[X] Close >

”பேயாக நடிப்பது ரொம்ப கஷ்டம்” – ’யாரடி நீ மோகினி’ புகழ் யமுனா சிறப்பு பேட்டி

actress-yamuna-chinnadurai-special-interview

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘யாரடி நீ மோகினி’ சீரியலில் அன்பான;அழகான; அநீதியை கண்டால் பொங்கியெழும் பேயாக சித்ரா கேரக்டரில் நடிப்பால் மிரட்டி வருபவர் நடிகை யமுனா சின்னத்துரை. சீரியலைப் பார்க்கும் அனைவருமே ‘சித்ரா எப்போ வருவாங்க? சித்ரா வரணும்… வரணும்’ என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் காத்திருப்பார்கள். அப்படியொரு, நல்ல பேயாக நடித்துவரும் யமுனா, தற்போது விஜய் டிவியில் ‘செந்தூரப்பூவே’, சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘அபியும் நானும்’ தொடர்களில் பிஸியாக நடித்து வருகிறார். அவரிடம், சில கேள்விகளை முன்வைத்தோம்,


Advertisement

சீரியலுக்கு வந்தது எப்படி?

சிறு வயதில் எனக்கு டாக்டர் ஆகவேண்டும் என்பதுதான் விருப்பம். சீரியலில் நடிக்கவேண்டும் என்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. எனது அம்மா கலாதான் என்னையும் தங்கையையும் சீரியலுக்குள் கொண்டு வந்தார். ஸ்கூல் சென்று கொண்டிருக்கும்போது, குடும்பச் சூழ்நிலை பொருளாதார ரீதியில் முன்னேற்றமில்லாமல் இருந்தது. அதனால், படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு  குடும்பத்தை முன்னேற்ற உதவியாக இருக்கும் என்பதற்காக நடிக்க வந்துவிட்டேன். பள்ளிக்குத்தான் செல்லவில்லையேத் தவிர, பிரைவேட்டாக படிப்பை தொடர்ந்துகொண்டுதான் வந்தேன். இப்போதுவரை, டாக்டர் ஆகவில்லையே என்கிற வருத்தம் உள்ளது.


Advertisement

image

பெரும் வரவேற்பைப் பெற்ற ’யாரடி நீ மோகினி’ சீரியல் வாய்ப்பு எப்படி வந்தது?

சீரியல் ஆரம்பிப்பதற்கு முன்பு, ஆடிஷன் நடக்கிறது என்று நண்பர்கள் சொன்னார்கள். எப்போதும் ஆடிஷன் செல்வதுபோல் இதிலும் கலந்துகொண்டேன். முதலில் என்னை வெண்ணிலா, ஸ்வேதா கேரக்டருக்காகத்தான் ஆடிஷன் நடத்தினார்கள். ஆனால், எனக்கு செட் ஆகவில்லை. ரொம்ப எமோஷனாக பேசியதாலும், கண்கள் பெரியதாக இருந்ததாலும் சீரியலின் டைட்டிலான ‘யாரடி நீ மோகினி’ கேரக்டருக்குத்தான் செட் ஆகிறேன் என்று  பேயாக நடிக்க வைத்து வருகிறார்கள், ஆனால், ’யாரடி நீ மோகினி’ சீரியலில் எனது கேரக்டர் இவ்வளவு சக்சஸ்ஃபுல்லாக மாறும் என்று எதிர்பார்க்கவே இல்லை. அதுவும்,1000 எபிசோட்டை தாண்டிப் போய்க்கொண்டிருக்கிறது.


Advertisement

என் வாழ்க்கையில் ஆரம்ப நாளில் இருந்து தொடர்ச்சியாக 1000 எபிசோடுகள் கடந்த சீரியல் என்றால், அது யாரடி நீ மோகினி சீரியல்தான். அதுவும், சீரியலின் டைட்டிலுக்கே நான் தான் சொந்தக்காரி என்பதில் இன்னும் பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. பேயாக இருந்த நான், தற்போது ‘அபியும் நானும் சீரியலில் அழகான தேவதையாக கீர்த்தி கேரக்டரில் நடிக்கிறேன்.

image

பேயாக நடிக்கவேண்டும் என்றவுடன் என்ன தோன்றியது?

நான் முதன் முதலில் நடித்த ’காத்து கறுப்பு’ சீரியலில் கூட பேயாகத்தான் நடித்தேன், எந்த கேரக்டர் கொடுத்தாலும் சிறந்த நடிப்பை வழங்க வேண்டும் என்று நினைப்பவள் நான். அதனால், பேயாக நடிக்கவேண்டும் என்றபோது எந்த தயக்கமும் வருத்தமும் ஏற்படவில்லை. வித்யாசமான கேரக்டரில் நடிக்கிறோம் என்றுதான் சந்தோஷப்பட்டேன். பாஸிட்டிவ், நெகட்டிவ் என்று எதில் நடித்தாலும் பேய் கேரக்டர்தான் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்கும்.

image

உங்களுக்கு பேய் நம்பிக்கை இருக்கிறதா?

பேய் இருக்குன்னும் சொல்லமாட்டேன். இல்லன்னும் சொல்லமாட்டேன். ஆனால்,  நம்ம குடும்பத்தில் இறந்தவர்கள் வந்து கனவில் ஏதாவது அறிவுறுத்துவார்கள்; வழிகாட்டுவார்கள். எனக்கும் அப்படி கனவுகள் வந்திருக்கு; நடந்தும் இருக்கிறது. நான் அனுபவப்பட்டிருக்கேன்.

image

வெளியில் உங்களைப் பார்க்கும் ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?

இதுவரை கேரக்டர் பேரான சித்ரா பெயரை யாரும் அழைத்ததே இல்லை. எல்லோரும் ’அய்யோ பேய் வருது.. அய்யோ பேய் போகுது பாரு’ என்றுதான் சொல்கிறார்கள். ’என்னடா இது, சித்ரான்னு யாரும் சொல்ல மாட்றாங்க. பேய் பேய்ன்னே சொல்றாங்க’ என்று சில நேரங்களில் அலுத்துக்கொள்வேன். ஆனால், அந்தளவுக்கு கேரக்டர் ரீச் ஆகியுள்ளதே என்று நினைத்தவுடன் ஹேப்பியாகிவிடுவேன்.

image

சீரியலில் உங்களுக்கும் வில்லியாக நடிக்கும் சைத்ராவுக்கும் தொடர்ந்து சண்டையாக இருக்கிறதே?

நிஜத்தில் நாங்க ரெண்டுப் பேருமே ரொம்ப நல்ல ஃப்ரண்ட்ஸ். என்னை விட வயதில் குறைவானவராக இருந்தாலும் அன்போடு அக்கா என்றுதான் அழைப்பாள் சைத்ரா. சீரியலில்தான் வில்லியாக நடிக்கிறார். ஆனால், ரொம்ப பாசமானவள். அடிக்கடி இருவரின் காஸ்டியூம்களைப் பார்த்துவிட்டு பாராட்டிக்கொள்வோம். காட்சிகள் சிறப்பாக வந்தாலும், உடனுக்குடன் பாராட்டுவோம்.

image

’யாரடி நீ மோகினி’ சீரியலில் சொந்தக் குரலில் பேசுகிறீர்களா?

அது, என் குரல் கிடையாது. இதுவரை எனக்கு யார் குரல் கொடுக்கிறாங்கன்னும் தெரியாது. பெயரும் தெரியாது.

சீரியலில் தைரியமான பெண்ணாக… அநீதியைக் கண்டால் பொங்கியெழுந்து வந்துவிடுகிறீர்களே? நிஜத்தில் எப்படி?

நிஜத்திலும் நான் துணிச்சலான பெண்தான். ஆனால், யாரையும் பேசி கஷ்டப்படுத்தக்கூடாது என்று யோசித்து யோசித்துப் பேசுவேன். எல்லோரிடமும் அன்புடனும் நட்புடனும் பழகவே விரும்புவேன். ஆனால்,யாராவது என்னை சும்மா நோண்டினால் சும்மா இருக்கமாட்டேன். சீரியலில் எப்படியோ அப்படித்தான். எனக்குள்ளும் ஒரு சித்ரா இருக்கிறாள். அவள் அடிக்கடி எட்டிப் பார்ப்பாள்.

image

எதில் நடிப்பது கடினம்?

பேயாக நடிப்பதுதான் ரொம்பக் கஷ்டம். கண்ணை உருட்டுவது நாக்கை கடிப்பது போன்றவை கடினமாக இருந்தாலும், ஒவ்வொரு முறையும் பேயாக நடிப்பதால் மூச்சு வாங்கி கோபத்தில் பேச வேண்டும். மூச்சு வாங்கும்போதுதான் கோபம் வரும். அப்படி, அடிக்கடி மூச்சு வாங்கி நடித்து எனக்கு தலை சுத்தலே வருவதுபோல் இருக்கும். இவ்வளவும் கடினமாக இருந்தாலும் சித்ரா கேரக்டரில் நடிப்பதால் தைரியமே வந்துவிட்டது.

image

உங்களுக்குப் பிடித்த  ஹீரோ?

நான் சிம்பு ஃபேன். எதனால பிடிக்கும்னு காரணமே தெரியாது. ஆனால், சிம்புவை ரொம்ப பிடிக்கும். சிம்புமீது தனி க்ரஷ் உண்டு. அதற்கடுத்து விஜய் சேதுபதி பிடிக்கும். விஜய் சேதுபதியை பிடிக்க காரணம் அவரது நடிப்புத்தான். ரொம்ப கேஷுவலாக நடித்துவிட்டுச் செல்வார். அதுமட்டுமல்ல, அவருக்கு ஜோடியாக ஒரு குறும்படத்திலும் நடித்திருக்கிறேன். என் முதல் ஹீரோ அவர்தான்.

- வினி சர்பனா

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close