ஒரே ஆட்டம்.. 2 பேருக்கு முடிவுகட்டிய PANT! இறுதிவரை அனல்பறந்த போட்டி! நூலிழையில் தோற்ற GT!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது டெல்லி கேபிடல்ஸ் அணி.
gt vs dc
gt vs dccricinfo

இரண்டு பேருக்கு முடிவுகட்டிய பண்ட்..

கடைசி பந்துவரை சென்று முடியும் விறுவிறுப்பான போட்டிகளை விருந்தாக படைப்பது ஐபிஎல்லில் அடிக்கடி நடக்கக்கூடியது. அந்த ஒரே போட்டியில் மட்டும் ஒரு வீரர் சூப்பர் ஹீரோவாகவும், ஒரு வீரர் ’இனி என் கிரிக்கெட் வாழ்க்கையே போச்சு’ எனுமளவு மோசமான ஒரு முடிவை எட்டி ஜீரோவாகவும் மாறுவார்கள். ஆனால் இன்றைய ஒரே போட்டியில் இரண்டு வீரர்களின் எதிர்காலத்திற்கும் முடிவுகட்டியுள்ளார் டெல்லி அணியின் அதிரடி வீரர் ரிஷப் பண்ட்.

பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பை வலுவாக்கும் முக்கியமான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் பந்துவீச்சை தேர்வுசெய்ய, டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

அதிரடியில் மிரட்டிய அக்சர், பண்ட்..

ஜேக் பிரேசர் அணிக்குள் வந்தபிறகு நல்ல பேட்டிங் வரிசையை வைத்திருக்கும் அணியாக மாறியிருக்கும் டெல்லி அணி, தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரித்வி ஷா மற்றும் பிரேசர் இருவரும் 4 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என பறக்கவிட்டு வலுவான தொடக்கம் கொடுத்தாலும், அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய குஜராத் அணி பதிலடி கொடுத்தது. 3வது விக்கெட்டுக்கு களத்திற்கு வந்த சாய் ஹோப்பும் சொற்ப ரன்னில் வெளியேற, 44 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்த டெல்லி அணி தடுமாறியது.

axar patel
axar patel

முக்கியமான தருணத்தில் அணியை மீட்டுவர போராடிய கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் அக்சர் பட்டேல் இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி ரன்களை எடுத்துவந்தனர். 5 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் என வெளுத்துவாங்கிய அக்சர் பட்டேல் “இவ்வளவு நாளா பெரிய ஹிட்டர்னு தெரியாம போச்சே’ எனுமளவு 66 ரன்களை குவித்து கலக்கிப்போட்டார்.

pant
pant

கடைசிநேரத்தில் பேட்டிங்கில் ஒரு சூறாவளியையே கிளப்பிய ரிஷப் பண்ட், யார் பந்துவீசினாலும் கிரவுண்டுக்கு வெளியே பந்தை பறக்கவிட்டு மிரட்டிவிட்டார். 1000வாலா சரவெடி போல் வெடித்துச்சிதறிய ரிஷப் பண்ட், மோஹித் சர்மா வீசிய ஒரே ஓவரில் 4 சிக்சர்கள், 1 பவுண்டரி என பறக்கவிட்டு 31 ரன்கள் குவித்து, ஒரு மோசமான சாதனைக்கு மோஹித் சர்மாவை அழைத்துச்சென்றார். இறுதியாக களத்திற்கு வந்த ஸ்டப்ஸும் அவருடைய பங்கிற்கு 3 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்ட, 224 ரன்கள் என்ற அபாரமான டோட்டலை பதிவுசெய்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.

mohit sharma
mohit sharma

4 ஓவரில் 73 ரன்களை விட்டுக்கொடுத்த மோஹித் சர்மா ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பவுலர் என்ற மோசமான சாதனையை படைத்தார்.

தூணாக நின்ற தமிழக வீரர் சாய்சுதர்சன்!

225 ரன்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில், கேப்டன் சுப்மன் கில் விரைவாகவே வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் என்னதான் கில் வெளியேறினாலும், களத்திலிருந்த ரிதிமான் சாஹா மற்றும் தமிழக வீரர் சாய் சுதர்சன் இருவரும் போட்டியை விட்டுக்கொடுக்காமல் அடுத்தடுத்து பவுண்டரி சிக்சர்களாக விரட்டிக்கொண்டே இருக்க, டைட்டன்ஸ் அணி போட்டியை உயிர்ப்புடன் வைத்திருந்தது. அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட, களத்திற்கு வந்த குல்தீப் யாதவ் சாஹாவை வெளியேற்றி பிரித்துவைத்தார். உடன் 7 பவுண்டரிகள் 2 சிக்சர்களை பறக்கவிட்டு 65 ரன்களுடன் களத்திலிருந்த சாய் சுதர்சனும் அவுட்டாகி வெளியேற, தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்த டைட்டன்ஸ் அணி தடுமாறியது.

sai sudharsan
sai sudharsan

என்ன தான் விக்கெட்டுகளாக விழுந்தாலும், மறுமுனையில் சிக்சர் பவுண்டரிகளாக விரட்டிக்கொண்டே இருந்த டேவிட் மில்லர் 23 பந்தில் 55 ரன்களை எடுத்துவந்து கலக்கிப்போட்டார். முக்கியமான நேரத்தில் மில்லரை முகேஷ் குமார் வெளியேற்ற, கடைசி 2 ஓவருக்கு 37 ரன்கள் தேவையென போட்டி மாறியது. 19வது ஓவரில் ரசீத் கான் தூக்கியடித்து சிக்சருக்கு சென்ற பந்தை ஒரு அசாத்தியாமான ஃபீல்டிங்கால் தடுத்து நிறுத்திய ஸ்டப்ஸ், டெல்லி அணியை முக்கியமான நேரத்தில் காப்பாற்றினார். ஆனால் அதேஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்கவிட்ட தமிழக வீரர் சாய் கிஷோர் போட்டியில் மீண்டும் உயிரை எடுத்துவந்தார்.

கடைசிபந்தில் வெற்றியை பறித்த டெல்லி..

அந்தப்பக்கமா இந்த பக்கமா என மாறிய போட்டியில், கடைசி 6 பந்துக்கு 19 ரன்கள் என போட்டி மாற, இறுதிவரை களத்திலிருந்த ரசீத் கான் முதலிரண்டு பந்துகளில் பவுண்டரிகளை விரட்ட ஆட்டம் அனல் பறந்தது. அடுத்த இரண்டு பந்துகளை டாட் பந்தாக வீசிய முகேஷ் குமார் கம்பேக் கொடுக்க, 5வது பந்தில் சிக்சரை பறக்கவிட்ட ரசீத் கான் டெல்லி அணிக்கு பயத்தை காட்டினார்.

கடைசி 1 பந்துக்கு 5 ரன் தேவையாக மாற, சூப்பர் ஓவரா? டெல்லியா? குஜராத்தா? என ரசிகர்களுக்கு ஹார்ட் பீட் எகிறியது. ஆனால் கடைசி பந்தை சூப்பராக வீசிய முகேஷ் குமார் டெல்லி அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

இரண்டு பேருக்கு முடிவுகட்டிய பண்ட்..

பேட்டிங் மற்றும் கீப்பிங் இரண்டிலும் கலக்கிவரும் ரிஷப் பண்ட், தன்னுடைய அதிரடியான ஆட்டத்தின் மூலம் “மோஹித் சர்மா மற்றும் தினேஷ் கார்த்திக்” இருவரின் ஓய்வையும் உறுதிசெய்யும் ஒரு வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

dk
dk

தினேஷ் கார்த்திக் டி20 உலகக்கோப்பைக்கான அணியில் ரிஷப் பண்டுக்கு போட்டியாக மாறிய நிலையில், அதை தட்டிப்பறிக்கும் ஒரு ஆட்டத்தை பண்ட் பதிவுசெய்து அசத்தியுள்ளார். 9 போட்டிகளில் 342 ரன்களை பதிவுசெய்திருக்கும் பண்ட், அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார். இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது டெல்லி கேபிடல்ஸ் அணி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com