Published : 23,Apr 2021 06:42 PM

'ஒரே நாடு' என்ற உணர்வுடன் பணியாற்றுவோம்: மாநிலங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

PM-Modi-chairs-meeting-on-Covid-19-situation-with-Chief-Ministers-of-high-burden-states

கொரோனாவுக்கு எதிராக ஒரே நாடு என்ற உணர்வுடன் பணியாற்றுவோம் என்ற பிரதமர் மோடி, ஒருங்கிணைந்த முயற்சிகளால், நாடு முழுவதும் கோவிட் தொற்றின் இரண்டாவது அலையையும் நம்மால் தடுத்து நிறுத்த முடியும் என்று மாநிலங்களுக்கு நம்பிக்கை அளித்தார்.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுடனான உயர்நிலைக் கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, "பல மாநிலங்களிலும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. நாம் கூட்டு சக்தியுடன் தொற்றை எதிர்த்து போராட வேண்டும். கொரோனா முதலாவது அலையின்போது, இந்தியாவின் வெற்றிக்கு மிகப் பெரிய அடிப்படையாக இருந்தது, நமது ஒருங்கிணைந்த முயற்சிகள் மற்றும் யுக்திகள்தான். அதேபோல், இந்த சவாலையும் தீர்க்க வேண்டும். 

இந்தப் போராட்டத்தில், அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய அரசு முழு ஆதரவை அளிக்கும். சுகாதாரத் துறை அமைச்சகம், அனைத்து மாநிலங்களுடனும் தொடர்பில் உள்ளது. நிலைமையை உன்னிப்பாக கண்காணிக்கிறோம். மாநிலங்களுக்கு அவ்வப்போது தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். ஆக்சிஜன் விநியோகத்தை அதிகரிக்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக அரசின் சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் அமைச்சகங்கள் இணைந்து செயல்படுகின்றன. தொழிற்சாலை ஆக்சிஜன்களும், அவசர தேவையை எதிர்கொள்ள மாற்றிவிடப்படுகின்றன.

மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் தொடர்பான தேவைகளை நிறைவேற்ற அனைத்து மாநிலங்களும் ஒன்றுக்கொன்று இணைந்து செயல்பட வேண்டும். ஒரே நாடு என்ற உணர்வுடன் நாம் பணியாற்றினால், வளங்களுக்கு பற்றாக்குறை ஏற்படாது. ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் பதுக்கப்படுகிறதா, கள்ளச் சந்தையில் விற்கப்படுகிறதா என்பதை மாநிலங்கள் சோதனை செய்ய வேண்டும். எந்த மாநிலத்தைச் சேர்ந்த ஆக்சிஜன் டேங்கர் லாரிகளும், தடுத்த நிறுத்தப்படக்கூடாது என்பதை ஒவ்வொரு மாநிலமும் உறுதி செய்ய வேண்டும். 

மாநிலத்தின் பல மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்ல, உயர்நிலை ஒழுங்கிணைப்பு குழுவை உருவாக்க வேண்டும். மத்திய அரசின் ஒதுக்கீடு கிடைத்ததும், இந்த ஒருங்கிணைப்பு குழு, மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு தேவைக்கேற்ப உடனடியாக அனுப்புவதை உறுதி செய்ய வேண்டும். ஆக்சிஜன் விநியோகம் செய்பவர்களுடன் நேற்று ஒரு கூட்டத்துக்கு நான் தலைமை தாங்கினேன். ஆக்சிஜன் விநியோகத்தை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்க இன்றும் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ளப் போகிறேன்.

ஆக்சிஜன் டேங்கர் லாரிகளின் பயண நேரத்தை குறைக்க முடிந்த அளவு அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக, ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க ரயில்வே தொடங்கியுள்ளது. காலி ஆக்சிஜன் டேங்கர்கள் கொண்டு செல்லும் பயண நேரத்தை குறைக்க, விமானப்படை விமானங்கள் மூலம் ஆக்சிஜன் டேங்கர்கள் கொண்டு செல்லப்படுகின்றன. வளங்களை மேம்படுத்துவதுடன், பரிசோதனையிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். மக்களுக்கு எளிதில் கிடைக்கும் விதத்தில் கொவிட் பரிசோதனை அனைத்து இடங்களிலும் நடத்தப்பட வேண்டும். இந்த சூழ்நிலையில், நமது தடுப்பூசி திட்டம், தாமதமாகக் கூடாது. உலகின் மாபெரும் தடுப்பூசி திட்டத்தை இந்தியா செயல்படுத்துகிறது. 

இதுவரை 13 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் வரை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு இலவச தடுப்பூசி வழங்க தொடங்கப்பட்ட பிரசாரம், அதே வழியில் தொடர்கிறது. மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும். அதிகளவிலான மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு, நாம் திட்ட இலக்குடன் செயல்படுத்துவது அவசியம்.

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பதுடன், மருத்தவமனைகளின் பாதுகாப்பும் மிகவும் முக்கியம். சமீபத்தில் நடந்த ஆக்சிஜன் கசிவு, மருத்துவமனைகளில் நடந்த தீ விபத்து சம்பவங்கள் கவலை அளிக்கின்றன. பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து மருத்துவமனையின் நிர்வாகப் பிரிவு ஊழியர்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். மக்கள் பீதியடைந்து பொருட்களை வாங்காத வகையில், நிர்வாகம் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒருங்கிணைந்த முயற்சிகளால், நாடு முழுவதும் கோவிட் தொற்றின் இரண்டாவது அலையையும், நம்மால் தடுத்து நிறுத்த முடியும்" என்றார் பிரதமர் மோடி.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்