Published : 22,Jul 2017 03:04 PM
பாலியல் வன்கொடுமை புகாரில் கேரளா காங்கிரஸ் எம்எல்ஏ கைது

கேரளாவில் பாலியல் வன்கொடுமை புகாரில் காங்கிரஸ் எம்எல்ஏ வின்சென்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவின் கோவளம் தொகுதி எம்எல்ஏவாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வின்சென்ட் உள்ளார். அவர் மீது அப்பகுதியை சேர்ந்த ஒருவர் போலீசில் புகார் அளித்திருந்தார். அப்புகாரில் எம்எல்ஏ வின்சென்ட் தன் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததன் காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, அந்தப் பெண்ணை விசாரித்த போலீசார், எம்எல்ஏ மீது வழக்கு பதிவு செய்தனர். தன் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள வின்சென்ட், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தன்மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், எம்எல்ஏ வின்சென்ட் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினரை தொலைபேசிமூலம் மிரட்டிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் எம்எல்ஏவின் தொலைபேசி விவரங்களை பரிசோதித்த போலீசார் அவர் கடந்த சில மாதங்களாக அப்பெண்ணுடன் தொலைபேசியில் பேசிவந்திருப்பதை கண்டுபிடித்தனர்.