[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS வரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்
  • BREAKING-NEWS ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

'ஏமாற்றிவிட்டார் மோகன்லால்': மலையாள நடிகைகள் போர்க்கொடி!

mohanlal-slammed-over-handling-of-actress-kidnapping-case-by-amma

நடிகர் திலீப் விவகாரத்தில் மலையாள நடிகர் சங்கத் தலைவர் மோகன்லால் ஏமாற்றி விட்டார் என்று மலையாளத் திரைப்பட பெண்கள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

கேரளாவில் பிரபல நடிகை ஒருவர் 2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இதையடுத்து மலையாள நடிகர் சங்கமான ’அம்மா’வில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இந் நிலையில் ’அம்மா’வின் தலைவராக இருந்த இன்னசென்ட் பதவியில் இருந்து விலகியதை அடுத்து மோகன்லால் தலைவாரானார். அவர் பதவியேற்றதும்  திலீப்பை  சங்கத்தில் மீண்டும்  சேர்த்தனர்.

இந்த முடிவுக்கு ரேவதி, பார்வதி, பத்மப்பிரியா, ரீமா கல்லிங்கல் உள்ளிட்ட திரைப்பட பெண்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்தனர். சில நடிகைகள் நடிகர் சங்க பொறுப்பில் இருந்தும் விலகினர். இதையடுத்து திலீப்பை மீண்டும் சேர்ப்பது பற்றிய தங்கள் முடிவை ’அம்மா’ மாற்றியது. இந்நிலையில் நடிகர் திலீப், ‘நிரபராதி என்று நிரூபித்துவிட்டு சங்கத்தில் இணைகிறேன்’ என்று கூறினார். 

திலீப்பை சங்கத்தில் சேர்க்க தீர்மானம் நிறைவேற்றியதற்கு விளக்கம் அளிக்கும்படி ரேவதி, பார்வதி, பத்மபிரியா, ரீமா கல்லிங்கல் ஆகியோர் நடிகர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பினர். இரண்டு கடிதங்கள் அனுப்பியும் அதற்கு பதில் வரவில்லை என்று நடிகைகள் கண்டித்தனர்.

 இதுகுறித்து ரேவதி கூறும்போது, ‘நடிகர் சங்கத்தில் திலீப் இருக்கிறாரா? இல்லையா? என்பதை சங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்று விளக்கம் கேட்டோம். இதுவரை பதில் இல்லை. பாலியல் விவகாரங்களில் ஈடுபடும் சங்க உறுப்பினர்களின் குற்றம் நிரூபிக்கப் பட்டால் அவர்களை நிரந்தரமாக நீக்க சங்க விதியில் திருத்தம் கொண்டு வரும்படி கோரினோம். அதற்கும் இதுவரை பதில் இல்லை’ என்றார்.

திலீப் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால் அதன் அடிப்படையில் அவரை சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் மூன்றாவது கடிதம் ஒன்றையும் நடிகைகள் ’அம்மா’வுக்கு அனுப்பினர்.

இதற்கிடையே மலையாள நடிகர் சங்கத்தின் செயற்குழு குழு கூட்டம் கொச்சியில் நடந்தது. இதில் திலீப்புக்கு எதிராக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. திரைப்படப் பெண்கள் கூட்டமைப்பினர் விடுத்த கோரிக்கை பற்றியும் இதில் பேசவில்லை என்று கூறப்படுகிறது.

‘நடிகர் திலீப் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சட்டரீதியான ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. அது தெரிய வந்ததும் திரைப்பட பெண்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த நடிகைகளுக்கு பதில் அனுப்பி வைக்கப்படும். பொதுக்குழு கூடும் வரை அவர்கள் அமைதிகாக்க வேண்டும்’ என்று ’அம்மா’ செயற்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில், மலையாள திரைப்படப் பெண்கள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் கொச்சியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். இதில் பீனா பால், அஞ்சலி மேனன், ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன், தீதி தாமோதரன், சஜிதா மடத்தில் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய இவர்கள், ’புதிய தலைவரான மோகன்லால் மீதான நம்பிக்கை போய்விட்டது. ’அம்மா’ எங்களை ஏமாற்றி வருகிறது’ என்றனர்.

நடிகை ரேவதி கூறும்போது, ‘எந்த சங்கமாக இருந்தாலும் ஒருவர் மீது குற்றவழக்கு நிலுவையில் இருந்தால் அவரை இடைநீக்கம் செய்வதுதான் முதல் நடவடிக்கை. அப்போதுதான் சங்கம் ஒருதலைபட்சமாக செயல்படவில்லை என்பது தெரியவரும். ஆனால் விதிகளை காரணம் காட்டி அநியாயமாக செயல்படுகிறார்கள். குற்றவாளிகளை காப்பாற்றி சங்கத்தில் வைத்திருக்க முயல்கிறார்கள். ஒரு முறை, 17 வயதுப்பெண் ஒருவர் இரவு 11.30 மணிக்கு எனது அறைக்கதவை தட்டி தன்னை காப்பாற்றும்படி கெஞ்சினார். இனி இதுபோல் யாருக்கும் நடக்கக்கூடாது. மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் பேசுகிறோம். ’ என்றார்.

நடிகை பத்மப்பிரியா கூறும்போது, ‘பாலியல் தொல்லை பற்றியும் புகார் கொடுத்தும் நீதிமறுக்கப்பட்ட கதைகளும் மலையாள சினிமாவில் இருந்து விரைவில் வெளிவரும்’ என்றார். 

நடிகர் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி உயர்த்தி இருப்பது ’அம்மா’வுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close