[X] Close >

ஈக்கோ பிரென்ட்லி ஹோம்: சுற்றுச்சூழலின் நண்பராக வாழ்வோம்!

Lets-live-in-eco-friendly-homes-to-protect-environment

நாம் வாழும் பூமி, எண்ணற்ற சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறது என்பதைக் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். காடுகள் அழிந்து வருகின்றன. மரங்கள் குறைந்து வருகின்றன. நீர், நிலம், காற்று அனைத்தும் மாசுபடுகின்றது. இந்நிலையில் நமது வாழ்க்கையை, சுற்றுச்சூழலைப் பாதிக்காதவாறு மாற்றிக் கொள்ள வேண்டும். அதில் நாம் வாழும் வீட்டை இயன்றவரை ஈக்கோ பிரென்ட்லியாக மாற்றிக் கொள்வது இன்றியமையாதது. Destruction இல்லாமல் Construction இல்லை. ஆனாலும் முடிந்தவரை இயற்கையை அழிக்காமல் கட்டடங்கள் கட்ட வேண்டும். சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத மாற்று வகைக் கட்டடங்கள் கட்ட மனதைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். வெப்பத்தை உமிழும் கட்டட முறையிலிருந்து குளிர்ச்சியான, காற்றோட்டமான ஈக்கோ பிரென்ட்லி கிரீன் ஹவுஸுக்கு மாறும் வழிமுறைகளைப் பார்க்கலாம்.


Advertisement

அமைவிடம்

எந்த இடத்தில் வீட்டைக் கட்டப் போகிறீர்கள் என்பது முக்கியமானது. முதலில் மேற்கு நோக்கி வீடு கட்டுவதைத் தவிர்க்க வேண்டும். இது சூரியனுடைய வெப்பக்கதிர்களிலிருந்து பாதுகாத்து வீட்டைக் குளிர்ச்சியாக வைக்க உதவும். இரண்டாவது, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர் தாக்காத இடமாகப் பார்த்து கட்ட வேண்டும். அடுத்து தேவையான பொருட்கள் அருகிலேயே கிடைக்கிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் எல்லாவற்றுக்கும் வாகனத்தை எடுத்துக் கொண்டு நீண்ட தூரம் போய்வர வேண்டியிருக்கும்.


Advertisement

சிறியதே சிறப்பு

தேவைக்கு அதிகமாக வீட்டை பெரிதாகக் கட்டுவதும் தேவையற்றது. பெரிதாகக் கட்டுவதால் பணமும் அதிகமாக செல்வாகும். வீடும் அதிகமாக உஷ்ணமடையும். பெரிய வீட்டை குளிர்ச்சியாகப் பராமரிப்பதற்கும் அதிக செலவாகும்.

ஆற்றலை வீணாக்காத பொருட்கள்


Advertisement

எனர்ஜி ஸ்டார் லேபிள் பதித்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவது நல்லது. எனர்ஜி ஸ்டார் லேபிள் பதித்த பொருட்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் (Environmental Protection Agency - EPA) அனுமதி பெற்றவை. இவை, அதிகமாக ஆற்றலை வீணாக்குவதில்லை என்பதோடு குறைந்த விலையிலும், நல்ல தரத்திலும் கிடைக்கின்றன.

காற்றோட்டம்

காற்றோட்டம் இல்லாத வீட்டில் இருப்பதே பல வகையான உடல் மற்றும் மன ரீதியான சிக்கல்களுக்கு காரணமாகிவிடும். காற்றோட்டமில்லாத வீடு எளிதில் சூடாகிவிடும். காற்றும், வெளிச்சமும் வீட்டுக்கு மிக முக்கியம். எனவே அதற்கு ஏற்றவாறு வீட்டின் ஜன்னல்களை அமைக்க வேண்டும்.

மறுசுழற்சி

சுற்றுச்சூழலுக்கு பங்கம் விளைவிக்கும் பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும். மீண்டும் பயன்படுத்தத் தகுந்த பொருட்களை வீணாக்காமல் மீண்டும் உபயோகிக்கலாம். மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்பட்ட கண்ணாடி கிளாஸ், அலுமினிய பொருட்கள், டைல்ஸ், கம்ப்ரஸ்டு வுட் எனப்படும் மரத்தூளால் ஆன பொருட்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

சோலார் பேனல்ஸ்

சோலார் ஒரு சுத்தமான மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்பதால் ஆண்டு முழுவதும் போதுமான அளவு மின்சாரம் கிடைத்துவிடும். சோலார் பேனல்கள் அமைப்பது கொஞ்சம் கூடுதல் செலவு செய்வதைப் போன்று தோன்றும். ஆனால் நீண்டகால பயனாகவும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது பொருளாதார ரீதியில் சேமிப்பாகவும் இருக்கும்.

மழைநீர் சேகரிப்பு

வீட்டின் கூரை அல்லது மாடியின் மீது விழும் தண்ணீரை சேமிக்க, மழைநீர் சேகரிப்பு தொட்டிகளையும், நிலத்தடி நீர் அதிகரிக்க கூழாங்கல் பாத்திகளையும் அமைக்க வேண்டும். மழைநீர் சேகரிப்பு மூலம் சேகரிக்கப்பட்ட நீரை, வீட்டின் அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். வீட்டின் ஓரங்களில், நீர் தேங்கும் இடங்களில், மழை நீரை உறிஞ்சும் வண்ணம் மழைநீர் சேகரிப்பு குழிகள் அமைக்க வேண்டும்.

மரம் வளர்ப்பு

சிறந்த கிரீன் ஹவுஸுக்கு வீட்டில் மரங்கள் வளர்ப்பது முக்கியம். உங்கள் வீடு அமைந்துள்ள இடத்தின் நிலத்தோற்றம், மண்வளம், தண்ணீர் வசதி, இடவசதி ஆகியவற்றைப் பொறுத்து மரங்களைத் தேர்வு செய்யலாம். வீட்டைச் சுற்றிலும் மரங்கள் இருக்கும்போது அதிக அளவில் ஆக்ஸிஜன் கிடைக்கும். குறிப்பாக வீட்டின் தெற்கு மற்றும் மேற்குப் பக்கமாக நன்கு நிழல் தரும் மரங்கள் வைத்தால் வீடு குளிர்ச்சியாக இருக்கும்.

-வீரமணி பன்னீர்செல்வம்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close