[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

2019 தேர்தலில் அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் நிலை என்ன?

candidates-of-ammk-mnm-ntk-lose-deposit-in-all-ls-constituencies

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 21 தொகுதிகளில் 3ம் இடம் பிடித்துள்ளது. முதல் முறையாக தேர்தல் களம் கண்ட மக்கள் நீதி மய்யம் 11 இடங்களில் 3ம் இடத்தை பிடித்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் அமமுக, மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை வாக்குகளை பிரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தேர்தல் முடிவுகளில் இந்த மூன்று கட்சிகளும் சேர்த்து சுமார் 12.5 சதவிகிதம் வாக்குகளை பெற்றுள்ளன. இதில் அமமுக மட்டும் 5.19 சதவிகிதம் வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 3.88 சதவிகித வாக்குகளையும், மக்கள் நீதி மய்யம் 3.71 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளன.

அமமுக 37 தொகுதிகளில் போட்டியிட்டு 21 தொகுதிகளில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. 7 இடங்களில் 4ஆம் இடத்தையும், 9 தொகுதிகளில் 5வது இடத்தையும் பெற்றுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு மதுரை, தேனி, சிவகங்கை, தஞ்சை, விருதுநகர், திருச்சி போன்ற சில தொகுதிகளில் 8 சதவிகிதம் முதல் 13 சதவிகிதம் வரை வாக்குகளை பெற்றிருக்கிறது.

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 36 தொகுதிகளில் போட்டியிட்டு தமிழகத்தில் பதிவான வாக்குகளில் 3.71 சதவிகிதம் வாக்குகளை பெற்றுள்ளது. அந்தக் கட்சி 11 தொகுதிகளில் 3ம் இடத்தையும் பிடித்துள்ளது. 4 தொகுதிகளில் 4வதாகவும், 21 தொகுதிகளில் 5வதாகவும் மக்கள் நீதி மய்யம் வந்துள்ளது. மக்கள் நீதி மய்யத்திற்கு சென்னையின் மூன்று தொகுதிகளிலும், கோவையிலும் பத்து சதவிகிதத்திற்கு மேல் வாக்குகளை பெற்றுள்ளது. எனினும் 10 தொகுதிகளில் அந்தக் கட்சி 2 சதவிகிதத்திற்கும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது.

சீமான் தலைமையில் செயல்பட்டு வரும் நாம் தமிழர் கட்சி 37 தொகுதிகளில் போட்டியிட்டு மொத்தம் பதிவான வாக்குகளில் 3.88 சதவிகிதம் வாக்குகளை பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சி 6 தொகுதிகளில் மூன்றாவது இடத்தையும், 27 தொகுதிகளில் நான்காம் இடத்தையும் பிடித்துள்ளது. தருமபுரி, கன்னியாகுமரி உள்ளிட்ட சில தொகுதிகளைத் தவிர நாம் தமிழர் கட்சிக்கு பெரும்பாலான தொகுதிகளில் 3 முதல் 6 சதவிகிதம் வரை வாக்குகள் கிடைத்துள்ளன.

அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் கணிசமான வாக்குகளை பெற்றாலும் போட்டியிட்ட மக்களவைத் தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒரு வேட்பாளர் டெபாசிட்டை தக்க வைக்க வேண்டுமென்றால் 16.66% ஓட்டுகளை பெற வேண்டும். அல்லது தொகுதிகளில் பெற்ற மொத்த வாக்குகளில் 6ல் ஒரு பங்கை பெற வேண்டும். இதன் அடிப்படையில் பார்த்தால்  அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சி வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர். தேமுதிக வேட்பாளர்களான திருச்சி இளங்கோவன் 15.46% ஓட்டுகளை பெற்றும், அழகப்புரம் மோகன்ராஜ் 13.55% ஓட்டுகள் பெற்றும் டெபாசிட் இழந்துள்ளனர்.

ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவை தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட்ட சுந்தர்ராஜ் மட்டுமே 17.15% ஓட்டுகளை பெற்று டெபாசிட்டை தக்கவைத்துள்ளார். பாமக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவி இருந்தாலும் அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட்டை தக்கவைத்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close