[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

100வது நாளை எட்டும் ஸ்டெர்லைட் போராட்டம்

sterlite-protest-cross-100-days

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி தூத்துக்குடியில் ஒரு கிராமமே அமைதியான முறையில் 100 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. 

குமரெட்டியார்புரம், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள குக்கிராமம். இந்தக்கிராம மக்கள் தங்களின் வாழ்வாதாரமும் தங்களது உடல் ஆரோக்கியமும் ஸ்டெர்லைட் ஆலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி போராடி வருகின்றனர். தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுப்படுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக கூறிக் கிராமமக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்நிலையில் வேதாந்தா குழுமம் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை மேற்கொள்ள இருந்தது. இது கும்ரெட்டியார்புரம் அருகே அமைய இருந்ததால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் உயிர்வாழ தகுதியற்ற நிலை ஏற்படும் என கிராம மக்கள் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

இதனைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்ட கிராம மக்கள் அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர் பூங்கா முன்பாகக் கூடி விடிய விடிய போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி பிற்பகல் கிராமத்தினர் உட்பட 231 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து விடுவிக்கப்பட்ட குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தங்களது கிராமத்தில் மரத்தடி நிழலில் போராட்டத்தை அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தூத்துக்குடியை அதிர வைத்த போராட்டம்

மார்ச் 24ஆம் தேதி குமரெட்டியார் கிராமமக்களுக்கு ஆதரவாக முழக்கடையடைப்பு போராட்டம் நடைப்பெற்றது. இதனையடுத்து மாலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 20,000-க்கும் அதிகமானோர் பங்கேற்றதால் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தூத்துக்குடியை அதிர வைத்தது.

லண்டன் தமிழர்களின் அதிரடிமார்ச் 26ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக லண்டன் வாழ் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். லண்டனில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையின் இயக்குநர் அனில் அகர்வாலின் வீட்டின் முன்பு  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்டெர்லைட் விளக்கம்


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் தொடர்பாக பிபிசி தமிழுக்கு ஸ்டெர்லைட் நிறுவனத்தின் அசோசியேட் துணைத் தலைவர் சுமதி விளக்கமளித்தார். அதில் ஸ்டெர்லைட் நிறுவனம் மிகவும் பாதுகாப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலிருந்து எடுக்கப்படும் காப்பரை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என நினைத்து செயல்படுகிறோம். ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு கேன்சர் வருவதாக வதந்தி நிலவுகிறது. அதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். ஆதாரமின்றி மக்கள் இதை நம்பக்கூடாது. இந்திய அளவில் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ள இடங்களின் பட்டியலில் தூத்துக்குடி இடம் பெறவில்லை. இந்தத் தகவல்களையும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

வாயுக்கசிவால் சிலர் இறந்தது எங்கள் கம்பெனியால் இல்லை என்பதை நாங்கள் மாசுக்கட்டுப்பாடு நிபுணர்கள் மூலம் நிரூபித்தோம். அத்துடன் மிகவும் பாதுகாப்பாகத் தான் எங்கள் நிறுவனம் இயங்குகிறது. அதற்காக உலக தரம் வாய்ந்த அமைப்புகள் எங்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. நாங்கள் அனைத்து தகவல்களையும் வெளிப்படையாக கூறுகிறோம்.மக்களுக்கு குழப்பங்கள் இருக்கக்கூடாது என்பதற்காக சனிக்கிழமை தோறும், கம்பெனிக்குள் மக்கள் பார்வையிட அனுமதிக்கின்றோம்.வெளிநாட்டு அரசுசார நிறுவனங்கள் நிதி ஒதுக்கி போராட்டங்களை நடத்த செய்கின்றன. தூத்துக்குடியிலும் அந்த வெளிநாட்டு நிறுவனங்கள் நிதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் மக்களை தூண்டிவிட்டு போராட்டங்களை நடக்கச்செய்கின்றனர் என்று கூறினார்.

தாய்ப்பால் கொடுக்க முடியல. மாத்திரையைத்தான் குழந்தைகளுக்கு கொடுக்கிறோம்

ஸ்டெர்லைட் ஆலையால் தாய்ப்பால் தரவேண்டிய குழந்தைகளுக்கு நோய் பாதிப்பால் தினமும் மருந்து மாத்திரையை கொடுக்க நேரிடுவதாக பெண்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.எல்லா குழந்தைகளும் காலையில் எழுந்தவுடன் காஃபி குடிக்கும். ஆனால் எங்கள் குழந்தைக்கு சங்கெடுத்து மாத்திரை தான் கொடுக்க வேண்டும். எங்களுடைய காலம் முடிந்துவிட்டது என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் எங்கள் குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்..? ஸ்டெர்லைக்கு ஆதரவாக கூட சிலர் பேசுகின்றனர். அவர்கள் எங்கள் குழந்தைகள் குறித்து குறைந்தப்பட்சம் ஒரு நிமிடமாவது யோசித்து பார்க்க வேண்டாமா..? நாசமாக போகும் ஸ்டெர்லைட் எங்களுக்கு வேண்டவே வேண்டாம். எங்கள் குழந்தைகளின் சாவை நாங்கள் யாரும் பார்க்க விரும்பவில்லை என்றனர்.

கல்யாணம் ஆன கையோடு, போராடிய தம்பதி..தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா ஆலயத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, இரண்டாவது நாளாக போராட்டம் நடைப்பெற்று வருகிறது. ஆலய வளாகத்தில் பந்தல் அமைத்து கருப்புக்கொடி கட்டி, மக்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் தூத்துக்குடி சின்னக்கோவில் சர்ச்சில் ஜோசப் மற்றும் ஷைனி ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த புதுமண தம்பதியினர் இருவரும், வீட்டிற்கு செல்லாமல் நேரடியாக போராட்டக்களத்திற்கு சென்றனர். அந்த தம்பதியினரை பார்த்த போராட்டக்காரர்கள், உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் புதுமண தம்பதியினர் இருவரும் கையில் பதாகைகளையுடன், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதன் காரணமாக தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமாரரெட்டியார்புரம் கிராம மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது. இதனைதொடர்ந்து அப்பகுதி மக்கள் இன்று ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகி‌றது. இந்நிலையில் ஆட்சியர் உத்தரவின்பெயரில், தென்பாகம் மற்றும் சிப்காட் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு 10 மணி முதல் நாளை காலை 8 மணிவரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close