[X] Close

'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?

சிறப்புக் களம்,தமிழ்நாடு,தேர்தல் களம்

Whether-Sasikalas-political-strategy-has-begun

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற ஜெயலலிதாவின் தோழி சசிகலா விடுதலையாகி, கடந்த ஜனவரி 27ஆம் தேதி வெளியே வந்தார். அதன்பின்னர் தமிழகம் வந்த சசிகலா எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். அவர் வருவதற்கு முன்னரே ஜெயலலிதாவின் நினைவிடம் அவசரம் அவசரமாக தமிழக அரசால் மூடப்பட்டது. ஆனால், சசிகலா வரும் வழியிலேயே பேட்டி கொடுத்தார்.

அப்போது “தீவிர அரசியலில் ஈடுபட உள்ளேன். தொண்டர்களின் அன்புக்கும், மக்களின் அன்புக்கும் நான் எப்போதுமே அடிமை. எம்ஜிஆர் கூறியதைப்போல, ‘அன்புக்கு நான் அடிமை, தமிழ்ப் பண்புக்கும் நான் அடிமை, கொண்ட கொள்கைக்கும் நான் அடிமை’, தமிழ் மக்களுக்கும், தொண்டர்களுக்கும் என்றுமே நான் அடிமை’. அடக்குமுறைக்கு என்றுமே நான் அடிபணிய மாட்டேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் அவசர, அவசரமாகத் திறக்கப்பட்டது. அதன்பிறகு அதே அவசர கதியில் மூடப்பட்டது ஏன் என்பது தமிழக மக்களுக்குத் தெரியும். என் வாகனத்தில் அதிமுக கொடியைப் பயன்படுத்துவது தொடர்பாக அமைச்சர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்திருப்பது அவர்களது பயத்தைக் காட்டுக்கிறது.

image


Advertisement

அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டும். எத்தனையோ முறை அதிமுக சோதனைகளைச் சந்தித்திருக்கிறது. அப்போதெல்லாம் ஃபீனிக்ஸ் பறவைபோல மீண்டு எழுந்து வந்துள்ளது கட்சி. ஜெயலலிதா வழி வந்த பிள்ளைகளாகிய நாம் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே என் விருப்பம். மீண்டும் ஆட்சியில் அமரக்கூடாது என ஒரு கூட்டம் தனியாகச் செயல்படுகிறது. அதை முறியடிக்க வேண்டும். மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டும்” என்றார் சசிகலா.

பின்னர், சசிகலா சென்னை வந்ததும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என பலரும் அவரை சந்திக்க வருவார்கள் என எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், இதுவரை யாரும் அவரை வந்து சந்திக்கவில்லை. ஒரு சிலர் மட்டும் போனில் பேசியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் பேசிய சசிகலா, “நான் கொரோனாவில் இருந்தபோது கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் எல்லோருடைய வேண்டுதலாலும் நலம் பெற்று தமிழகம் வந்தேன். ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும். இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக ஆட்சி இருக்கும் என்று ஜெயலலிதா சொல்லிவிட்டு சென்றார். அதை மனதில் வைத்து அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன். நானும் அதற்கு உறுதுணையாக நிற்பேன்” எனத் தெரிவித்தார்.

image

இதுகுறித்து பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் கூறுகையில், “இதை சசிகலா இரண்டாவது முறையாக கூறுகிறார். ஏற்கெனவே அவர் விடுத்த அழைப்பை அதிமுக நிராகரித்தது. திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க இந்த இணைப்பில் ஆர்வம் காட்டி வருகிறார் என்ற செய்தி அதிமுகவினர் மத்தியில் பரவட்டும் என்ற நோக்கத்தோடு அவர் சொல்லியிருக்கலாம். ஆனால் அதிமுகவில் இரண்டு பிரச்னைகள் இருக்கின்றன. ஒருதரப்பினர் சசிகலா குடும்பத்தினரோடு எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது. மீண்டும் ஒரு குடும்பத்தின் கையில் கட்சி சென்றுவிடும் என எண்ணுகின்றனர். மற்றொரு தரப்பினர், அதிமுக தேர்தல் வெற்றிக்கு உதவக்கூடிய ஒரு நடவடிக்கை. அமமுகவை அதிமுகவுடன் சேர்க்க வேண்டும் என எண்ணுகின்றனர். ஆனால் அவர்கள் குரல் இதுவரை எடுபடாமல் இருக்கிறது. அவர்களை நோக்கி சசிகலா தன் முகத்தை திருப்பியுள்ளார்.

இப்போது இல்லையென்றாலும் சீட் ஒதுக்கீட்டிற்கு பிறகு சசிகலா பக்கம் சிலர் செல்வார்கள். அப்போது சலசலப்பு ஏற்படும். அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தோடுதான் நான் இருக்கிறேன் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தவே இவ்வாறு பேசியிருக்க வேண்டும். சசிகலாவின் அழைப்பு அதிமுகவினருக்குதான்” எனத் தெரிவித்தார்.

image

இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் “ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்தால் வெற்றி பெற முடியும் என்பதை திரும்ப திரும்ப அவர் உணர்த்துகிறார். ஆனால் ஆளும்தரப்பு அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே சசிகலா அடுத்த அரசியல் முடிவு எடுக்க வேண்டும். அதற்கான தொடக்கம்தான் இது என்று பார்க்கிறேன். எத்தகைய அரசியல் முடிவு எடுத்தாலும் திமுகவுக்கு துணை போனதாகத்தான் விமர்சனங்கள் பிற்காலத்தில் எழும். அதை தவிர்க்கவே மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.

ஒன்றாக இருந்தால் மட்டுமே தேர்தலை வெற்றி கொள்ள முடியும் என்ற அரசியல் சூத்திரத்தைத்தான் சசிகலா பேட்டி வாயிலாக உணர்த்துகிறார். 1989-ல் என்ன நடந்ததோ அது மீண்டும் நடந்துவிடக்கூடாது என சசிகலா எச்சரிப்பதாகவே நான் பார்க்கிறேன். 1989-ல் ஜெயலலிதா தனி அணியாக இருந்தபோது அவரின் அனைத்து வியூகங்களுக்கு பின்னால் சசிகலா இருந்தது அனைவருக்கும் தெரியும். அதே கசப்பான நிலை மீண்டும் வந்துவிடக்கூடாது என அதிமுகவினருக்கு சுட்டிக்காட்டுகிறார் என்பதுதான் எனது கருத்து” என்று தெரிவித்தார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close