[X] Close >

'ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பாலியல் வன்கொடுமை!' - நடவடிக்கைக்கு பிரதமர் மோரிசன் உறுதி

Woman-alleges-raped-in-Australian-parliament--PM-apologises-for-way-complaint-handled

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சக ஊழியர் ஒருவரால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானதாக குற்றம்சாட்டிய பெண்ணிடம் மன்னிப்பு கேட்டார் அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன். மேலும், இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.


Advertisement

கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் லிண்டா ரெனால்ட்ஸ் அலுவலகத்தில், பிரதமர் மோரிசனின் ஆளும் லிபரல் கட்சியில் பணியாற்றிய ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அந்த பெண் கூறியிருந்தார். அதே ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக காவல்துறையினரிடம் தெரிவித்தார். தனது வேலைக்கு பிரச்னை ஏற்படும் என்ற கவலை ஒருபக்கம் இருந்தபோதிலும், அவர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அவரது இந்தக் கூற்றை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் லிண்டா ரெனால்ட்ஸ் அலுவலகத்தில் உள்ள மூத்த அதிகாரிகளிடம், தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை கூறியிருக்கிறார். இந்தப் புகார் தொடர்பாக தனக்கு தகவல் வந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சர் ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில்தான் ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டு, விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், `இது நடந்திருக்கக் கூடாது. நான் மன்னிப்புக்கேட்டுக் கொள்கிறேன். பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதை நான் உறுதி செய்ய விரும்புகிறேன்" என்றார்.


Advertisement

கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் குறித்து தனது மேலதிகாரிகளிடம் சொன்னபோது, பெரிய அளவில் ஆதரவு கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார் பாதிக்கப்பட்ட பெண்ணான பிரிட்டானி ஹிக்கின்ஸ். 26 வயதாகும் பிரிட்டானி ஹிக்கின்ஸ், நேற்று (பிப்ரவரி 15, திங்கட்கிழமை) இதுதொடர்பாக அளித்த பேட்டி, அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

என்னதான் நடந்தது?

"அது ஓர் இரவு நேரம். வெளியே ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, நாடாளுமன்றத்தில் உடன் பணிபுரியும் மூத்த அதிகாரி ஒருவர் என்னை காரில் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன் என்று கூறினார். சரி என நானும் ஒப்புக்கொண்டு காரில் ஏறினேன். ஆனால் அவர் வீட்டுக்கு செல்லவில்லை. மாறாக, அவர் காரை நாடாளுமன்றத்துக்கு ஓட்டிச் சென்றார். நான் அப்போது மதுபோதையில் இருந்தேன். ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் லிண்டா ரெனால்ட்ஸ் அலுவலகத்தில் இரவு தூங்கிவிட்டேன். கண்விழித்த பார்த்தபோது, அந்த மூத்த அதிகாரி பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்.


Advertisement

'நிறுத்துங்கள்! என்னை விட்டுவிடுங்கள்' என்று கூறி நான் அழத்தொடங்கினேன். கத்தினேன். நாடாளுமன்றத்தை விட்டு வெளியே சென்றபோது, எந்த காவலாளியும் எனக்கு உதவ முன்வரவில்லை. இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தால் ஆதரவு கொடுக்கிறேன் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ரொனால்ட் கூறினார். பிறகு, பாலியல் வன்கொடுமை செய்த அதிகாரி அமைச்சரின் அலுவலகத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டார்" என்று பேட்டி ஒன்றில் பிரிட்டானி தெரிவித்துள்ளார்.

தற்போது, இந்த விவகாரத்தில் பிரதமர் ஸ்டாட் மோரிசனின் அணுகுமுறை கவனத்தை ஈர்த்துள்ளது.

image

யார் இந்த பிரதமர் ஸ்காட் மோரிசன்?

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் 1968-ஆம் ஆண்டு ஜென்னி மோரிசன், ஜான் மோரிசன் ஆகியோருக்கு மகனாக பிறந்தார் ஸ்காட் மோரிசன். தீவிர பற்றுள்ள கிறிஸ்தவ குடும்பம் அவருடையது. தந்தை காவல்துறை அதிகாரியாக இருந்து பின்னர் அரசியல்வாதியாக பரிணமித்தவர். அப்பா ஓர் அரசியல்வாதி என்பதால் தனது 9 வயதிலிருந்தே அரசியலில் ஈடுபடுத்திக்கொண்டாவர் மோரிசன். அப்போது அவர் தனது தந்தைக்கு ஆதரவாக துண்டு பிரசுரங்களை விநியோகித்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். தனது சிறுவயதிலேயே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு திறமைகளை வெளிப்படுத்தினார். விக்ஸ் விளம்பரங்கள் உள்ளிட்ட விளம்பரங்களுக்கு பின்னணி குரலும் கொடுத்திருக்கிறார்.

நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு, அவர் பல்வேறு வேலைகளை செய்துவந்தார். இறுதியாக 2007-ஆம் ஆண்டு லிபரல் கட்சி மூலமாக சீட் பெற்று நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார். தன்னுடைய தொடர் உழைப்பால் விரைவிலேயே வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சித் துறைக்கான நிழல் அமைச்சர் பதவியை வகித்தார். (நிழல் அமைச்சர் என்பது எதிர்கட்சிகளில் உள்ளவர்களுக்கு அளிக்கப்படும் அமைச்சர் பொறுப்பு) அதையடுத்து, குடியுரிமைக்கான நிழல் அமைச்சரானார். லிபரல் கட்சியின் பிரசாரங்களுக்கு தலைமை தாங்கியும், கட்சியின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியும் வந்தார்.

அதுவரை எதிர்கட்சி அந்தஸ்தில் இருந்த லிபரல் கட்சி, 2013-ஆம் ஆண்டு தேர்தலில் வென்று, கூட்டணி அரசாங்கத்தை அமைத்தபோது, மோரிசன் குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றார். பின்னர் சமூக சேவை அமைச்சரானார். இதனிடையே பிரதமராக இருந்த மால்கம் டர்ன்புல் கட்சியினால் நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து 9 மாதங்கள் ஸ்காட் மோரிசன் பிரதமராக பதவி வகித்தார்.

2019-ஆம் ஆண்டு 151 இடங்களைக் கொண்ட அந்த நாட்டின் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் ஸ்காட் மோரிசனின் லிபரல் கட்சி தேசிய கூட்டணிக்கும், பில் சார்ட்டன் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. ஆஸ்திரேலிய மக்களிடையே தனக்கான இடத்தை உருவாக்கி வைத்திருந்த மோரிசன், கருத்து கணிப்புகளை பொய்யாக்கி, வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார். அவர் ஆட்சியை பிடித்ததும், 7 பெண் அமைச்சர்களை நியமித்தார். ஆஸ்திரேலியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவு அதிக எண்ணிக்கையிலான பெண்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்பட்டது. மேலும் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகள் பெண் அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது பாராட்டுகளை பெற்றது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close