுதிய இந்தக் கதையினை இயக்கி இருக்கிறார் இயக்குநர் பிரகாஷ் குண்டே. நம்மை தன் திரைமொழியால் ஒரு அழகான கிராமத்திற்கு அழைத்துப் போயிருக்கிறார். 50 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு ஊர், அதன் மக்கள், மொழி என அனைத்திலும் பிரத்யேக கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. இயக்குநரை விடவும் பெரிதாக பாராட்டப்பட வேண்டியவர் இந்த சினிமாவின் ஒளிப்பதிவாளர் அமலந்த் சவுத்ரி இந்த சினிமாவின் ஒவ்வொரு சட்டத்தையும் ஒரு ஓவியம் போல தீட்டி இருக்கிறார். பீரியட் பிலிம்களை ஒளிப்பதிவு செய்வதில் ஆர்வமும் திறமையும் கொண்டவர் அமலந்த் சவுத்ரி இவரது ஒளிப்பதிவில் உருவான ஹரிஸ்சந்திராச்சி பேக்டரி எனும் சினிமா முக்கியமானது. தாதா சாகேப் பால்கேவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான அதனை சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருப்பார் அமலந்த் சவுத்ரி. கேஷவாக நடித்திருக்கும் க்ரிஷிகேஷ் ஜோஸியின் அலட்டல் இல்லாத நடிப்பு இப்படத்தின் பலம்.

image

2017ல் வெளியான சைக்கிள் எனும் இந்த சினிமா தற்போது நெட்பிளிக்ஸில் கிடைக்கிறது. தொழில்நுட்பம், ஒளிப்பதிவு என இப்படம் குறித்து பல சிறப்பு விசயங்களை சொல்லிக் கொண்டு போனாலும் இக்கதையில் மனதைத் தொடும் வசீகரம் இல்லை. மக்கள் மனதில் ஒரு அழுத்தமான தாக்கத்தை இப்படம் கதையளவிலும், திரைக்கதையளவிலும் ஏற்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. என்றாலும் இதுஒரு நல்ல முயற்சி. கேன்ஸ் திரைப்படவிழாவில் இதுவரை திரையிடப்பட்ட மூன்று மராத்திய மொழிப்படங்களில் சைக்கிளும் ஒன்று. கொல்ஹாபூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த நடிகருக்கான விருதுகளை இப்படம் பெற்றது. மேலும் சிறந்த ஆடை வடிவமைப்புக்கான தேசிய விருதினையும் இப்படம் பெற்றிருக்கிறது.

கட்டுப்பாடுகளற்ற ஓடிடி தளங்களின் வருகை சைக்கிள் போன்ற இன்னும் பல நல்ல படைப்புகள் உருவாக வழிவகுக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

- சத்யா சுப்ரமணி

முந்தைய ஓடிடி திரைப்பார்வை: ஃபாரஸ்ட் கம்ப் - குழந்தை மனம் கொண்ட மகத்தான மனிதனின் கதை!

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்